யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். வேம்படி பாடசாலை மாணவர்களின் தேவைப்பாடு தொடர்பில் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகிறது என அவரிடம் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். வேம்படி பெண்கள் பாடசாலை மாணவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.
பாடசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டி சாலையை மீள செயற்படுத்துவது தொடர்பில் மாணவர்களுக்கான வடிகட்டிய நீரை வழங்குவது தொடர்பிலும் என்னிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சிற்றுண்டிச் சாலையை ஏற்படுத்துவது தொடர்பில் பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன். அவரும் அதனை செயற்படுத்துவற்கு ஆவலாக உள்ளார்.
சிற்றுண்டி சாலை அனுமதி தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக பாடசாலை அதிபர் தெரிவித்த நிலையில் அதனை விரைவுபடுத்துமாறு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தகவல் வழங்கியுள்ளேன்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வடிகட்டிய குடிநீர் தொகுதி பழுதடைந்து விட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்த நிலையில் புதிய தொகுதி ஒன்றை யாராவது முன்வந்து அன்பளிப்பு செய்தால் அதனை பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.