(02-05-2023)
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல்கள் முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக கொண்டு வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான டீ.எம்.எஸ்.கே தசநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை(2) வீதி ரோந்து நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது முச்சக்கரவண்டி ஒன்றில் சுமார் 38 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள் 175 க்கும் அதிகமான மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ஒரு தொகுதி ஆகியன சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் 2 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி மற்றும் மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் பெறுமதியானவை எனவும் அளவிற்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பதுக்கி கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.