நடராசா லோகதயாளன்
கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் இலங்கை, கிடைக்கப்பெற்ற சில நிதியுதவிகளையும் வீணடித்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள், சர்வதேச நன்கொடை நிறுவனங்கள் மீதே தற்போதும் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதர நெருக்கடியை சற்றேனும் தீர்க்கும் முகமாக வாக்களிக்கப்பட்ட நிதியுதவிகள் மற்றும் கடன்களும் இன்னும் முற்றாக வந்து சேரவில்லை.
இவ்வாறானதொரு சூழில், சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவனமொன்றின் நிதியை வீணடித்த சம்பவமொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நாடு முழுவதும் அதியுச்ச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அத்தியாவசியப பொருட்களுக்க நீண்ட வரிசைகள் காணப்பட்டன. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக, அனைத்துப் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாகவும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. அந்த படங்கள் சர்வதேச அளவில் இலங்கையில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.
இந்த நிலையில், ஏற்கனவே போர்க்காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த அனுவபம் மிக்க யாழ்ப்பாண மாவட்டம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாகச் செயற்படும் வகையில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாரானது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் காணப்படுகின்ற நீண்ட வரிசைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சுமுகமான முறையில் எரிபொருளை வழங்குவதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
குறிப்பிட்ட விடயத்தினை கையாண்ட யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன் வைத்த கோரிக்கை அமைவாக, ஐ நாவின் ஒரு அங்கமான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி) கடந்த ஆண்டு 15 இலட்சம் வரையிலான நிதியை உடனடியாக வழங்கியிருந்தது. அது முதற்கட்ட நிதியுதவியாகவும் கருதப்பட்டது.
ஆனால், குறித்த நிதியைப் பயன்படுத்தி யாழ்.மாவட்ட செயலகம் முன்னெடுத்த நடவடிக்கையானது, எள்ளளவும் நகராது தற்போது வரையில் அந்த 15 லட்ச ரூபா தொகையானது வீணாகச் செலவிடப்பட்டதாக மாறியுள்ள துரதிஷ்டமான நிலைம இப்போது தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவிலும் வாழும் மக்களிற்கும் எரிபொருள் பங்கீட்டு அட்டையை விநியோகித்து அதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்ய முடியும் என்பது தான் யாழ்.மாவட்டச் செயலகத்தின் திட்டமாக இருந்தது.
இதற்காக எரிபொருள் பங்கீட்டு அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. அவ்வாறு அச்சிடப்பட்ட பங்கீட்டு அட்டைக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தால் வழங்கப்பட்ட நிதியே செலவழிக்கப்பட்டுள்ளமை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக, யாழ்.மாவட்ட செயலகம் எரிபொருள் பங்கீட்டு அட்டைகளை 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15 ஆம் திகதி அச்சிட்டுப் பெற்றுக்கொண்டுள்ளது. அதனையடுத்து குறித்த எரிபொருள் பங்கீட்டு அட்டைகளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக விநியோகித்து அவற்றை கிராம சேவகர்கள் பூரணப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டிற்காக, மாவட்டச் செயலகமானது, 2 இலட்சத்து 943 பங்கீட்டு அட்டைகள் அச்சிடப்பட்டு அதற்காக மாவட்டச் செயலகம் 15 இலட்சத்து 46 ஆயிரத்து 531 ரூபா 20 சதத்தை செலவிட்டுள்ளது என்று மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன் ஒப்பமிட்டு உறுதி செய்துள்ளார்.
எரிபொருள் விநியோக அட்டை அச்சிட்ட செலவான 15 இலட்சத்து 46 ஆயிரத்து 531 ரூபா 20 சதம் 2022-07-15 ஆம் திகதிய சிட்டையின் பிரகாரம் யாழ். நகரில் உள்ள தனியார் பதிப்பகத்திற்கு 6344 இலக்க சிட்டைக்காக தீர்ப்பனவு செய்யப்பட்டுள்ளமையும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபரும் தகவல் உத்தியோகத்தருமான ம.பிரதீபன் மற்றும் கணக்காளர் ஒப்பமிட்டு வழங்கியுள்ள பதிலில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கான பங்கீட்டு அட்டைகள் குறித்த தொகையினருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு எஞ்சியவை மாவட்ட செயலகத்தில் தேக்கமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமை ஏற்படுவதற்கு, 2022ஆம் ஆண்டு 8ஆம் மாதம் கியூ.ஆர் முறைமையை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியமை தான் காரணம் என்றும் யாழ்.மாவட்ட செயகலத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, எரிபொருள் விநியோகத்திற்கான அட்டைகளை மக்களின் பாவனைக்கு விநியோகிப்பதற்கு முன்னால், மத்திய அரசாங்கம் கியூ. ஆர் கோட் முறையை அறிமுகப்படுத்திவிட்டது. அதனால் அச்சடிக்கப்பட்ட அட்டைகளுக்கு தேவையில்லாமல் சென்றுவிட்டது. யு என் டி பி அமைப்பிடமிருந்து உரிய நேரத்தில் உதவியாக கிடைக்கபெற்ற பணத்தை ஏன் உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் வகையில் நடைமுறைபடுத்தவில்லை என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அது முறையாக திட்டமிட்டு உரிய நேரத்தில் உரிய வகையில் செயல்படுத்தப்பட்டிருந்தால் அந்த பண விரயத்தை தடுத்திருக்க முடியும்.
குறித்த பங்கீட்டு அட்டைகள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தால், யாழ்.மாவட்டத்திற்கு மட்டும் சொற்பகாலத்திற்கு குறித்த பங்கீட்டு அட்டைகள் மூலமாக எரிபொருள் விநியோகத்தினைச் செய்திருக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன்மூலமாக, பங்கீட்டு அட்டைகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, ஐ நா நிறுவனத்தின் நிதியும் வீணாக விரயமாக்கப்பட்டிருக்க மாட்டாது என்று யாழ்.மாவட்ட செயலகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது தேக்கமடைந்துள்ள நிலையில் உள்ள பங்கீட்டு அட்டைகளுக்கான செலவீனம் தொடர்பில் யாழ்.மாவட்டத்தின் எந்தவொரு அதிகாரியும் பொறுப்புக்கூறுவதற்கு தயாராக இல்லை. அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பை நோக்கியே சுட்டு விரல் நீட்டுகின்றனர்.
அச்சிடப்பட்ட அட்டைகளை உரிய நேரத்திற்கு பயன்பாட்டிற்கு அளிக்காமல், அது யாருக்கும் பயனில்லாமல் சென்றதற்கு எந்த பொறுப்புக்கூறலும் இதுவரை இல்லை. யாழ்ப்பாணம் கொழும்பையும், கொழும்பு யாழ்ப்பாணத்தையும் குறை கூறுவதாகவே நிலைமை உள்ளது.
ஐ நா அமைப்பும் தாங்கள் அளித்த நிதி ஏன் வீணடிக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை கேட்டுப் பெற்றதாக தகவல் இல்லை.
அதேநேரம், நெருக்கடி காலத்தில் நிதிவழங்கிய ஐ நா நிறுவனமான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தாம் வழங்கிய நிதிக்கான பின்னூட்டத்தை எவ்வாறு மதிப்பீடு செய்யப் போகின்றது என்பதும் இங்குள்ள பிரதான கேள்வியாகின்றது.
அதுமட்டுமின்றி, எதிர்வரும் காலங்களில் உள்ளூர் வளர்ச்சித் தேவைகள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யு என் டி பி அமைப்பு பணம் கொடுக்க முன்வருமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.