கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் ரின்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி நடந்த போட்டியின்போது கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளிலும்5 சிக்சர் அடித்து ரின்கு சிங் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் ரின்கு சிங் மீது கவனத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ரின்குவை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் ரின்கு சிங்கின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ரின்கு சிங்கிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பலரது கவனத்தையும் அவர் பெற்றிருக்கிறார். இன்றைக்கு கொல்கத்தா அணியின் முக்கிய ஆட்டக்காரராக மாறியுள்ளார். அவருக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் ஆதரவு அளித்து வருகிறது. விளையாட்டில் ரின்கு சிங்கிற்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. அவர் நிச்சயமாக இந்திய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் ரின்கு சிங் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். 40 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 2,875 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 59.89 ரன்களாக உள்ளது. இவற்றில் 7 சதங்களும் 19 அரைச் சதங்களும் அடங்கும். சிறந்த ஸ்கோர் 163 ரன்கள்.