வவுனியாவில் சீனி பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் நேற்று (13) காலை சுற்றிவளைத்து டன் அவரிடமிருந்து 263 போத்தல் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.
தேன் என சீனி பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான தா.வாகீசன் , த.சிவரஞ்சன் , அ.விதுசன் , ஞா.ஞானப்பிரதாப் , ர.கிஷோஷான் ஆகியோர் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை ஊர்மிளா கோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனி பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றினர்.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 263 போத்தல்களில் (750 மில்லி லீற்றர் போத்தல்) அடைக்கப்பட்ட சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட சமயத்தில் சந்தேகநபரை ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.