சிவா பரமேஸ்வரன்
எந்தவொரு விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வை தேவை தான். அது நாட்டு நலன், திட்டங்கள், குடும்பம், வர்த்தகம் என்று எதிலும் அந்த சிந்தனை மற்றும் பார்வை அவசியம். அவ்வகையில் இலங்கை இன்னும் 25 ஆண்டுகள் கழித்து 2048ஆம் ஆண்டு தனது சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டைக் கொண்டாடும் போது நாடு அபிவிருத்தி அடைந்த நாடாகவோ அல்லது அந்த பாதையில் செல்ல வேண்டும் என்று அரசும் மக்களும் ஆசைப்படுவதில் தப்பில்லை. அந்த எண்ணம் இருக்கவும் வேண்டும்.
ஆனால், ஆசை என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டுள்ளார்களே என்பதில் பல கேள்விகளும் ஐயங்களும் உள்ளன.
அப்படித்தான் “அழுகிற குழந்தைக்கு வாழைப்பழத்தைக் கொடுப்பது போல்” சில விஷயங்களை ரணில் விக்ரமசிங்க சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். அவர் கட்சி சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்விற்கான வாழ்த்தில் கூறியுள்ளார். இலங்கையில் மே தின ஊர்வலம், பேரணி, பொதுக் கூட்டம் போன்ற கேலிக் கூத்துகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அந்த கூட்டங்களின் நோக்கமே அரசியல்வாதிகளுக்கு புரியவில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில், உழைக்கும் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமது பலத்தை காண்பிப்பதற்காகவே மே தின கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கையில், அது அரசியல் மயப்படுத்தப்பட்டு தொழிலாளர்கள் புறந்தள்ளப்பட்டனர். மே தின கூட்டத்தின் போது அரசியல்(வியா)வாதிகள் ஏதோ கொள்கை விளக்க பிரகடனம் போன்று இயலாத விஷயங்களை உணர்ச்சிகரமாக சொல்ல மக்கள் அதை உண்மை என்று நம்பி வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவது இலங்கையின் சாபக்கேடுகளில் ஒன்றாகிவிட்டது.
அப்படித்தான் அண்மையில் ‘பின்வாசல் வழியக ஜனாதிபதியான’ ரணில் விக்ரமசிங்க தனது கட்சியினர் முன்னெடுத்த மே தின நிகழ்விற்கான வாழ்த்தில் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதை முறை மேலோட்டமாக படிக்கும் போதும் சரி, இரண்டாவது முறையாக ஆழமாக படிக்கும் போதும் சரி, அதிலுள்ள ஓட்டைகளையும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களையும் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் அந்த வாஅழ்த்தில் தெரிவித்துள்ள பல விஷயங்கள்…..ஏன் முழுமையாகவே நடைமுறைக்கு ஒத்துவராதவை என்றே தோன்றுகிறது.
அதில் அவர் முக்கியமாக ஒன்றை குறிப்பிடுகிறார். அதாவது 2048 இலங்கைக்கான அபிவிருத்தி ஆண்டாகும் அதை நோக்கி பயணிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை நான் கூறவில்லை. ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு கூறுகிறது. 2048 ஆம் ஆண்டை இலங்கையின் அபிவிருத்தி ஆண்டாக மாற்ற நாம் கைகோர்ப்போம் என்கிறது அவரது செய்திக் குறிப்பு. அப்படியென்றால் அடுத்த கால் நூற்றாண்டிற்கு- 25 ஆண்டுகளிற்கு- இலங்கை அபிவிருத்தி அடையது என்பதாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும். அதை இரண்டு விதமாக பார்க்க முடியும் என்று கருதுகிறேன். அவர் உண்மையைக் கூறுகிறார். நாடு முன்னேற்றம் அடைய குறைந்தது இரண்டரை தசாப்தங்களாகும் என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். சரி, அவர் எண்ணப்படி இலங்கை 2048இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவதற்கு அரசிடம் என்ன திட்டத்தை வைத்துள்ளது?
இன்று நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் சொத்துகளை சீனாவிற்கு அடிமை சாசனமாக எழுதிக் கொடுக்கிறது இலங்கை அரசு. இன்னும் செலுத்த வேண்டிய கடன்கள் ஏராளம். அப்படி பார்த்தால் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டில் அரசிற்கு சொந்தமான சொத்துக்கள் ஏதும் இருக்குமா என்கிற ஐயம் எழுகிறது.
அடுத்து அவர் தெரிவித்துள்ள முத்தான கருத்து என்பது, “புதிதாக சிந்தித்து புதிய பாதையில் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை மாற்றுவோம். ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் செல்ல விரும்பியிருந்தால்-அதை ரணில் உளப்பூர்வமாக செய்ய சித்தமாக இருந்திருந்தால், இன்று கட்சி பிளவுண்டிருக்காதே! ரணிலுடைய ‘நரித்தனத்தை’ வைத்துப் பார்க்கும் போது அவர் அடுத்தவர்களை வளரவிட்டு கட்சியை உயிர்ப்பித்து அதை புதிய பாதையில் இட்டுச் செல்வாரா? உண்மையான பதில்…..இல்லை என்பதாகும்.
இன்றைய நிலையில் அது ஐக்கியமில்லாத கட்சியாக மட்டுமே உள்ளது அல்லது சிங்களத்தில் மக்கள் நையாண்டி செய்வது போல் ‘அலி ஜன பெரமுன’ அதாவது யானை மக்கள் கட்சி அல்லது யானை மொட்டுக் கட்சி என்றே அழைக்கப்படுகிறது. ராஜபக்சக்களின் தயவில்லாமல் அவரால் ஒரு சிற்றூழியரைக் கூட நாட்டில் நியமிக்க முடியாது என்பதே யதார்த்தம். அவரது சிந்தனை முழுவதும் தன்னை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய ராஜபக்சக்களிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதிலேயே இருக்கும் போது, எங்கிருந்து அவருக்கு கட்சியை வளர்த்தெடுக்க நேரமுள்ளது. அவருக்கு தற்போது 74 வயதாகிறது. அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். அவரால் இன்னும் எவ்வளவுகாலம் ஆக்கபூர்வமாக அரசியலில் ஈடுபட முடியும்?
அவர் அடுத்து தெரிவித்துள்ள முக்கியமான கருத்து, “ டி.எஸ். சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வேன்” என்பதாகும்.
இதை வாசித்த உடனேயே எனக்குள் எழுந்த கேள்வியானது அந்த இருவரும் நேர்மையாக அரசியல் செய்திருந்தால், இலங்கை இந்தளவிற்கு அழிவுப் பாதையில் சென்றிருக்காதே என்பது தான். உலகின் பல பகுதியிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இதே கருத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.
டி. எஸ் மற்றும் ஜே.ஆர் எப்படி அரசியல் செய்தனர் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் இலங்கை தொடர்பான ஆய்வுகளைச் செய்பவர்கள் மூத்த தலைமுறையினரிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
நாடு இன்று இருக்கும் பல வகையான நெருக்கடிகளிற்கு இனப் பிரச்சனை முக்கியமானதொரு காரணமாகும். இனவாதத்தை ஊட்டி வளர்த்ததில் அந்த இருவருக்கும் பெரும் பங்குள்ளது என்பதை சரித்திரம் சான்றுகளுடன் கூறுகிறது.
இலங்கை விடுதலையடைந்த அதே 1948ஆம் ஆண்டு இலங்கை குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமூலமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. நாடு விடுதலையடைந்த சமயத்தில் இலங்கையில் 700,000க்கும் அதிகமான இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்தன்ர். ஆனால், அந்த சட்டத்தின்படி 5000 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது. ஏனையவர்கள் ஒரே இரவில் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் தாக்கம் இன்றளவிற்கும் உள்ளது. அந்த சட்டத்தின்படி இந்திய வம்சாவளி மக்களிற்கு அநீதி இழைக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று நாடாளுமன்றத்தில் குறைந்தது 25 உறுப்பினர்கள் இந்திய வம்சாவளி மக்கள் இருந்திருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் இற்றைவரை இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய அம்மக்கள் நவகாலனித்துவ அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அதுவும் ஒருவகையில் ’இனப்படுகொலையே’ என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். வடக்கு-கிழக்குப் பகுதியில் அரசு ஆயுத ரீதியான போரை தொடங்கும் முன்னரே, குடியுரிமை (பறிப்பு) சட்டத்தின் கீழ் மலையக மக்கள் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் ஒரு வகையில் இனப்படுகொலைக்கு ஆளாகினர்.
ஐ நாவின் விழுமியங்களின்படி ஒரு சமூகத்தை திட்டமிட்டு அழித்தல், அவர்களது கலாச்சார பாரம்பரியத்தை நசுக்குதல், அவர்களின் உரிமைகளை பறித்தெடுத்து நிர்கதியாக்குதல் ஆகியவையும் ஒரு வகையில் இனப்படுகொலையே ஆகும். இன்றும் நாட்டிலேயே சமூக பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்களாக தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தமிழர்களே. அதே போன்று நாட்டிலேயே அதிகப்படியான மதுக்கடைகள் இருப்பதும் மலையகப் பகுதியிலேயே. அவர்கள் உழைப்பை சுரண்டி, ஈட்டும் சிறிதளவு ஊதியத்தையும் குடியின் மூலம் அவர்களிடமிருந்து பறித்து அவர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருப்பதும் ஒரு வகையில் இனைப்படுகொலை மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று பன்னாட்டு ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவையெல்லாம் நாட்டின் முதல் பிரதமர் டி எஸ் சேனநாயக்க கொண்டுவந்த சட்டத்தின் விளைவே. அவரது கொள்கைகளை தொடர்ந்து பின்பற்ற போவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி கூறுகிறார். அப்படியென்றால் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்ந்தும் துன்பங்களிற்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற செய்தியை சொல்கிறாரா ரணில்.
அடுத்து ‘நரி’ ஜே ஆர் ஜெயவர்தனவின் கொள்கையையும் பின்பற்ற போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜே ஆர் என்ன செய்தார், அதன் காரணமாக நாடு எப்படி சீரழிந்தது என்பதை உலகமே அறியும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டுவந்து சிறுபான்மையினர் எக்காலத்திலும் ஆட்சியின் தலைமைக்கு வந்துவிட முடியாதபடி செய்த புண்ணியவான் ஜே ஆர்.
தேர்தலை நடத்தாமல் தனது ஆட்சியை நீட்டிப்பு செய்து ஜனநாயகப் படுகொலையைப் புரிந்தவர் என்ற விமர்சனத்திற்கு ஆளானவர் தான் இன்றைய ஜனாதிபதியின் மாமாவான அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன. சிங்கள மொழியை ஆட்சி மொழியாகவும் பௌத்ததை நாட்டின் முதன்மை மதமாகவும் ஆக்கும் சட்டங்களிற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் ஜே ஆர் என்பது நாட்டின் அரசியல் வரலாறு.
எக்காலத்திலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக கூட என்பதில் மிகவும் தெளிவாக இருந்த ஜே அர் அதன் காரணமாகவே நாடாளுமன்ற ஜனநாயக முறையை மாற்றி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வந்தார். இதை யாராலும் மறுக்க முடியாது.
அவரால் 1978இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை நாட்டை பல தசாப்தங்கள் பின் நோக்கிக் கொண்டு சென்றது. அதன் காரணம் கடந்த 45 ஆண்டுகளாக நாடாளுமன்றம் என்ற கட்டமைப்பு பலவீனமான நிலையில் உள்ளது. அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றம் என்ற கூட்டுப் பொறுப்பிலிருந்து ஒரு தனி நபரின் ஆதிக்கத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் ஜே ஆர்.
ஜே ஆர் ஆட்சி காலத்தில் தான் தமிழ் மக்கள் மீதான வன்முறை கட்டவிழுத்துவிடப்பட்டது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் கெடுபிடிகள் அதிகரித்தன. பயங்கரவாத தடைச் சட்டம் எனும் அழிக்க முடியாத அரக்கனை கொண்டு வந்தவரும் இன்று ரணில் மேற்கோள் காட்சி சிறந்த ஆட்சியை அளிப்பேன் என்று கூறும் ஜெ ஆர் ஜெயவர்தன தான்.
தமிழ் மக்கள் மீதான ஆயுத ரீதியான அடக்குமுறைக்கு அடிகோலிட்டவரும் அவரே. பின்னர் வடக்கு-கிழக்கே ஆயுதப் போராட்டம், அதனால் நாட்டில் ஏற்பட்ட கொடுமைகள், இன்றும் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் ஆகியவை எல்லாம் வரலாற்று பக்கங்களில் பதியப்பட்டவை.
ஆக சிறுபான்மையினரை திட்டமிட்டு சீரழித்த டி எஸ், ஜே ஆர் ஆகியோரின் வழியை பின்பற்றி 2048ஆம் ஆண்டை நோக்கிப் பயணிக்கப் போவதாக ரணில் கூறுகிறார்.