மனம் திறக்கிறார் மனோ கணேசன்
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 12)
- அப்படி இல்லை அரக்கனே..! இது சிங்கள பௌத்த நாடு நீங்கள் வந்தேறு குடிகள். சொந்தம் கொண்டாட முடியாது என்றார்.
- மகாவம்சம் கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு, இன்று நூல் வடிவில் இருக்கிறது. வாங்கி படியுங்கள். நாம் யார், நீர் யார் என்பதை புரிந்துகொள்வீர் என்றார்.
- படித்தேன். இந்தியாவிலிருந்து, விஜயன், நண்பர்களுடன் இலங்கை வந்து தரையிறங்கினான் என மகாவம்சம் சொல்கிறதே என்றேன்.
- ஆணவம் அடங்கி, பிரபாகரனை கொன்றது பிழை. பிரபாகரன் இருந்திருக்க வேண்டும் என்றார்.
- தொடர்ந்து, சிங்கள பௌத்தரும், தமிழ் இந்துக்களும் கூட்டு சேர்ந்து, முஸ்லிம் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்றார்.
காலகட்டம்: தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சராக (2015-2019) நான் செயற்பட்ட காலம். ஒருநாள் பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரர் என்னை சந்திக்க வந்தார். |
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சராக நான் செயற்பட்ட போது, ஒருநாள் பொதுபலசேனா ஞானசார தேரர் என்னை சந்திக்க வேண்டும் என்று எனது செயலாளரை கேட்டிருந்தார். அவர் கேட்ட தினத்தில் இருந்து சரியாக ஒரு வாரம் கழித்த ஒரு நாளிலே காலை 10 மணிக்கு நேரம் தந்தேன்.
ஆனால் அவர் வருவதற்கு முதல் நாள் இரவு தொலைக்காட்சி செய்தியில் ஞானசாரர் என் பெயரை குறிப்பிட்டு என்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மனோ கணேசன் தனது நல்லிணக்க பிரச்சாரத்தை, வவுனியாவுக்கு வடக்கே சென்று தமிழ் மொழியில் செய்ய வேண்டும். தென் இலங்கையிலே சிங்கள மொழியிலே செய்ய கூடாது என என்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நாடு,பல்லின, பன்மத, பன்மொழி நாடு என்ற தொனியில் நூற்றுக்கணக்கான கலந்துரையாடல்களை, நான் சிங்கள மொழியிலே சிங்கள மக்கள் மத்தியிலே நடத்தினேன். சிங்கள பெளத்தம் மட்டும் என்ற கொள்கை பிழை என்பதே இதன் அர்த்தம். இந்த பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியிலே எடுபடவில்லை என சில மேதாவி தமிழ் பேசும் அறிவாளிகள் சொல்வார்கள். என்னை பொறுத்தவரையிலே இந்த பிரச்சாரம் நன்றாக எடுப்பட்டது. இன்னும் ஒரு ஐந்து வருடம் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் சிங்கள மக்கள் மத்தியிலே பாரிய மன மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம்.
உண்மையில், அதனால்தான், அதன் பலாப்பலனாகத்தான் ஞானசாரருக்கு என் மீது கோபம். அதிலும் சிங்களத்தில் பேசுவதால் அதிக கோபம்.
இது இயல்பானது. இதற்கு முன் ரவிராஜ் மீதும் இவர்களுக்கு இப்படித்தான் கோபம்.
எனது செயலாளரை அழைத்து, ஞானசாரரை நாளை வர வேண்டாம். “அப்பொய்ன்மெண்ட் கான்சல்”. இந்த இரவிலேயே தொலைபேசியில் அழைத்து அவருக்கு சொல்லுங்கள், என்றேன்.
மறுநாள் காலை 9 மணி. எனது செயலாளர் என்னை அழைத்தார். சந்திப்பு ரத்து செய்யப்பட்டது, என்று சொல்லியும், காலை 10 மணிக்கு வந்தே தீருவேன் என்று ஞானசாரர் சொல்கிறார் என்றார். வந்து தீர்க்க சொல்லுங்கள், நேரம் கிடைத்தால் பார்க்கின்றேன் என்று நான் சொன்னேன்.
பிறகு 10 மணிக்கு டான் என அவர் வந்துவிட்டதாக அமைச்சின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். வீட்டில் கட்சி பணிகளில் ஈடுபட்டிருந்தேன். 10.50 இற்கு மீண்டும் தொலைபேசியில் செயலாளர். சுமார் ஒரு மணித்தியாலமாக ஞானசாரர் நீங்கள் வரும்வரை காத்திருக்கிறார் என்றார்.
ஓஹோ, இருக்க சொல்லுங்கள், வாறன் என்றேன். 11.30 அளவில் நான் அமைச்சிற்கு போனேன். அதற்குள் ராஜகிரிய பொலிஸ் பொறுப்பதிகாரி நிறைய போலீஸ்காரர்களுடன் நான் வரும்வரை கீழ் தளத்தில் காத்திருந்தார்.
நான் இரண்டாம் மாடியில் எனது அறைக்கு சென்றேன். ஞானசாரரை அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் (போர்ட் ரூம்) அமரச்செய்திருப்பதாக செயலாளர் கூறினார். எனது அமைச்சு தலைமையகத்தில் மொத்தம் ஐந்து மாடிகள். மாடிகள் முழுக்க நடந்து திரிந்து, ஞானசாரர் சுத்தமாக என்னை திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.
10 மணிக்கு தான் வந்த பொழுது, ஏன் மின் தூக்கி அருகிலே வந்து தன்னை வரவேற்கவில்லை என்று செயலாளர் பிரியாணியிடம் ஞானசாரர் சண்டை போட்டுள்ளார். உங்களை அழைத்து செல்வது என் வேலையில்லை. அது அமைச்சு செயலாளரின் வேலை என்று பிரியாணி பதிலளித்திருக்கிறார்.
நான் மாநாட்டு மண்டபத்திற்கு போனேன். அங்கே மண்டப மேசையின் வலது புறத்தில் ஞானசார தேரரும், சகபாடிகளான இன்னும் இரண்டு தேரர்களும் அமர்ந்திருந்தார்கள். இடது புறத்திலே எனது அமைச்சின் செயலாளர்களும், அதிகாரிகளும் அமர்ந்திருந்தார்கள். ஊடகவியலாளர்களும் தொலைகாட்சி காமெராக்களுடன் மண்டபத்தில் நிறைந்திருந்தார்கள். நான் வந்து எனது பிரதான ஆசனத்தில் அமர்ந்தேன்.
வணக்கம் தேரர், சொல்லுங்கள் என்ன விஷயம்? அவர் உடனடியாக, தனக்கு அமைச்சில் மரியாதை தரவில்லை. என்னை உங்கள் செயலாளர் கீழே வந்து அழைத்துவரவில்லை என்றார்.
“அது அவரது வேலை அல்ல. இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்பதால் நீங்கள் வர மாட்டீர்கள் என அவர் நினைத்திருக்கலாம்.” என்றேன்.
செயலாளரை விட்டுவிட்டு என்னை பிடித்துக்கொண்டார். ஏன் சந்திப்பை ரத்து செய்தீர்கள் என்றார். சகவாழ்வு பிரச்சாரம் செய்கிறேன் என நீங்கள் என்னை நேற்று இரவு செய்தியில் கடுமையாக விமர்சித்தீர்கள். நம்மிடையே பேச எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. ஆகவே சந்திப்பு ரத்து. சண்டை போட எனக்கு நேரமில்லை என்று கூறி முடித்தேன்.
“இல்லை, இல்லை பேசுவதற்கு இருக்கிறது”
“சரிஅப்படியானால் சொல்லுங்கள்”
ஞானசாரருடன் ராவண பலய என்ற இன்னொரு அமைப்பை சார்ந்த தேரர் கும்பலும் இருந்தது. சாரர் ஆரம்பித்தார்.
“இது சிங்கள பௌத்த நாடு, நீங்களும் (தமிழர்களும்), முஸ்லிம்களும் வந்தேறு குடிகள். எங்கள் சிங்கள பெளத்த நல்லெண்ணம் காரணமாக இந்நாட்டில் வாழ்கிறீர்கள். சகவாழ்வு தொடர்பாக உங்கள் உபதேசம் எமக்கு தேவையில்லை. வேண்டுமானால், வவுனியாவுக்கு வடக்கே போய் சொல்க. கிழக்கில் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் சொல்க. மலைநாட்டில் தமிழர்களுக்கு சொல்க. இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்று வாழ சொல்க.”
மூச்சை இழுத்து விட்டு, விட்டு தொடர்ந்தார்.
“எங்கள் 2000 வருட மகாவம்ச வரலாறு கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு, இன்று நவீன நூல் வடிவில் இருக்கிறது. வாங்கி படியுங்கள். நாம் யார், நீர் யார், அவர் யார் என்பதை புரிந்துகொள்வீர்.” என்றார்.
எமக்கு அசந்தர்ப்பமாக, “..நான் யார், நீ யார்..” என்ற எம்ஜியார் படப்பாடல் ஞாபகம் வந்தது. பைத்தியக்காரன் வேடத்தில் வாத்தியார் பாடும் பாடல்.
முகத்தில் முறுவலுடன், கண்களில் சலனமில்லாமல், வலக்கையை கன்னத்தில் வைத்தபடி, ஞானசாரர் கண்களை நேரடியாக பார்த்தபடி, நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சலனமில்லாத என் முகத்தை பார்த்த பக்கத்து ராவணபல தேரர், ஞானசாரரிடம் “நீங்கள் சொல்வது அமைச்சருக்கு புரிகிறதோ, என்னவோ. மகாவம்ச சரித்திரத்தை அவர் அறிந்திருக்கிறாரோ தெரியவில்லை” என்று கிசு கிசுத்தார்.
அவரது சிங்கள கிசு கிசு கூட எனக்கு விளங்கியது. எனக்கு அது விளங்கியது என அவர்களுக்கு விளங்கவில்லை. இதான் கோளாறு.
ஞானசாரர் என்னை பார்த்து, “சரி, என்னிடம் ஒரு கேள்வி இருக்கின்றது. அதற்கு பதில் சொல்லுங்கள்” என்றார்.
“இந்நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்று நான் கூறுகின்றேன். ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
“இந்நாடு ஒரு சிங்கள, தமிழ், முஸ்லீம் நாடு. இந்நாடு ஒரு பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் நாடு” என்று நான் பதில் சொன்னேன்.
சாரருக்கு கோபம் வந்துவிட்டது. “எஹெம நெமெய் யோதயா” என்று சிங்களத்தில் சொன்னார். அதன் அர்த்தம் “அப்படி இல்லை அரக்கனே” என்பதாகும்.
“இது சிங்கள பௌத்த நாடு நீங்கள் வந்தேறு குடிகள். சொந்தம் கொண்டாட முடியாது”.
நான் “நில்லுங்கள், ஸ்வாமி. உங்க மகாவம்சத்தில் இருந்து ஒரு விஷயத்தை சொல்லவா?” என்று ஞானசாரருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ராவணபலய தேரரை பாத்துக்கொண்டே கேட்டேன். இவர்தானே எனக்கு மகாவம்சம் தெரியுமா என சந்தேகத்தை கிளப்பியவர்.
“மகாவம்சத்தில் விஜய இளவரசன் கிழக்கு இந்தியாவில் இருந்து தனது நண்பர்களுடன் இலங்கை தீவின் மேற்கு கரையிலே வந்து தரையிறங்கினான் என்று மகாவம்சத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது தானே?” என்றேன்.
நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்துகொள்ளாமலே ஞானசாரர் “ஆம், ஆம்” என்று தலை ஆட்டினார்.
“விஜயன், இங்கு இருந்த ஆதிவாசி அரசியான குவேனியை மணந்துக்கொண்டான். பிள்ளைகளும் பெற்றான். பின்பு குவேனியை விரட்டிவிட்டான். தனக்கும், தனது நண்பர்களுக்கும் பெண் தேடி, தென் இந்தியாவிற்கு தூதனுப்பி, பாண்டிய நாட்டில் இருந்து இளவரசியையும், பெண்களையும் அழைத்து வந்தான். இளவரசியை தான் மணந்தான். அந்த பெண்களை தனது நண்பர்களை மணக்கச்செய்தான். இங்கிருந்து தானே சிங்கள இனம் உருவாகியது? அப்படி தானே மகாவம்சம் கூறுகிறது?” என்று அமைதியாக சுத்த சிங்களத்தில், ஒரு கேள்வி குறியுடன் கூறி முடித்தேன்.
உரையாடலின் விபரீத போக்கை இப்போ புரிந்து கொண்ட ஞானசாரர் தலையை குனிந்து ஒரு பென்சிலை எடுத்து மேசையிலே தட்டியபடி “இல்லை, இல்லை அது பொய்” என்றார்.
“எது பொய்? நான் சொன்ன விஷயம் பொய்யா? மகாவம்சமே பொய்யா?”
“இல்லை, இல்லை. இந்த விஷயம் பொய்யானது”
உற்சாகம் இழந்த குரலில் ஞானசாரர் பதில் சொன்னார்.
நான் உற்சாகமாக திருப்பி அடித்தேன்.
“அது எப்படி தேரரே சில விஷயங்கள் சரி என்கிறீர். சில விஷயங்கள் பொய் என்கிறீர். இதெல்லாம் சேர்ந்தது தானே மகாவம்சம்”
“இந்நாட்டில் வாழும் எல்லோருமே வெளியில் இருந்து வந்தோம். வந்த காலக்கட்டமும், வந்த முறையும் வெவ்வேறு. இந்நாட்டிலே சிங்கள மொழி பேசுகிறவர்களும், பௌத்த மதம் கடைப்பிடிப்பவர்களும் எண்ணிக்கையிலே பெரும்பான்மை. அதிலே எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், நாம் அனைவரும் ஒன்று சேர்த்தால்தான் முழு இலங்கை உருவாகிறது”
“75 என்பது 100 அல்லவே!அதனுடன் 25 சேர்ந்தால்தானே 100? இலங்கை என்பது 100 ஆகும்! அது 75 அல்ல!” என்ற எனது பிரபல கூற்றோடு கூறி முடித்தேன்.
உற்சாகமிழந்த ஞானசாரர் உரையாடலை வேறுபுறம் திருப்பி, திடீரென முஸ்லிம்களுக்கு எதிராக பேசத்தொடங்கி சிங்கள பௌத்தர்களும், தமிழ் இந்துக்களும் கூட்டு சேர்ந்து, முஸ்லிம் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னார்.
உங்களுக்கு முஸ்லிம்களுடன் இப்பொழுது என்ன பிரச்சினை என்று கேட்டேன்.
ஞானசார தேரர் “முஸ்லிம்களின் குற்றங்கள்” என்று கூறி பெரிய பட்டியலை தனது பையில் இருந்து எடுத்த ஒரு கடதாசியை படித்தபடி கூறினார்.
“பிரபாகரனை கொன்றது பிழை. பிரபாகரன் இருந்திருக்க வேண்டும்.” என்றார்.
“அதென்ன திடீரென்று பிரபாகரன் மீது உங்களுக்கு பாசம்?
“பிரபாகரன் இருந்திருப்பாரேயானால் முஸ்லிம்கள் தலைவிரித்து ஆடியிருக்க மாட்டார்கள். முஸ்லீம் அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.” என்று கூறினார்.
“பிரபாகரன் பௌத்த சின்னங்களை அழிக்கலை. அவற்றை பாதுகாத்தார். ஆனால் இன்று முஸ்லிம்கள் கிழக்கில் பௌத்த சின்னங்களை அழித்து பௌத்த காணிகளை அபகரிக்கிறார்கள்”, என்றார்.
தமிழர்களுக்கு எதிரான “சிங்கள-முஸ்லீம் கூட்டிலும்”, முஸ்லிம்களுக்கு எதிரான “தமிழ்-சிங்கள கூட்டிலும்” அல்லது சிங்களவர்களுக்கு எதிரான “தமிழ்-முஸ்லீம் கூட்டிலும்”, எனக்கு நம்பிக்கையில்லை. இதெல்லாம் பருவகால கூட்டுகள். பருவம் முடிந்தவுடன் கூட்டும் முடிந்துவிடும். இளவேனில்காலம் முடிந்தவுடன் முதுவேனில்காலம் வந்துவிடும். கார்காலம் முடிந்து கூதிர்காலம் வந்துவிடும். ஆகவே இவரது பலவீன வாதம் என்னை கவரவில்லை.
என்னை வீழ்த்த வந்த அவர் மனந்தளர்ந்தார் என்பதை அங்கு அமர்ந்திருந்த எனது அமைச்சின் செயலாளர் முதற்கொண்ட சிங்கள அதிகாரிகளின் முகங்களை பார்த்தாலே தெரிந்தது.
“முஸ்லீம் அரசியல்வாதிகளை பற்றி எழுத்து மூலமான குற்றச்சாட்டு பட்டியலை இரண்டு தினங்களில் அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஞானசாரர் போய் விட்டார்.
பட்டியல் எதுவும் எனக்கு அவர் அனுப்பவில்லை. அனுப்ப மாட்டார் என எனக்கு தெரியும். இவர் வந்து போனபிறகு, என் அமைச்சின் சிங்கள அதிகாரிகள் என்னை, அதற்கு முன்னரை விட, அதிகம் மதிக்க ஆரம்பித்தார்கள் என எனக்கு புரிந்தது.