(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 13)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
வாழ்க்கையில் சில விஷயங்களை காணாமலும் கேட்காமலும் இருப்பது பல வகையில் மேலென்றே தோன்றுகிறது. ஆனால் நமது வாழ்க்கையில் தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் செலுத்தும் ஆதிக்க காலத்தில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அவலங்களை காணவோ கேட்கவோ வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது என்று தான் கூற வேண்டும். இதைத் தான் ‘விதி வலியது’ என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. அப்படியான சம்பவங்கள் எரிச்சலையும், நமது மன உளைச்சலையும் ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்டு, அந்த நிகழ்வு அல்லது சம்பவத்தின் முக்கியத்துவத்தை குறைத்து களங்கப்படுத்துகிறது.
அப்படியான அவலங்களில் ஒன்று தான் ஆண்டு தோறும் இலங்கையில் நடைபெறும் மே தின கூட்டங்கள். இந்தக் கூட்டங்களை நடத்துபவர்களுக்கு “சிகோகோவில் சிந்திய ரத்தம்” பற்றி என்ன தெரியும், அல்லது எந்தளவிற்கு புரிதல் உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்யவும் அதை பேணிக் காத்திடவும், தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளிகள் தமது பணி மற்றும் ஊதியத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் 1866ஆம் ஆண்டு சிகாகோ நகரின் ஹேமார்க்கெட்டில் முன்னெடுத்த போராட்டத்தில் வெடித்த கலவரமும் அதில் ஏழு பொலிசார் மற்றும் குறைந்தது எட்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டதும் வரலாறு.
ஆனால் நமது தற்குறிகளுக்கு உள்நாட்டு வரலாறே ஒழுங்காகத் தெரியாது, அப்போது அமெரிக்காவில் 157 ஆண்டுகளிற்கு முன்னர் நடைபெற்ற வரலாறு தெரிந்திருக்கும் என்று நினைப்பது பேதமையாகும்.
அப்படி தொழிலாளர்களின் உரிமைகள், நலன்கள், உத்தரவாதங்கள், ஊதியங்கள் போன்றவற்றையெல்லாம் கம்யூனிஸ்டுகளே காற்றில் பறக்கவிட்டு பல காலங்கள் ஆகிவிட்டன.
ஆனால், ஆசியாவின் அதிசயமான இலங்கையில், நடப்பதெல்லாம் அதிசயமே. அதிலொன்று தான் இந்த மே தின ஊர்வலம், கூட்டம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நடத்தும் கேலிக்கூத்துக்கள்.
இலங்கையில் இந்தாண்டும் இந்த மே தின கூத்துக்கள் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் அடக்கி வாசிக்கப்பட்ட மே தினம் இந்த தடைவை ’ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பழைய காக்காய்களோடும் கசிப்பு வியாபாரிகளின் வீராவேசப் பேச்சுகளோடும் மீணடும் “பழைய குருடி கதவைத்திறவடி” என்று பழைய ராசாக்களின் மீள்வரவுக்குக் கட்டியம் கூறும் வண்ணம் மிகுந்த பொருட் செலவில் கட்டமைக்கப்பட்ட ஒரு சம்பவமாகப் பயன்படுத்தபட்டிருக்கின்றது.
அரகலய காலத்தில் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என்று தலைதெறிக்க ஓடி ஒளிந்திருந்த கூட்டம் விக்கிரம ராசாவுக்கு புண்ணியம் கிடைக்க பயமின்றி மீண்டும் வெளியே வந்து மக்களுக்கு டாட்டா காட்டுகிறது. உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே என்று டாட்டா காட்டுகிறது. சனங்கள் கூட்டிவரப்பட்டு கூட்டங்களில் இருக்கவைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது. பார்வையாளர் கைகள் மட்டும் ஏதோ தூக்கி அசைகின்றன. பெண்களில் ஒன்று இரண்டு ஜயவேவா கோஷம் போடுகிறது.ஏதோ ஒன்றின் சாயல் ஏதோ ஒன்றைத் தேடுகிற கலவரத்தைக் காட்டுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டங்களில் மனிதத் தலைகள் மட்டுமே தெரிகின்றன. அவ்வளவு கூட்டம். அவர்கள் நல்லாப் பேசுவார்கள் புள்ளிவிபரங்களை அள்ளி வீசுவார்கள் கழுத்து நரம்பு புடைக்க உணர்ச்சி பூர்வமாக மக்கள் மனங்களுக்கு அருகில் சென்று பேசுவார்கள் அதனால் அவர்களின் கூட்டங்களுக்கு தாராளமாக ஆட்கள் வருவார்கள். ஆனால் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்கிறபோது மட்டும் எல்லாம் தலைகீழாக மாறும். மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பழைய ஒட்டுண்ணிகளுக்கே விரலில் மையைப்பூசி சீட்டில் புள்ளடிபோட்டு வாக்களிப்பார்கள் என்கிறார் ஒரு பழுத்த அனுபவசாலி.
இவ்வளவு கோலாகலமாக விழாக் கொண்டாடுகிறார்களே உண்மையில் தொழிலாளர் தினம் என்பதை தொழிலாளர்களோடு தொழிலாளர்களுக்காக் கொண்டாடுகிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமும் கேள்விக்குறியுமே மிஞ்சுகிறது.
மொட்டுக்கட்சி தங்கள் வீரபிரதாபங்களை எடுத்துச் சொல்வதிலும் மற்றவர்களைக் குறை சொல்வதிலுமே அதிக கவனம் செலுத்தியது. சவால்களை முறியடித்து குறிக்கோள்களை அடைவோம் என்பதே அவர்களின் மகுடவாசகம். புளுத்துப்போன தங்களின் அரசியல் வாழ்க்கையில் தாம் எதிர்நோக்கும் சவால்களை முறியடித்து மறுபடி ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோளை அடைவதே அவர்களின் நோக்கமே ஒழிய பாடுபட்டு உழைக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொண்டு அவர்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்வதல்ல. மஹிந்த மாத்தையா வீதியில் சாரத்தை வரிந்துகட்டி கொண்டு தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த காலம் ஒன்று உண்டு.
பிரேமதாசாவின் கட்சியானது நாட்டின் போராட்டம் தொழில் புரியும் இடத்தில் இருந்தே முகிழ்கிறது என்ற வாசகத்தைக் கொண்டிருந்தது. ஆசையாகவும் இருக்கிறது பயமாகவும் இருக்கிறது போல மக்கள் போராட்டம் நடத்தவேண்டும் என்று செய்தி சொல்லப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி நாட்டின் சொத்துகளை விற்கும் கொடுங்கோல் அரசாங்கத்தைத் தோற்கடித்து மக்களுக்கு சிநேகபூர்வமான அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம் என்று கூறுகிறது.
இவர்கள் கூட அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்கிறார்களே ஒழிய தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு போன்ற தொழிலாளர் தினத்திலே கவனம் செலுத்தவேண்டிய விடயங்களையெல்லாம் விட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் மேடையிலே பேசவேண்டியவற்றை தொழிலாளர் தினத்திலே வந்து பேசுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் அதிபருமாகிய விக்கிரமசிங்க சற்று வித்தியாசமாக 2048இல் நாடு அபிவிருத்தியடைந்து விடும் என கட்டியக் கூறு வெறும் கையில் முழம் போட்டுள்ளார். அதுவரை இப்போது இருப்பவர்களில் எத்தனைபேர் உயிருடன் இருப்பார்களோ தெரியாது. அவர் இருப்பாரா என்பது கூட உத்தரவாதமில்லை. ஆனால், தொழிலாளர்களைப் பொறுமையாக அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்கிறார். தொழிலாளர்களைப் பொறுத்தவரை இன்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கிறார்களே ஒழிய 2048இல் விக்கிமசிங்க சொல்லுகிற கனவுலகில் காணப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளையல்ல. மக்கள் எதிர்நோக்கும் சமகாலப்பிரச்சினைகளுக்கு நீண்டகாலத்தில் தீரவுகாண்பதாகக் கூறும் விக்கிரமசிங்க போன்ற ஆட்களுக்கு 1936இல் வெளியாகிய பொதுக் கோட்பாடு (the General Theory) என அழைக்கப்படும் நூலாசிரியலும் ராஜதந்திரியும் புகழ்பூத்த பொருளியல் அறிஞருமான ஜோன் மோனார்ட் கெயின்ஸ்(Lord JohnMaynard Keynes) என்னும் பிரித்தானியப்பிரபு கூறிய அருமையான ஒரு வாசகம் இன்றும் இலங்கைக்குப் பொருந்துகிறது.
அவர் எல்லாப்பிரச்சினைகளுக்கும் நீண்டகாலத்தில் தீர்வுவரும் என்று சொல்லித்திரிபவர்களை நீண்டகாலத்தில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம் (in the long run we are all dead) என்னும் பிரபலமான வாசகத்தைக் கூறினார். இப்போதிருக்கும் பிரச்சினைகளுக்கு மக்கள் இறந்த பின்னரா தீர்வு காணப்போகிறீர்கள் என்பதே அவர் எழுப்பும் வினாவாகும். குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வு காண வேண்டும். அதற்காகத்தான் மக்கள் ஆட்சியாளர்களை பதவியில் இருத்தியிருக்கிறார்கள். ரணிலைப் பொறுத்தவரை மக்கள் அவரை ஆட்சியில் இருத்தவில்லை. அவரைத் தெரிவு செய்யவுமில்லை. அவர் அரசியலமைப்புச் சட்டரீதியாக மட்டுமே பதவிக்கு வந்துள்ளார். ஆகவே மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய உடனடி கவலைகள் இல்லாதிருக்கலாம். ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது எரியும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வேண்டும். அவர்கள் மத்தியில் போசாக்கின்மை அதிகரித்திருக்கிறது. அவர்களது குழந்தைகள் பாடசாலைகளில் மயங்கி விழுகிறார்கள். சாப்பாடு இல்லாத படியால் பலர் பாடசாலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். உழைப்பாளிகளின் குழந்தைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைப் பெற முடியவில்லை. அவை யானை விலையில் விற்கின்றன. எடுக்கிற சம்பளம் உணவுத்தேவைக்கே போதுமானதாக இல்லை. தொழிலாளர்கள் எதிர்காலத்தில் ஒரு செல்வந்த வாழக்கையை வாழக்கேட்கவில்லை இப்போதிருக்கிற வாழ்க்கையை மரியாதையாக வாழக்கூடிய குறைந்தபட்ச வாழ்க்கைத்தரத்தை உறுதிப்படுத்துமாறு கேட்கிறார்கள் இப்போதுது அவர்கள் உண்பதற்கு பாண் கேட்கிறார்கள் நீங்கள் 2048ல் கேக் தருவதாகச் சொல்கிறீர்கள். கடந்த இருவருடங்களாக பாதிக்கபட்ட உழைக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை. அதற்கு வழி இல்லை என்கிறீர்கள் ஆனால் அரசு பதவிகளில் இருந்து அட்சி நடத்துவோர் தமது எந்தச் செலவை அரசாங்கத்தில் இருந்து பெறுவதைக் குறைத்துக் கொண்டீர்கள்? வறுமையில் வாடுவதாகக் கருதப்படும் 39 இலட்சம் பேருக்கு சர்வதேச உதவியுடன் உதவித் தொகைகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பாதிக்கபட்டவர்களுக்கு இன்னும் ஆறு மாதங்களின் பின்தான் அந்த அற்ப உதவி வரும் என்றால் அதுவரை அவர்கயின் நிலை என்ன? இந்த உதவித்தொகை பெறவுள்ளோரில் தொழில் புரிவோர் உள்ளடக்கபடுவார்களா, அந்த உதவியை பெறுவதில் நாட்டில் மிகவறிய நிலையில் உள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடக்கப்படுவாரா? உழைக்கும் வர்க்கத்தினரில் ஏற்கெனவே கடன்பட்டு இப்போது அறவிடப்படும் வரி காரணமாக கடனை மீளச் செலுத்தாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு என்ன தீர்வு வழங்கினீர்கள்? நாடு வங்குரோத்து அடைந்தவுடன் பெற்றகடனை மீளச் செலுத்த முடியாமல் கடன் மறுசீரமைப்புச் செய்ய அவசரப்படும் நீங்கள் இதே கடன் சுமையால் பெற்ற கடனுக்கும் சேர்த்து அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் ஊழியர்களின் நிலை பற்றிச் சற்றேனும் சிந்தித்தீர்களா? அரசாங்கம் பெற்ற கடனில் ஒரு பகுதியைக் குறைக்க வேண்டும் என்று கருதும் அரசாங்கம் அதே அடிப்படையில் தொழிலாளர்கள் வரி அதிகரிப்புக்கும் பணவீக்க அதிகரிப்புக்கும் முன்னர் பெற்ற கடனில் ஒரு பகுதியை ஏன் குறைக்கக் கூடாது? அரச கடன்களுக்கு நியாயமாகப்படும் அதே விதி ஏன் ஊழியர்கள் பெற்ற கடன்களுக்கு ஏற்புடையதாகக் கூடாது?
இது போன்று தொழிலாளர்களின் எரிகிற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பற்றியோ குறைந்த பட்சம் இந்தப்பிரச்சினைகள் இருப்பது பற்றியோ எந்தஒரு மே தின கூட்டத்திலும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. மே தினம் என்பதே தொழிலாளர் உரிமைகளை போராடிப் பெற்ற தினத்தை நினைவுபடுத்தும் நிகழ்வு. அந்த நிகழ்வில் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி எதுவித கரிசனையுமின்றி வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி 2048 வரை பொறுத்திருக்குமாறு கூறுகிறார் ஒருவர். தற்காலிகமாகத்தான் பதவிகளை விட்டுப்போயிருக்கிறோம் விரைவில் போன மாதிரியே திரும்பி வருவோம் என்கிறார் இன்னொருவர். அரசாங்கம் நாட்டை விற்பனை செய்யுது அதை விரட்டி அடித்து பதவிக்கு வருவோம் என்கிறார் மற்றொருவர் ஆக தொழிலாளர்களின் எரிகிற பிரச்சினைகளுக்கு எவரிடமும் உரிய தீர்வுகள் இல்லை. தெற்கே எதற்கு என்றே தெரியாமல் கூட்டமாவது கூடியது, ஆனால் வடக்கே இடம்பெற்ற கூத்தைப் பற்றி சொல்லாமல் இருப்பதே மேல்.
தேவுடா தேவுடா எங்கபக்கம் கொஞசம் பாருடா என்று மேலே உள்ளவனைக் கேட்பதைத் தவிர வேறு நாதியுமில்லை கதியுமில்லை. சிகாகோவில் சிந்திய ரத்தம் இலங்கையில் சிந்தப்படக் கூடாது.
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1 – 10
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 11
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 12
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 13
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 14
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 15
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 16
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 17
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 18