பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்களை தாண்டி போராட்டம் நடந்து வருகிறது. கபில் தேவ் உள்ளிட்டவர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
தற்போது, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வீரர், வீராங்கனைகள் நியாத்துக்காக வீதியில் இறங்கிப் போராடுவது என்னைக் காயப்படுத்துகிறது. நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இனி இம்மாதிரி சம்பவம் நடக்கவே கூடாது.
இது ஓர் உணர்வுபூர்வமான பிரச்சினை. இது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்பட வேண்டும். நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, “மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும்” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.