தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பின்வரும் இரண்டு குறள்களும் ஒரு தந்தையினதும் அவரது புதல்வனதும் கடமைகளையும் அல்லது பொறுப்புக்களையும் விளக்குபவையாக எமக்கு அறிவுறுத்துகின்றன.
1 தந்தை மகட்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
2. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்
இந்த இரண்டு குறள்களுக்கும் மிகவும் பொருந்தக் கூடியவர்களாக வாழ்ந்த யாழ் மண்ணின் தந்தை ஒருவரும் தனயர் ஒருவரும் தற்போது இவ்வுலக விட்டு நீங்கியவர்களாக நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.
அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோம்.
தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான அமரர் என். சபாரத்தினம் அவர்கள்.
அவரை நாம் அதிபராக அறிந்திருக்கின்றோம் தவிர அவரிடம் கற்கவில்லை. ஆனால் எழுத்துத் துறையிலும் பத்திரிகைத் துறையில் இளம் வயதிலேயே கொண்ட ஆர்வம் காரணமாக யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகையில் அவர் எழுதி வந்த ஆசிரிய தலையங்களைப் படித்து இன்புற்று ஒரு ஆசிரிய தலையங்கம் எவ்வாறு சிந்திக்கப்பெற்று எழுதப்பட வேண்டும் என்று கற்றுக் கொண்டு கடந்த 28 வருடங்களாக அதை எமது பத்திரிகையின் ‘கதிரோட்டம்’ என்னும் ஆசிரிய தலையங்கத்தை படைத்து வருகின்றோம்.
அமரர் என். சபாரத்தினம் என்னும் முன்னாள் அதிபரது புதல்வரான சபாரத்தினம் சிவகுமார் அவர்கள் ஒரு வைததிியராகப் பணியாற்றி வந்து சில நாட்களுக்கு முன்னர் இயற்கை மரணத்தை தழுவியுள்ளார்.
அவர் தான் பிறந்த மண்ணை வீட்டு நீங்காமல் தாயகததிலேயே தங்கியிருந்து மக்களுக்கு மருத்துவச் சேவையைச் செய்ததோடு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை மாணவ மாணவிகளுக்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார் என்பது அறியப்படக் கூடியதாக உள்ளது. அவரது பிரிவால் யாழ் குடாநாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள் என்ற செய்தி எமது செவிகளை எட்டுகின்றது. மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மாலுமியை இழந்த கப்பல் பயணிகள் போன்று தவிப்பதாகவும் பேசப்படுகின்றது.
இவ்வவாறு. அற்புதமான மனிதர்களாக வாழ்ந்து வள்ளுவன் எழுதி வைத்த குறள்களின் உதாரண புருஷர்களாக மறைந்தும் மறையாதவர்களாகத் திகழ்கின்றார்கள். தொடர்ந்தும் பேசப்படுவார்கள். இதுதான் உண்மை!