நீதிமன்றத்தில் வெடுக்குநாறி மலை விவகாரத்தில் தமிழர்களுக்கு வெற்றி கிடைத்த்திருக்கிறது. இந்த வெற்றியை சுமந்திரனின் விசுவாசிகள் ஒரு மகத்தான அடைவாகக் கொண்டாடுகிறார்கள்.சுமந்திரனும் வேட்டி உடுத்துக் கொண்டு வெறும் மேலோடு வெடுக்குநாறி மலைக்குப் போகிறார். ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னது போல பூணூல் அணியாத குறை.
சுமந்திரன் வெடுக்குநாறி மலை வழக்கில் பெற்ற வெற்றி அவருடைய வாத திறமையால் கிடைத்தது அல்லவென்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். தொல்லியல் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தால்தான் வழக்கில் சுமந்திரனுக்கு வெற்றி கிடைத்தது என்று கருதப்படுகிறது.தொல்லியல் திணைக்களம் அந்த விடயத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் என்பது ஓர் அரசியல் தீர்மானம் தான். அதேபோல இது நடந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் தையிட்டிப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் மிக உயரமான தாது கோபம் ஒன்றுக்கு கலசம் வைக்கப்பட்டதும் ஓர் அரசியல் தீர்மானம்தான்.
தையிட்டியில் வைக்கப்பட்ட கலசம் சூரிய ஒளியில் பிரகாசிக்கும் பொழுது வெடிக்குநாறி மலையில் பெற்ற வெற்றி மங்கிப் போகிறது என்பதே உண்மை. சுமந்திரனின் விசுவாசிகள் அதை ஒரு வழக்கு வெற்றியாக கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் சுமந்திரன் இந்த விடயத்தில் தானாக முன்வந்து இந்துக்களுக்கு உதவியிருக்கிறார் என்ற ஒரு தோற்றம் உருவாகப் பார்க்கின்றது. அது தவறு அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பாதிக்கப்பட்ட மக்களின் உறுப்பினர். ஒரு தொழில்சார் சட்டத்தரணி. எனவே தொழில் சார்ந்து அவர் தனது மக்களுக்கு உதவ வேண்டியது அவருடைய கடமை, பொறுப்பு. அவர் தன் கடமையைத்தான் இதில் செய்திருக்கிறார்.
மேலும் இந்த சட்ட வெற்றியை வைத்துக் கொண்டு மரபுரிமை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் சட்டக்கண் கொண்டு பார்க்கவும் தேவையில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த மயமாக்கல் எனப்படுவது ஒரு சட்ட விவகாரம் அல்ல. அது ஓர் அரசியல் விவகாரம். அதை அரசியல் ரீதியாகத்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கம் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். அரசாங்கம் அவ்வாறு அரசியல் தீர்மானம் எடுக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும். அதற்கு தமிழ்த் தரப்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் போராட வேண்டும்.
அண்மையில் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றி பிரசாபித்திருந்தார். அதுதான் வழி. அரசாங்கத்துக்கு வலியுண்டாகும் விதத்தில், அரசு நிர்வாகத்தை முடக்கும் விதத்தில், உலக சமூகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் தமிழ்த் தரப்பு போராட வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியும், நாட்டின் பிரபல சட்டத்தரணியும் ஆகிய சுமந்திரன் தன் தொழில் சார்ந்த ஒழுக்கத்துக்கு மாறாக சட்ட மறுப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
சட்ட மறுப்பு என்றால் என்ன? அது சாகப் பயந்தவர்களின் ஆயுதமா? அல்லது போராட விரும்பாதவர்கள், போராடத் திராணியில்லாதவர்கள் பதுங்கும் ஓரிடமா? இல்லை. காந்தியைப் பொறுத்தவரை சட்டமறுப்பு எனப்படுவது ஒரு வாழ்க்கை முறை. அவரைப் பொறுத்தவரை அது சாகத் துணிந்தவர்களின் ஆயுதம். தன் உயிரையும் விடச் சித்தமாக இருப்பவர்தான் சட்ட மறுப்பில் ஈடுபடலாம்.
சட்ட மறுப்புப் போராட்டமும் உட்பட அறவழிப் போராட்டம் எனப்படுவது அல்லது அகிம்சை போராட்டம் எனப்படுவது தன்னைத் தானே வருத்துவதுதான். போராடும் தரப்பு தன்னைத்தானே வருத்தும் பொழுது அது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும்.
முதலாவது விளைவு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். தங்களுக்காக என் உடலை வருத்தும் ஒருவர் மீது மக்கள் எப்பொழுதும் மதிப்பு வைப்பார்கள். சட்டமறுப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஒருவர் தன்னை எந்த அளவுக்கு வதைத்து கொள்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வெகுஜன அபிமானமும் கூடும். இது முதலாவது விளைவு.
இரண்டாவது விளைவு, தன்னைத்தானே வருத்துவதன் மூலம் எதிரியின் மனசாட்சியை உலுப்புவது. சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு அதற்கெல்லாம் மசியாது என்ற ஒரு விளக்கமும் உண்டு. ஆனால் அவர்கள் மசிவார்களோ இல்லையோ,இங்கு கூறப்பட்ட முதல் விளைவின் விளைவாக பொதுமக்கள் அந்த அஹிம்சைப் போராளியை நோக்கி வரும்பொழுது,அந்தப் போராட்டம் மக்கள் மயப்படும். அது திரண்ட மக்கள் எதிர்ப்பாக மாறும். காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்தை போல. விளைவு அரசாங்கத்தை பணிய வைக்கும். திரளான மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்திற்கு வலியை உண்டாக்கும். அரசு நிர்வாகத்தை முடக்கும். போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும். நாட்டையே முடக்கும். அதனால் பொருளாதார ரீதியாக மேலும் சேதம் ஏற்படும். அப்பொழுது அரசாங்கம் பணிய வேண்டியிருக்கும்.
ஆனால் அந்தப் போராட்டத்தை தொண்டர்கள் முன்னெடுக்க கூடாது தலைவர்கள் முன்னுக்கு நிற்க வேண்டும். ராஜதந்திரிகளுக்கு நன்கு தெரிந்த, நாடறிந்த முன்னணித் தலைவர்கள் போராட்டத்தில் முன்னுக்கு நிற்க வேண்டும். தலைவர்கள் சாகத் தயாராக இருக்க வேண்டும்.தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்க சித்தமாக இருப்பார்களாக இருந்தால், தலைவர்கள் பசியோடு இருக்கவும், தாகத்தோடு இருக்கவும், காயத்தோடு இருக்கவும், சிறையில் இருக்கவும் தயாராக இருந்தால், தொண்டர்களும் அதைப் பின்பற்றுவார்கள். மக்களும் திரண்டு வருவார்கள். எனவே தலைவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். தலைவர்களின் தியாகங்கள் மக்களை நொதிக்கச் செய்யும். நாடாளுமன்றத்தில் சட்ட மறுப்பை பற்றிக் கூறிய சுமந்திரன் அதற்குத் தயாரா?
அல்லது அன்னை பூபதி,திலீபன் ஆகியோரின் படங்களை வடக்கிலிருந்து கிழக்குக்கு காவிச் செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூபதியைப் போல திலீபனைப் போல உண்ணாவிரதம் இருப்பதற்கு தயாரா?
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அப்படி போராட மாட்டார்கள் என்பதைத்தான் கடந்த 14 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன. தமிழ்க் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் வாய்ச்சொல் வீரர்கள்தான், நடிப்புச் சுதேசிகள்தான். அவர்களுடைய வீரத்தின் உச்சம் எதுவென்றால் காவல்துறைக்கு எதிராகவும் அதிரடிப்படைக்கு எதிராகவும் அரசு படைகளுக்கு எதிராகவும் அச்சமின்றிக் கதைப்பதுதான். அதற்கு அப்பால் சிறைகளை நிரப்ப எத்தனை அரசியல்வாதிகள் தயார்?
கடந்த 14 ஆண்டுகளாக அப்படி யாராவது சிறைகளை நிரப்பி யிருக்கிறார்களா? நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நின்ற தொண்டர்கள் சிலர் சிறைகளை நிரப்பியிருக்கிறார்கள். இப்பொழுதும் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் தலைவர்கள் யாரும் இதுவரை சிறை போகவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சில மணித்தியாலங்கள் அண்மையில் சிறை வைக்கப்பட்டார். அதற்குமப்பால் மண்டேலாவைப் போல அல்லது காந்தியைப் போல ரிஸ்க் எடுத்து போராடுவதற்கு எத்தனை பேர் தயார்? காந்தி குல்லாய் அணிவதல்ல அறவழிப் போராட்டம். காந்தியைப் போல போராடவேண்டும்
அப்படி யாரும் தயாரில்லை என்பதைக் கண்டுபிடித்த காரணத்தால்தான் அரசாங்கம் சிங்கள பௌத்த மயமாக்கலை முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வரப் போவதாக அச்சுறுத்துகின்றது.
தமிழ் அரசியல்வாதிகள் நகரங்களின் மையங்களில் சுலோக அட்டைகளோடு சில மணித்தியாளங்கள் நிற்கிறார்கள். அல்லது நிலத்தை அபகரிக்க வரும் படைத்தரப்போடு களத்தில் நின்று தர்க்கப்படுகிறார்கள். அல்லது ஊர்வலம் போகிறார்கள். அடையாள உண்ணாவிரதம் செய்கின்றார்கள். கடையடைப்பு செய்கின்றார்கள். இந்தப் போராட்டங்கள் எவையும் அரசுக்கு வலியை உண்டாக்கவில்லை. அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்திகளாக வருவதைத் தவிர இந்த போராட்டங்கள் அரசு நிர்வாகத்தை முடக்குபவை அல்ல. அவ்வாறு அரசு நிர்வாகத்தை முடக்கவோ அல்லது நாடாளுமன்ற செயற்பாடுகளை முடக்கவோ திராணியில்லாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறவழிப் போராட்டங்களை குறித்தும் சட்ட மறுப்பு போராட்டங்களை குறித்தும் வாய்ச்சொல் வீரம் காட்டுகிறார்கள் தவிர,செயலில் எதையும் காட்டவில்லை.
இறுதிக்கட்டப் போரில் கருணாநிதி சில மணித்தியாளர்கள் உண்ணாவிரதம் இருந்ததை ஈழத் தமிழர்கள் கடுமையாக விமர்சிப்பதுண்டு. ஆனால் ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள் ? சில மணித்தியால உண்ணாவிரதங்களைத்தானே செய்கிறார்கள். சில மணி நேர ,ஆர்ப்பாட்டங்களை குறியீட்டு கடை அடைப்புகளைத்தானே செய்கின்றார்கள்? தொடர்ச்சியாகப் போராட யாரால் முடிகிறது? அதற்கு யார் தயார்?ஒருவரும் தயார் இல்லை.
இப்போதுள்ள மிதவாத தலைவர்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாதத்திலும் தம்மை ஒறுத்து, அர்ப்பணித்துப் போராடுவதற்கு தலைவர்கள் தயாராக இருக்கவில்லை. காலி முகத்துடலில், கச்சேரியில் அடி விழுந்ததும் அடுத்த கட்டமாக எப்படி அறவழியில் போராடுவது என்பதை குறித்து தமிழ் தலைவர்களிடம் வழி வரைபடம் எதுவும் இருக்கவில்லை. காலிமுகத் திடலில் கச்சேரியில் நடத்திய போராட்டங்கள் கூட முழு அளவுக்கு மக்கள் மயப்பட்டவை அல்ல. எனினும், தலைவர்கள் அங்கே முன்னணியில் நின்றார்கள்.
இப்பொழுதும் தலைவர்கள் முன் சென்றால் தொண்டர்கள் பின் வருவார்கள். தலைவர்களுக்கு அடி விழுந்தால், தொண்டர்கள் அதை தடுக்க முன்வந்து தாங்களும் அடி வாங்குவார்கள். மக்கள் அதைக் கண்டு கொதிப்பார்கள். போராட்டத்தை நோக்கித் திரள்வார்கள். இதுதான் அகிம்சை போராட்டத்தின் அடிப்படைப் பொறிமுறை. தமிழ் அரசியல்வாதிகள் அப்படி ஒரு போராட்டத்துக்கு தயாரா?