சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அண்மைக் காலமாக மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறி வருகிறது. ஊதிய பிரச்னை மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சங்க செயல்பாடு குறித்து வீரர்களிடம் எழுந்த அதிருப்தி உள்ளிட்ட விவகாரங்களால் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரின், தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறை டி-20 உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரே கூலே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பேன் எனவும் டேரன் சமி தெரிவித்துள்ளார்.