கோடையில் இதுவரை இல்லாத அளவாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 501 இடங்களில் மழை பெய்துள்ளது. இதில் 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் கொட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வறுத்து எடுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
மே 1 மழை தினம்
கடந்த மே 1&ந் தேதியன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் கணித்து இருந்தது. அதன்படி அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இடி, மின்னல், காற்று இன்றி தொடர்ந்து ஒரே சீராக மழை கொட்டியது. மே 1 தொழிலாளர் தினமான அன்று மழை தினமாக மாறி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.
மழை பொழிந்த இடங்கள்
மே 1 காலை 8.30 முதல் மே 2 காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 501 இடங்களில் மழைப்பொழிவு இருந்தது கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த 501&லும் 60 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. 13 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.
கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 501 இடங்களில் மழை பதிவானதும், இப்படியொரு பெருமழையை கோடைகாலத்தில் தமிழகம் சந்தித்திருக்குமா என்பதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணினி சார்ந்த கணிப்புகளின் படி இந்த அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்த்தபடி, 100% துல்லியமாக நடந்திருக்கிறது.
நெல்லை மாவட்ட மழை நிலவரம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மே 1 பகலில் வெயில் அடித்த நிலையில் மதியம் 3 மணிக்கு பின்னர் திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.
நெல்லை மாநகரில் பாளை, வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், மேலப்பாளையம், சந்திப்பு, தச்சநல்லூர், டவுன் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் (மே2) நெல்லையில் மாலை 5 மணி முதல் இரவு வரையிலும் கனமழை கொட்டியது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டி, அம்பையில் தலா 30 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராதாபுரத்தில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று 143 அடி உயர பாபநாசம் அணையின் நீர்மட்டம் 16.70 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 1 அடி உயர்ந்து 17.50 அடியானது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 38.68 அடியாக இருந்த நிலையில் நேற்று 1 அடி உயர்ந்து 39.73 அடியானது.
கொடுமுடியாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு பகுதிகளில் மழை பெய்யவில்லை. அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் இல்லை.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகிரியில் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், மணியாச்சி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 55.3 மில்லிமீட்டரும், மணியாச்சியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 12 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கோவில்பட்டியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை
இன்று (மே 2) காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிக மழை அளவு வருமாறு:&
வானமாதேவி (கடலூர்) 187 மிமீ
சங்கரிதுர்க்கம் (சேலம்)-175 மிமீ
கதிர்வாக்கம் (சென்னை) -162 மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்)-153 மிமீ
சாத்தூர் (விருதுநகர்) -138 மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) -135 மிமீ
அரியலூர் (கள்ளக்குறிச்சி) -134 மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) -128 மிமீ
நந்தியாறு (திருச்சி)-125 மிமீ
எடப்பாடி (சேலம்) -122 மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) -120 மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) -120 மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) -117 மிமீ
பாடனூர் (தஞ்சாவூர்) -115 மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்)-112 மிமீ
கடலூர் (கடலூர்) 109 மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு)-109 மிமீ
தலுதலை (பெரம்பலூர்)-104 மிமீ
மணலி (சென்னை) 101 மிமீ
திருப்பூர் -100 மிமீ
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி)-95 மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம் )-85 மிமீ
காரைக்குடி (சிவகங்கை) -85 மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்)-83 மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி )-82 மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) -73 மிமீ
திற்பரப்பு (குமரி) -73 மிமீ
தக்கலை (கன்னியாகுமாரி) -72 மிமீ