வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- இலங்கையில் ஊடகத்துறை ஆபத்தில் உள்ளது
- யாழ்.குடா நாட்டில் 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
சர்வதேச ஊடக தினம் கடந்த 3ஆம் திகதி (03.05.2023)நினைவு கூரப்பட்டது. உண்மையில் ஊடக சுதந்திரத்தை அனுபவித்த களிப்பில் இந்த ஊடக தினம் கொண்டாடப்பட வேண்டிய தினமாகும். ஆனால் துரதிஷ;டவசமாக ஒவ்வொரு வருடமும் மே 3 ஆம் திகதி என்பது ஊடக சுதந்திரத்தைக் கொண்டாடும் தினமாக அன்றி ‘மரணித்துப்போன ஊடக சுதந்திரத்திற்காக‘ ஆகுதியாகிய ஊடக நண்பர்களை கனத்த இதயத்துடன் நினைவு கூரும் ஒரு தினமாகவே மே 3ஆம் திகதி அமைந்துவிட்டது.
உண்மையில் ஊடகத்துறை சகாக்களின் மரணங்கள் தருகின்ற வலியுடன்கூடிய கனத்த இதயத்துடன் நினைவு கூரும் ஒரு தினமாகவே மே 3ஆம் திகதி அமைந்துவிட்டது.
இந்த வருடமும் அதே அதிர்ச்சி: சூழலும் படுகொலையான சகாக்களின்
ஆத்மா அடங்கிப்போன நிலையில் இன்றும் நீதிக்காக காத்திருக்கும் அந்தப் பயங்கரச் சூழலே வியாபித்திருக்கின்றது. இன்றும் நீதி இருட்டறைக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது,முடக்கப்பட்டுக் கிடக்கின்றது.
- ஐ.நா பொதுச் சபையால் உலக ஊடக சுதந்திர தினம் அறிவிக்கப்பட்டது
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டின் பரிந்துரையை பின்பற்றி, டிசம்பர் 1993 இல் ஐ.நா பொதுச் சபையால் உலக ஊடக சுதந்திர தினம் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, ஒவ்வொரு மே 3 அன்று, யுனெஸ்கோ பிரகடனத்தின் ஆண்டு நினைவு உலக ஊடக சுதந்திர தினமாக உலகம்முழுவதும்கொண்டாடப்படுகிறது.
‘உலக ஊடக சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டுமூன்றுதசாப்தங்கள் கடந்துவிட்டன
- பயங்கரவாதத் தடைச் சட்டம்
இலங்கையில் கடந்த நான்கு தசாப்தங்களுக்குமேல் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் உள்ளது.இந்தச் சட்டம் இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களை குறி வைத்தே கொண்டுவரப்பட்டது.இந்தச் சட்டத்தால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல தமிழ் ஊடகத்துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. உண்மையில் கூறுவாதாயின் இந்தச் சட்டம் தமிழ்மக்களையும் தமிழ் ஊடகத்துறையையும் திறந்த வெளிச் சிறைச்சாலை கைதிகளாக ஆக்கியது. அரச பயங்கரவாதமும் பாதுகாப்பு கட்டமைப்புக்களும் காடையர்களும் தமிழ் மக்களையும் தமிழ் ஊடகத்துறையினரையும் வேட்டையாட பயங்கரவாத தடைச்சட்டம் ‘லைசன்ஸ்‘; வழங்கியது.
புயங்கரவாத தடைச் சட்டத்தின் கோரப் பிடிக்குள் தமிழ் மக்களும் தமிழ் ஊடகத் துறையினரும் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை அமைதி காத்தது. இன்று ‘எமக்கு நாளை உங்களுக்கு‘ என தமிழர் தரப்பில் இருந்து எழும்பிய குரல்களும் மரண ஓலங்களும் தென்னிலங்கை மக்களின் செவிகளைத் திறக்க திராணியற்று போயின.
- ‘அரகலய’உணர்த்திய உண்மை
ஆனால் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ‘சிஸ்டம் சேன்ஜ்‘கருத்தியலை முன்வைத்து ‘அரகலய‘ போராட்டம் வெடித்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டம் சிங்கள மக்கள் மீது பாய்ந்தது.இந்தச் சட்டத்தின் கொடூரத்தை எதிர் கொண்ட தென்னிலங்கை மக்கள் தற்போது சகல வழிகளிலும் முடக்கப்பட்டுக் கிடக்கின்றனர். இது போதாதென்று ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கம் ஒட்டு மொத்த இலங்கையின் ஜனநாயகத்தையே முடக்கிவிடும் வகையில் பயங்கரவாதத் தடுப்பச் சட்டத்தை கொண்டுவர ஆயத்தமாகிவிட்டது.
இன்று இலங்கையின் ஒட்டு மொத்த மக்களுக்கெதிராக மட்டுமின்றி ஊடகத்துறைக்கு எதிராகவும் பாய்வதற்கு ஏதுவாக ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கத்தினரால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தை எதிர் கொண்டநிலையில் மக்களும் ஊடகத்துறையும் உள்ளனர்.அதாவது ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கம் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதே உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்ட முன்மொழிவாகும்.
- International Federation of Journalists
பயங்கரவாததடுப்புச்சட்டமூலம் (ATA)ஊடகவியலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று International Federation of Journalists அமைப்பு சுட்டிக் கட்டியுள்ளது
இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் (ATA) 1979 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA ) பதிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மூலம் நடைமுறைக்கு வருமாயின்
- ஒன்று கூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை மேலும் மோசமாக்கும்.
- கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை கடுமையாகக் குறைக்க அச்சுறுத்துகிறது. என்று பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFJ ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் (IFJ) அதன் இலங்கை துணை நிறுவனங்களான இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் (SLWJA), ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (FMETU ), சுதந்திர ஊடக இயக்கம் (FMM ) ஆகியவற்றுடன் இணைந்து இந்த சட்டமூலத்தை கடுமையாக கண்டிக்கிறது.
மற்றும் உத்தேச வரைவை திரும்பப் பெறவும் தண்டனைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யவும் இலங்கைஅதிகாரிகளை மேற்படி அமைப்பு வலியுறுத்துகிறது
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நிறைவேற்றப்பட்டால்,இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள்,ஊடகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஜனநாயக விரோத மற்றும் தன்னிச்சையான ‘பயங்கரவாத நடவடிக்கைகளின்‘ கீழ் சட்டரீதியான துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் சுதந்திரமான ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அடைவதில் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளமையை மறுப்பதற்கில்லை.
ஆனால் பல நாடுகளில் சுதந்திர ஊடகங்களின் பெருக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் எழுச்சி ஆகியவை தகவல்களின் இலவச ஓட்டத்தை செயல்படுத்துகின்றன.
எனினும் ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம் என்பன தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இது ஏணைய
மனித உரிமைகளின் இயக்கத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
ஐநாவின் கூற்றுப்படி, சர்வதேச சமூகம் பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது: மோதல்கள் மற்றும் வன்முறை, தொடர்ச்சியான சமூக–பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ,இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சவால்கள்.
அதே நேரத்தில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான நிறுவனங்களில் கடுமையான தாக்கத்துடன், ஆன்லைன் மற்றும் தளங்களிலும் தவறான தகவல்களும் பெருகி வருகின்றன.
இந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காகவே, ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தகவல் அணுகல் ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 19 வது பிரிவில் உள்ள கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்ற அனைத்து மனித உரிமைகளையும் அனுபவிப்பதற்கான ஒரு முன்நிபந்தனை மற்றும் இயக்கி அல்லது காவலனாகும்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுளின்படி
2022 இல் உலகளவில் 57 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
. உலகில் பத்திரிகைத் தொழிலை மிகவும் ஆபத்தான தொழிலாகக் கருத முடியாது. ஆனால் தொழில்துறையின் சில பிரிவுகளில் நுழைபவர்களுக்கு ஆபத்துகள் தெளிவாக காத்திருக்கின்றன..
2012 இல் 147 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட ஒரு உச்சகட்டத்திற்குப் பிறகு,அதிர்ஷ்டவசமாக எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் 2021 இல் 2003க்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
2020 ஆம் ஆண்டில் ஈராக்கில் ஆறு பத்திரிகையாளர் கொலைகளும் பாகிஸ்தானில் நான்கு மற்றும் இந்தியாவில் நான்கு பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டதாக பிராந்திய வாரியாக பத்திரிகையாளர் இறப்பு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அவற்றில் சில துரதிர்ஷ்டவசமாக குறிப்பாக கொடூரமான.கொலைகளாகும்.
ஊடகவியலாளர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடு மெக்சிகோ. 2020 இல் எட்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். மெக்சிகோவில் உள்ள பத்திரிகையாளர்கள் அரசியல் ஊழலை அம்பலப்படுத்த அல்லது விளம்பரப்படுத்த முயற்சிப்பதற்காக அடிக்கடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்படுகிறார்கள், மேலும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எட்டு முதல் பத்து ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் (2003-2022) 1,668 பத்திரிகையாளர்கள் உலக அளவில்
கொல்லப்பட்டனர். சராசரியாக ஆண்டுக்கு 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) கடந்த 20 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் புள்ளிவிவரங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்துள்ளது
கொலைகள், ஒப்பந்தக் கொலைகள், பதுங்கியிருந்து தாக்குதல்கள், போர் வலய மரணங்கள் மற்றும் மரண காயங்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுதல் என பல வழிகளில் ஊடகவியலாளர்களின் கொலைகள் இடம்பெறுகின்றன.
கடந்த இரண்டு தசாப்தங்களில் (2003-2022) RSF இன் கணக்கீடுகளின்படி உலகளவில் 1,668 பத்திரிகையாளர்கள் தங்கள் பணி நிமித்தம் கொல்லப்பட்டுள்ளனர்.
. 2000 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,787 ஆகும்.
- பெண் பத்திரிகையாளர்கள் படுகொலை.
2017 ஆம் ஆண்டில்இ பத்து பெண் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் (64 ஆண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக) – அந்த ஆண்டின் மொத்த ஊடக இறப்புகளில் இது 13.5% ஆகும்.
கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 81 பெண் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – மொத்த ஊடக இறப்புகளில் 4.86%..ஆகும்.
- இலங்கையில் ஊடகத்துறை
1981 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டுவரை ஊடகத்துறை சார்ந்தோர் 113 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த கீதாரஞ்சனி தனது நூலில் பதிவு செய்துள்ளார்.இவர்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் என இந்தப் பட்டியல் உள்ளது.
1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2010 ஆம் ஆண்டு மே மாதம் வரை அதாவது 11 ஆண்டுகளில் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட 19 ஊடகவியலாளர்களும் ஏன் கொல்லப்படடனர்? கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்டதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
இது தவிற மேலும் ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்தக் கொலைகள் பற்றிய நோக்கம் என்ன? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
- யாழ்.குடா நாட்டில் 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
கிடைக்கும் தகவலின்படி யாழ்.குடா நாட்டில்மாத்திரம் ஊடகத்துறை சார்ந்த 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிய முடிகின்றது.
துரதிஷ;டவசமாக இலங்கையில் ஊடகத்துறை இன்றும் இனரீதியில் மிக ஆழமாகவே பிளவுபட்டுக் கிடக்கின்றது.இந்தப் பிளவு இன்று நேற்றல்ல நுர்று வருடங்களை எட்டி நிற்கின்றது.
- பிரகீத் எக்னெலிகொட
2010 ஆம் ஆண்டில் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போயுள்ளார்.அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக சுதந்திர ஆர்வலர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
ஏல்லைகள் அற்ற ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள 2011ஆம் 2012ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் 178 நாடுகளில் 164வது இடத்தில் இலங்கை இருப்பதாகத் தரப்படுத்தியுள்ளது. 2022 ஆண்டில் 146வது இடத்தில் இருந்த இலங்கை. தற்போது 2023 இல் 135 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு வரை .நடைபெற்ற உள்நாட்டுப் போருடனும், தமிழர்களின் கிளர்ச்சியை நசுக்கியபோதுபலஊடகவியலாளர்களுக்கு எதிராக .மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கொலைகள் என்பன இன்னும் தண்டிக்கப்படாமல் விடப்பட்ட குற்றங்களுடனும் பத்திரிகை சுதந்திரப் பிரச்சினைகள் நெருக்கமாகப் பிணைந்துள்ளன.
- இலங்கையில் ஊடகத்துறை ஆபத்தில் உள்ளது
பன்முகத்தன்மை இல்லாத ஊடகத் துறை முக்கிய அரசியல் குலங்களைச் சார்ந்து இருப்பதால், இலங்கையில் ஊடகத்துறை ஆபத்தில் உள்ளது என்று RSF குறிப்பிடுகின்றது.
இந்த ஒரு பின்னணியில் இலங்கையில் ஊடகத்துறை எவ்வளவு ஆபத்தானது எத்தகைய நெருக்கடிகளைக் கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.
இலங்கையில் ஊடகத்துறை ஒருபுறம் உயிர் அச்சுறுத்தல் பயமுறுத்தல் போன்றவற்றிற்கு முகம் கொடுக்கும் அதேவேளைமறுபுறம் தொழில் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் போராட வேண்டியுள்ளது.
இலங்கையில் ரிஜ்ஜர்டி சொய்சா முதல் நடேசன், தராக்கி சிவராம், சுகிர்தராஜ் சுப்ரமணியம், நிமலராஜன், லசந்த விக்ரமதுங்க வரை இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கொலைகள்குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவில்லை;
ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் சோனாலி சமரசிங்க ஐ.பி.எஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் நடந்த இரண்டு உயர்மட்ட கொலைகளும் அரசியல் உயரதிகாரிகளின் பத்திரிகை விமர்சனங்களை மௌனப்படுத்தவே மேற் கொள்ளப் பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார்.
ரிச்சர்ட் டி சொய்சா விடயத்தில், தனது ஊடகவியலுக்கான இறுதி விலையை செலுத்திய முதலாவது இலங்கை ஊடகவியலாளர் அவர்தான் என்று சமரசிங்க கூறினார்.
- பான் கீ மூன் கோரிக்கை
உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம்கோரியுள்ளார்.
டைம் பத்திரிகையின் தலையங்கம் அவரது மரணம் ‘டைமைக்கு தனிப்பட்ட இழப்பு‘ என்று கூறியது.
ஐக்கிய நாடுகள் சபை உலக ஊடக சுதந்திர தினத்தை நினைவுகூர்ந்த நிலையில் விக்கிரமதுங்க கொலையில் சந்தேக நபர்களில் ஒருவர் – விசாரணை அல்லது வழக்குத் தொடரப்படாமல் – இராஜதந்திரி பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கைதூதரகத்திற்குஅனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
- ஈடுகட்ட முடியாத இழப்பாகும்
ஊடகவியலாளர்கள்‘ தகவல் சேகரிப்பு, உண்மையைத் தேடுதல் மற்றும் பத்திரிகை மீதான ஆர்வம் ஆகியவற்றிற்காக தங்கள் வாழ்க்கையைச் செலவழித்தவர்களின் முகங்கள், ஆளுமைகள், திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை உள்ளன.அந்தவகையில் ஊடகவியலாளர்களின் இழப்பு என்பது ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.
- பொறுப்புக்கூற வேண்டும்’ அரசாங்கங்களுக்கு அழைப்பு
‘கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்‘ தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டேவிட் கேய், ‘பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமான அனைவரையும் விசாரித்து பொறுப்புக்கூற வேண்டும்‘ என்று அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ரிஜ்சர்டி சொய்சா முதல் தராக்கி சிவராம், லசந்த விக்ரமதுங்க வரை நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களைக் கொலை செய்யத் தூண்டிய சக்திகள் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் என்ன? என்பதுகுறித்த வினாக்கள் விடை இன்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த அவிழ்க்கப்படாத முடிச்சுகள் மர்ம முடிச்சுக்களாகவே இருக்கப் போகின்றனவா, என்பதே இன்றைய கேள்வியாகும்.
இலங்கையில் கொலைஞர்களும், கொலையாளிகளும் மர்ம நபர்கள் அல்ல என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியும். அதனைத்தான் IPS வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட கொலைகள் பற்றிய பரவலான நம்பிக்கை ஒரு கொடிய முரண்பாட்டை முன்னிறுத்துகிறது: மறைந்த கை எப்போதும் தெரியும். ஆனால் கைரேகைகள் காணாமல் போய்விட்டன ஏன்று IPS– குறிப்பிடுவதை இங்கு பதிவு செய்தல் பொருந்தும்.
இலங்கையில் கொலையாளிகளும் கொலைகளுக்குக் காரணமான சக்திகளும் எவ்வாறு தப்பிவிடுகின்றனர் என்பது மாத்திரமல்ல சுதந்திரமாக உலாவர அனுமதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது சான்றாகும். மொத்தத்தில் கொலையாளிகளிடமே நீதி கேட்டு நிற்க வேண்டிய பரிதாப நிலையில் இலங்கையில் ஊடகத்துறை உள்ளது.