யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
”அந்த விகாரை அகற்றப்பட மாட்டாது, அதை அகற்றச்சொல்லிக் கேட்பதில் நியாயமில்லை, அது பௌத்தமயமாக்களுக்கு வழி வகுக்கிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும்” இப்படியான குரல்கள்- தையிட்டி பௌத்த விகாரை தொடர்பில்- இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணியில் அந்த விகாரை கட்டப்பட வாதப் பிரதிவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வடக்கே நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களின் வழிபாட்டிற்காக இந்த விகாரை அமைக்கப்படுகிறது என்று இராணுவத் தரப்பு கூறுகிறது. அப்படியென்றால் அதை இராணுவ முகாம்களிற்குள் அமைக்காமல் ஏன் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணியில் அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்நிலையில் தையிட்டி விகாரை உட்பட சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு விரைந்து முடிவு கட்டவேண்டும் என இந்தியத் தூதுவரிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
”சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு முடிவு கட்டவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால்பாக்லேயிடம் வலியுறுத்தினேன். இதே கருத்துக்களை ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் முன்வைப்பேன்” என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உள்ளூர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (அதாவது உதயன் பத்திரிகை உங்கள் கைகளில் கிடைக்கவுள்ள வெள்ளிக்கிழமை (12) மற்றும் அதற்கு முதல் நாள் வியாழக்கிழமை) இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு-கிழக்குப் பகுதியைச் நேர்ந்த நாடாளுமன்ற குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடவுள்ள நிலையில், சம்பந்தன் அவர்கள் இந்தியா சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.
சம்பந்தன் அவர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, அதை புதுடில்லிக்கு அனுப்பவுள்ளதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதே வேளை, இந்திய அரசால் இந்த விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இயலும் என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன. இந்தியா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் கொடுக்கும் எவ்விதமான அழுத்தமும், சீனாவிற்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா கண்ணும் கருத்துமாகவுள்ளது.
இதனிடையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடனான சந்திப்பில் விவாதிக்கப்படும் விடயங்கள் முழுமையாக தெரிய வருவதற்கு முன்னர் உதயன் இதழ் உங்கள் கைகளில் இருக்கும் என்று நம்புகிறேன்.
சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ள நிலையிலேயே, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திடீரென இரா.சம்பந்தனை நேரில் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு பிறகே சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்
”யாழ்ப்பாணம் தையிட்டியில் தமிழ் மக்களின் காணியில் சட்டவிரோதமாகப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த சட்டவிரோத நடவடிக்கை வடக்கு கிழக்கில் நீண்டகாலமாகத் தொடர்கின்றது. தமிழ் மக்களின் காணிகளில் சட்டவிரோதமாகப் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது மட்டுமன்றி சில இடங்களில் சைவக்கோயில்களும் தாக்கப்பட்டு வருவதுடன் அழிக்கப்பட்டும் வருகின்றன. கூடியளவுக்கு இந்தச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வந்திருக்கின்றோம்; தொடர்ந்தும் எடுப்போம்” என்று அவரது வழமையான பாணியில் ஏற்ற இறக்கத்துடன் கூறினார்.
அப்போது அதிகாரப் பகிர்வு, நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகியவை குறித்தும் பேசினார்.
”இந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டுமெனில் ஒரு நியாயமான – நிரந்தரமான – தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக எம்மாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம். அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். ஏனெனில் இந்த நாடு மீண்டெழ வேண்டுமெனில் அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும்”.
இந்த விடயங்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவசியம் பேசப்படும் என்றார் சம்பந்தன்.
”இலங்கைக்கான இந்தியத் தூதுவர் என்னை வந்து சந்தித்திருந்தார். அவரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசினேன்”.
அதேவேளை, ஏனைய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடனும் வடக்கு, கிழக்கில் தொடரும் சிங்கள – பௌத்த மயமாக்கல் மற்றும் அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும் என்பவை தொடர்பில் பேசி வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.
ஆனால், பல தசாப்தங்களாக இதே விடயங்களை திரும்பத்திரும்ப அவர் கூறி வருகிறார், ஆனால் காத்திரமான வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிற விமர்சனம் அவர் மீது தொடர்ந்து வைக்கபடுகிறது. போர் முடிந்த காலந்தொட்டே இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்பட்டு வந்தாலும், அது கானல்நீராகவே உள்ளது.
சம்பந்தன் இந்திய தூதர் கோபால் பாக்லேயைச் சந்தித்து உரையாடிய நிலையில், தையிட்டி விகாரை எக்காரணத்தைக் கொண்டும் அகற்றப்படாது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அடித்துக் கூறுகிறார்.
”அது படையினருக்காக அமைக்கப்பட்ட விகாரை, அவர்கள் வழிபட ஏற்படுத்தப்பட்டது, எனவே அதை அகற்றும் பேச்சிற்கே இடமில்லை” என்று முகத்தில் அறைந்தால் போல் கூறியுள்ளார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் சவேந்திர சில்வாவிடம் கேள்வி எழுப்பியதற்கே அதை அகற்றுவது என்கிற பேச்சே இல்லை என்று பதிலளித்தார்.
”தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன், இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்த விகாரை சட்டவிரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது” என்று சவேந்திர சில்வா வலியுறுத்துகிறார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தாலும் அதில் பல கேள்வில் தொக்கி நிற்கின்றன.
அடிப்படையில் சர்ச்சைக்குரிய அந்த விகாரை அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்குச் சொந்தமான காணி. அதில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கான என்று கூறி நிலத்தை அபகரித்து வழிபாட்டு தலம் ஒன்றை அமைப்பது அடிப்படையில் சட்டவிரோதமானது என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர். தனியார் காணியை பொது நோக்கிற்காக, உதாரணமாக ரயில் நிலையம், தபால் கந்தோர், பேருந்து தரிப்பிடம், பாடசாலை, மருத்துவமனை, அரச அலுவலகங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு எடுத்தாலும் கூட அதற்கென்று உரிய நடைமுறைகள் உள்ளன, அது பின்பற்றப்பட வேண்டும், அந்த காணி உரிமையாளர்களுக்கு சந்தை விலைக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான நடைமுறை அல்லது விதிமுறையாகும்.
ஆனால், தனியார் காணியில் இராணுவத்தினர் வழிபடுவதற்காக விகாரை கட்டுவது நல்லிணக்கத்திற்கு மாறாக இனமுரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் என்றே உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இது வடக்கே இராணுவம் தொடர்ந்து நிலை கொள்வதற்கும் அதையொட்டி வலிந்து மேலும் சிங்கள மக்கள் குடியேறுவதற்கு வழி செய்யும் என்ற அச்சமும் கவலையும் பலரிடம் உள்ளது.
இன்றளவும் நாட்டின் வடக்கே தேவைக்கு மிகவும் அதிகமாக இராணுவம் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதை அகற்ற எந்த அரசும் முன்வரவில்லை அல்லது முன்வராது என்பதே யதார்த்தமாக உள்ளது.
மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரை இன்றும் தமிழர் தாயகப் பகுதியில் இராணுவம் வியாபித்து ஏராளமான முகாம்கள் உள்ளன. அதே போன்று விடுவிக்கப்படாத தனியார் காணிகளும் ஏராளமாக உள்ளன. ஆங்காங்கே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் தேவைக்கென்று அவர்கள் வழிபடுவதற்காக தையிட்டி விகாரையைப் போன்று மேலும் பல விகாரைகளை தனியார் நிலங்களில் இராணுவம் வலிந்து அமைக்க முன்வந்தால் அதற்கு முடிவேது என்று சிவில் சமூக மக்கள் கவலை கொள்கின்கிறனர்.
இதேவேளை தையிட்டி விகாரை சட்டபூர்வமானதே அதனை அகற்றக் கோருவது நியாயமில்லை என மற்றுமோர் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். ஒரு ஜனாதிபதியாக இருந்தவருக்கு சட்டம் தெரியாதா? அல்லது நல்லிணக்கம் நாட்டிற்கு மிகவும் அவசியமானது என்பது புரியாதா என்கிற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.
”உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றக்கோருவது நியாயமான செயலன்று”. இதில் உரிய அனுமதி என்று அவர் எதைக் கூறுகிறார் என்பது தெரியவில்லை. தனியார் காணியில் இராணுவத்தினர் வழிபட விகாரை அமைப்பதற்கு சட்டரீதியாக இடமுள்ளதா என்பதை யார் கேட்பது. தமிழ் மக்களின் சார்ந்த எந்த விடயமாக இருந்தாலும் உடனடியாக சட்ட மா அதிபரிடம் கருத்துக் கேட்கப்படும் போது, தனியார் காணியை இராணுவம் ஆக்கிரமிப்பதும் அதில் அவர்கள் விரும்பியபடி கட்டுமானங்களைச் செய்வதும் நியாயமானதா என்பது பற்றி கருத்துக் கேட்கப்பட்டதா. இதற்கெல்லம் மௌனமெ பதிலாக இருக்கும்.
தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே மஹிந்த ராஜபக்ச அதை நியாயப்படுத்தும் வகையில் பதிலளித்துள்ளார்.
”எடுத்ததெற்கெல்லாம் இனவாத, மதவாத கருத்துக்களை கக்குவதை தமிழ்க் கட்சிகள் உடன் நிறுத்தவேண்டும். அமைதிவழியில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் தமிழ் மக்களை போராட்டம் என்ற போர்வையில் அவர்களை வன்முறைக்கு இட்டுச் செல்வதுதான் தமிழ்க் கட்சிகளின் இலக்காக இருக்கின்றது. அவர்களின் அரசியல் சித்துவிளையாட்டுக்களுக்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்காதீர்கள். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை உரிய அனுமதிகளைப் பெற்று அமைக்கப்பட்டது. அதனை அகற்றக் கோருவது எந்த வகையிலும் நியாயமானதில்லை” மஹிந்த கூறுகின்றார்.
ஆனால் காலச்சக்கரம் சுழலும் என்பதையும், அது அவரையும், அவரது சகோதரரையும் எப்படி சுழற்றியடித்தது என்பதை அவர் மறந்திருக்கமாட்டார். காலச்சக்கரம் குறித்து புத்த பகவான் கூறியுள்ளதையும் படைப் பிரதானியும் அறிந்திருப்பார் என்று நம்புகிறோம்.