ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி நின்று தீச்சுடரை ஏற்றி அழுவது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. தீச்சுடரின் முன்னே நின்று உணர்ச்சிகரமான ஒரு சூழலில் பிரகடனங்களை வாசிப்பது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. இவை இரண்டையும் விட அது ஆழமானது.
ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தொகையாகக் கூடி துக்கத்தை வெளிப்படுத்தும்போது, ஓருணர்ச்சிப் புள்ளியில் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகம் ஒன்று திரள்கிறது.ஆனால் அதற்கும் அப்பால் கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும். அரசியல் ஆக்க சக்தியாக மாற்றப்படாத கூட்டுத் துக்கம் காலகதியில் வடிந்து போய்விடும்.காலம் எல்லாக் காயங்களையும் குணப்படுத்தும். எனவே காலகதியில் துக்கத்தின் கூர் மழுங்கிவிடும். அதனால் ஒரு சமூகத்தின் கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றும் செயற்பாடுகளை பரந்துபட்ட அளவில் பொருத்தமான விதங்களில் நிறுவனமயப்படுத்த வேண்டும். அதைத் தனிப்பட்ட மக்கள் பிரதிநிதியின் வாக்கு வங்கியாகவோ, அல்லது ஒரு கட்சியின் வாக்கு வங்கியாகவோ, உருமாற்றம் செய்யும் அரசியல்வாதிகளால் ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்கசக்தியாக மாற்ற முடியாது. கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் கூட்டுத் துக்கம் அவ்வாறு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே வடிந்து போய் விடுகிறது.
எனவே ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுத் துக்கத்தை எப்படி கூட்டு ஆக்க சக்தியாக அரசியல் ஆக்க சக்தியாக மாற்றலாம் என்று தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும்.அதுதான் மெய்யான பொருளில் மே18ஐ நினைவு கூர்வதாக அமையும்.இது முதலாவது.
இரண்டாவது,இறுதிக்கட்டப் போரில் சிக்கிச் சின்னாபின்னமாகிய குடும்பங்களுக்கு உதவிசெய்வது. பதினான்கு ஆண்டுகளின் பின்னரும் போரின் விளைவுகளில் இருந்து எழ முடியாமல் தத்தளிக்கும் குடும்பங்கள் பல உண்டு. போரில் குடும்பத் தலைவரை, அல்லது குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நபரை,அல்லது உழைக்கும் நபரை, அல்லது வருமான வழியை இழந்த குடும்பங்கள் உண்டு.
போரில் ஏற்பட்ட சொத்திழப்பிலிருந்து மீண்டெழாத குடும்பங்கள் பல உண்டு. அவர்களுக்கெல்லாம் உதவி வேண்டும். தியாகிகளின் வீடுகளில் அல்லது முன்னாள் இயக்கத்தவர்களின் வீடுகளில் அடுப்பெரியாதபோது முள்ளிவாய்க்காலில் சுடரை ஏற்றுவதில் எந்தப் பொருளும் இல்லை. எனவே போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எல்லாருமாகச் சேர்ந்து உதவ வேண்டும்.
அது தானதர்மம் அல்ல,கருணைச் செயலும் அல்ல. மாறாக அது ஒரு தேசியக் கடமை. தேசத்தைக் கட்டியெழுப்புவதின் ஒரு பகுதி. இடிந்துபோன குடும்பங்களை, நொறுங்கிப் போன உள்ளங்களை மீளக்கட்டி எழுப்புவது. இறந்தவர்களின் ஆத்மா அப்பொழுதுதான் சாந்தி அடையும்.
மூன்றாவது, முன்னாள் இயக்கத்தவர்களை அவர்களுடைய நிலையிலிருந்து விளங்கிக் கொள்வது.இலங்கைத் தீவில் அதிகம் பாதிப்படையக்கூடிய (most vulnerable) ஒருதரப்பு எதுவென்றால் முன்னாள் இயக்கத்தவர்கள்தான். புனர்வாழ்வு ஒரு தண்டனை அல்ல என்பதே கடந்த 14 ஆண்டு கால நடைமுறை ஆகும். அதனால் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் சந்தேகிக்கப்படவும் கைது செய்யப்படவும் தண்டிக்கப்படவும் முடியும்.அதாவது ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தண்டிக்கப்படுவது. இந்த அடிப்படையில் கூறின் இலங்கை தீவில் அதிகம் ஆபத்துக்குள்ளாக கூடிய ஒரு தரப்பாக அவர்கள் காணப்படுகிறார்கள். போராட்டத்தில் இணைந்து கல்வியை இழந்தவர்கள், கை, கால்களை, உறுப்புகளை இழந்தவர்கள், சந்தோஷத்தை இழந்தவர்கள், இப்பொழுது உதிரிகளாக நிற்கிறார்கள். அவர்களுக்கென்று அமைப்புகள் இப்பொழுது உருவாக்கப்பட்டாலும்கூட, அவர்கள் இப்பொழுதும் சமூகத்தில் மிகவும் பாதிப்படைந்த ஒரு தரப்பாகவே காணப்படுகிறார்கள்.
அவர்களைத் தடுப்பில் வைத்திருந்த தரப்புக்கள் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்களுடன் தொடர்பைப் பேணுவார்கள்.அவ்வாறு பேணுவதன் மூலம் அவர்களுடைய நடமாட்டங்களை அவர்கள் கண்காணிக்கலாம். அதோடு, எந்த மக்களுக்காக அவர்கள் போராடினார்களோ, அந்த மக்களே அவர்களைப் புறக்கணிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தலாம்.அதாவது அரசு தரப்புடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் என்று கூறி சொந்த மக்களே அவர்களை அவமதிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்துவது.அதன்மூலம் முன்னாள் இயக்கத்தவர்கள் மட்டும் விரக்தியுறப் போவதில்லை, மாறாக இனி ஒரு காலம் இந்த சமூகத்துக்காக போராட யாருமே முன்வர மாட்டார்கள். ஏனென்றால் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தவர்களுக்கே இதுதான் மதிப்பு என்றால் இனி யார்தான் இந்த சமூகத்துக்காக போராட முன் வருவார்கள்?
முன்நாள் இயக்கத்தவர்கள் பலர் தமிழ்த் தேசியம் என்று கூறிக் கொள்ளும் மூன்று கட்சிகளிலும் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர்கூட பெறுமதியான வெற்றியைப் பெறவில்லை. இந்த விடயத்தில் முன்னாள் இயக்கத்தவர்களின் கட்சியை புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர்கள் என்று விமர்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இருந்து தேர்தல் கேட்டவர்களும் கூட வெற்றி பெறவில்லை. நாளைக்கு இந்த முன்னாள் இயக்கத்தவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோரை பார்த்து “நீ செய்த தியாகத்துக்கு இந்தச் சமூகம் உனக்கு ஒரு வட்டாரத்தில் வெல்லத் தேவையான வாக்குகளைக்கூட வழங்கவில்லையே? ” என்று கேட்டால் அந்த முன்னாள் இயக்கத்தவர் தன் பிள்ளைக்கு என்ன பதிலைச் சொல்வார்?
எனவே இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது அந்த யுத்த களத்தில் உயிரைக் கொடுத்து போராடத் தயாராக இருந்த முன்னாள் இயக்கத்தவர்களை அவர்களுடைய நிலையில் இருந்து விளங்கிக் கொள்வதுதான். குறைந்தபட்சம் அவர்களை அவமதிக்காமலாவது விடுவது.
நாலாவது, ஒரு தேசமாக ஐக்கியப்படுவது.இறுதிக்கட்டப் போரில் மட்டுமல்ல ஈழப்போரில் இதுவரையிலும் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன அனைவருமே ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள்தான். எனவே அவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதை எனப்படுவது, அந்தத் தேசத்தைக் கட்டியெழுப்புவதுதான். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதில் பொருத்தமான பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்களா?
கிழக்கில், கிழக்கு மையக் கட்சி வாக்கு பலத்துடன் காணப்படுகிறது. தமிழ்ப் பகுதிகளில் மத முரண்பாடுகள் நிறுவனமயப்பட்டு வருகின்றன. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அச்சங்களைப் போக்கும் வேலைத்திட்டங்கள் தமிழ்த் தேசியவாதத்தைப் பேசும் சக்திகள் மத்தியில் பலமாக இல்லை. இதை இன்னும் ஆழமாகச் சொன்னால், தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்ற விளக்கம் தமிழ்த் தேசியவாத சக்திகள் பலரிடம் இல்லை.இவ்வாறாக,பிராந்தியமாக, சாதியாக, சமயமாகப் பிரிந்து காணப்படும் ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகக் கட்டி எழுப்பவல்ல தலைமைகளும் இல்லை, கட்டமைப்புகளும் இல்லை.எல்லாக் கட்சிகளின் பெயர்களிலும் தேசியம் என்ற வார்த்தை உண்டு. ஆனால் அதன் பொருள் எந்த கட்சிக்கும் விளங்கியிருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில் ஒரு தேசமாகத் திரளும் சந்தர்ப்பங்கள் குறிப்பாக மூன்றுதான். ஒன்று, ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிக்கும் பொழுது. இரண்டாவது, முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தல். மூன்றாவது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போன்ற பேரணிகளின்போது.
இதில் ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பது என்பது கடந்த 14 ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் காணப்பட்ட ஒரு பொதுப் போக்கு ஆகும். ஆனால் அந்த ராஜபக்சகளோடு கூட்டிச்சேரும் கிழக்கு மையக் கட்சியானது, கிழக்கில் தனக்கென்று வாக்கு வங்கியைப் பெற்றிருப்பதானது, தமிழ் மக்கள் தேசமாகத் திரள்வதிலிலுள்ள சவால்களைக் காட்டுகின்றது.
இதுதவிர நினைவு கூர்தலின் போதும் குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு நாளின்போது தமிழ் மக்கள், கட்சிபேதம் , இயக்கபேதம் கடந்து ஒன்றாகத் திரள்வதுண்டு. தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உலகத் தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிப் புள்ளியில் இணைக்கும் நாளாக மே 18 காணப்படுகின்றது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரளும் மிக அரிதான ஒரு சந்தர்ப்பம் நினைவு கூர்தல் எனலாம். இறந்தவர்களின் பெயராலாவது தமிழ் மக்கள் அவ்வாறு ஒப்பீட்டளவில் பெரிய திரளாகக் கூடுவதை கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ஊக்குவிக்க வேண்டும். அதைச் சிதைக்கக் கூடாது.தமிழ் மக்கள் மத்தியில் உள்ள உளநல மருத்துவராகிய சிவதாஸ் கூறுவது போல நினைவு கூர்தல் என்பது காயங்களைக் குணப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிதான். காயங்களைக் கிளறும் ஒரு நிகழ்ச்சி அல்ல.
தமிழ்க் கட்சிகளை இப்போதைக்கு இனியாரும் ஒன்று சேர்க்க முடியாது. அவ்வாறு சேர்ந்தாலும் அதிசயங்கள் அற்புதங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை.கட்சிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆனால் தமிழ் மக்கள் இயல்பாக ஒரு தேசமாகத் திரளக்கூடிய தருணங்களையாவது குழப்பாமல் இருக்க வேண்டும். இறந்தவர்களுக்கு இப்பொழுது கட்சிகளும், செயற்பாட்டாளர்களும், பொதுக் கட்டமைப்புகளும், பல்கலைக்கழக மாணவர்களும் செய்யக்கூடிய ஆகப்பெரிய அஞ்சலி அதுவாகத்தான் இருக்கும்.