வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பேச்சுவார்த்தை.
- ரணிலின் தேர்தல் வலையில் தமிழ் தலைமைகள் சிக்கலாம்! தமிழ் மக்கள் சிக்குவார்களா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நோக்கி தனக்கு ஏற்றாற் போல் நாட்டைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதற்கான பல்வேறு வியூகங்களை தமிழ் மக்கள் மீதும் தென்னிலங்கை மீதும் பிரயோகித்து வருகின்ரார்.அதாவது தனது தேர்தல் வெற்றிகளுக்காக நாட்டின் சகல தரப்பினருக்கு முன்னால் கரட் கட்டி தொங்கவிடுகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொருத்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக பதவி ஏற்க வேண்டும் அதுவே அவரது கனவு. துற்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோதும் அது மக்கள் தெரிவு அல்ல.அவரது நாடாளுமன்ற பிரவேசம்கூட மக்கள் பிரதிநிதியாக அன்றி போனஸ் ஆசனத்தின்மூலமே பிரவேசிக்கக் கூடியதாக இருந்தது.இது அவரது 46 வருடகால அரசியல் வாழ்வில் கறைபடிந்நததாக களங்கமானதாக அவர் கருதுகின்றார்.இந்தக் களங்கத்தை கறையை போக்கிக் கொள்ள ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத் தேர்தலில் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முதல் வெற்றியுடன் குறுகிய 16 வருட காலப்பகுதியில் 1993 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமரானார். ஆவர் ஒட்டு மொத்தமாக ஆறு முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். எனினும் அவர் பல முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதும் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. ஜனாதிபதியாகும் அவரது எதிர்பார்ப்பு,விருப்பம் என்பன நிறைவேறாத ஆசையாக இருந்தது.
- அரகலய வழங்கிய வெகுமதி
ஆனால் ஜக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த போனஸ் ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் ஒரு உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க நுழைந்தார்.’அரகலய‘ ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தால் நாடாளுமன்றத்தால்ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டம் அவருக்கு கிடைத்தது. .
கடந்த ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய‘ மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் தேர்தலுக்குச் செல்லுமாறு எதிர்க் கட்சிகள் அழுத்தம் கொடுத்த போதிலும் ரணில் விக்ரமசிங்க 2024 நவம்பர் வரை ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக் காலம் முடியும் வரை ஜனாதிபதியாகப் பதவி வகிக்க விரும்புகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் தனதும் தனது கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியையும் இலங்கை அரசியலில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றார். அதனை நோக்கியே இலங்கை அரசியலை தனக்குச் சாதகமான களமாக ஆக்கிக் கொள்வதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு முன்பாக பல சவால்கள் விசுவரூபம் எடுத்து நிற்கின்றன.
- ரணில் விக்ரமசிங்க ஒரு புறம் ராஜபக்ஷக்களையும் அவரது அணியினரையும் சமாளித்தாக வேண்டும்.
- எதிர்க் கட்சிகளை தன் வசப்படுத்த வேண்டும் அதற்காகவே ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் குறித்துப் பேசுகின்றார். ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்து ஏற்கனவே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளார். தேசிய அரசாங்கம் என அவர் பேசுவது சஜித் அணியினரில் இருந்து நாடாளு மன்ற உறுப்பினர்களை தனது பக்கம் இழுத்துக் கொள்வதல்ல. அந்த விடயத்தில் ரணில் விகரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. அவரது குறி எதிர்க் கட்சி தலைவரைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதாகும்.
இதன்மூலம் ஜக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்திக் கொள்ளலாம். ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியலை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.
அதே வேளையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பலமிக்க ஜனாதிபதி வேட்பாளராக சஜித்பிரேமதாச இருப்பது ரணில் விகரமசிங்கவுக்கு நன்றாகவே தெரியும்.அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருந்து ஒரு முக்கிய வேட்பாளரை நீக்கி தனது வெற்றிக்கான களத்தை திறந்து கொள்ள ரணில் விக்ரம சிங்க வியூகங்களை வகுக்க முயல்கின்றார்.
இந்தப் பயணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதில் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறத் தோன்றுகின்றது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆனால் அந்தத் தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பாக அமைந்துவிடும்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் ஒரு மகத்தான தோல்வி ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதே வேளையில் உள்ளூராட்சி சபைகளுக்கான அல்லது மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமாயின் ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் அக் கட்சியுடன் இணைந்த கூட்டணிக்கும் அமோக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகத் தொலைவில் இருப்பதாகவே தெரிகின்றது.
இந்தத் தேர்தல்களில் எதிர்க் கட்சிகளில் ஜே.வி.பி. சிறப்பாக செயற்படக் கூடிய வாய்ப்பகள் உள்ளன. அந்த வெற்றி வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையை ஜே.வி.பி தீவிரப்படுத்துகின்றது.
சட்டப்பூர்வ ஆணை ரணில்விக்கிரமசிங்கவிற்கு தற்போதைக்கு இல்லாமை பற்றிய கேள்வியையும் அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்.ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல. நாடாளு மன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானவர்.
இதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முதலில் மார்ச் 09 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் திறைசேரி தேவையான நிதியை தேர்தல் திணைக்கள த்திற்கு வழங்கவில்லை. தேர்தல் திணைக்களம் உள்ளூராட்சித தேர்தலை ஏப்ரல் 25 க்கும், தபால்மூல வாக்களிப்பை 28, 29, 30 மற்றும் 31 மார்ச் மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளுக்கும் மாற்றியது. ஆனால் தேவையான நிதிவழங்கப்படவில்லை.
இந்தப் பின்னணியில், புதிய தேதிகள் எதுவும் திட்டமிடப்படாத நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இரண்டாவது முறையாக தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்தது.
தேர்தல் திணைக்களத்தின் கூற்றுப்படிஇவாக்குச் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் தேர்தலுக்கான பிற வசதிகள் தொடர்பான எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தாமதமானது குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த செலவான 500 மில்லியன் ரூபாயில் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான 40 மில்லியன் ரூபாவை மட்டுமே திறைசேரி விடுவித்துள்ளது. எனவேஇ நிதி வழங்குவதை திறைசேரி உறுதி செய்யும் வரை தேர்தலை நடத்துவதற்கான அடுத்த தேதி அறிவிக்கப்படாது என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை காலதாமதமாக நடத்த தேவையான நிதியை நிதியமைச்சராக உள்ள விக்ரமசிங்கே நிறுத்தி வைப்பதாக கூறப்படுகிறது. அனைத்து நிதியும் ‘பொருளாதார மீட்சிக்கு‘ பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறி,தேர்தல் நிதியை தடுப்பதை நியாயப்படுத்த விக்கிரமசிங்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை தாமதப்படுத்த முயற்சித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறாது போய்விட்டது.
அதுமட்டுமின்றி, பொருளாதாரப் படுகுழியில் இருந்து இலங்கை இன்னும் மீளாத நிலையில், தேர்தலுக்குச் செல்வதற்கு இந்த ஆண்டு உகந்தது அல்ல என்ற கருத்து ரணில்விக்கிரமசிங்கவுக்கு இருக்கலாம்.
இதற்கும் அப்பால் , IMF இலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவியுடன் மோசமான பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாகச் சமாளித்ததன் பெருமையையும் ஜனாதிபதி பெற விரும்புகிறார்
- தென்னிலங்கையில் மாற்றம்
இதற்கேற்றாற்போல் தென்னிலங்கையில் இருந்து அவருக்கு சாதகமான குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.
அரசியல் ஆய்வாளர்கள் தற்போதைய பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
மேலும் இந்த சிக்கலைப் புறக்கணித்தால், அது சமாளிக்க சவாலானதாக மாறும்.
எனவே, பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
- தகர்ந்து போன வாக்குறுதிகளுடன் ரணில்
மறுபுறம் தகர்ந்து போன வாக்குறுதிகளுடன் ரணில்விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு தென்னிலங்கையைத் தயார்படுத்துவதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவார் என்ற கேள்விகளும் தென்னிலங்கையில் முன் வைககப்படுகின்றது.ஏற்கனவே அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ள தென்னிலங்கை ரணில் – ராஜபக்ஷக்களின் செயற்பாடுகளால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அத்துடன் பொருளாதார மீட்சிக்கு 2048 வரை காத்திருக்குமாறு ரணில்விக்ரமசிங்க அடிக்கடி கூறுவது மக்கள் தமது சுதந்திரத்துக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் 2048 வரை காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் தென்னிலங்கை மக்களிடம் இருந்து எழும்புகின்றது.
இதற்கும் அப்பால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவை ஆதரிப்பதென்பது இன்றைய ரணில் – ராஜபக்ஷ கூட்டணியின் ஜனநாயக விரோதப் போக்கினை அங்கீகரித்து “லைசன்ஸ்” வழங்குவதாகப் போய்விடும் என்ற கருத்தோட்டமும் தென்னிலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இதற்கும் அப்பால் ரணில் – ராஜபக்ஷ இரு அணிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இந்த முறுகல் நிலை எந் நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் சஜித் அணி சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேடபாளராக அறிவித்தள்ளது.
- தமிழர் தரப்பை நோக்கி வலை வீசும் ரணில்விக்ரமசிங்க.
மறுபுறம் ஜனாதிபதித் தேர்தலை முன் வைத்து ரணில்விக்ரமசிங்க தமிழர் தரப்பை நோக்கி காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்.
தமிழ் அரசியல் விமர்சகர்களின் கருத்தப்படி பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு தமிழ் மக்களை ரணில் விக்ரம சிங்க தள்ளியுள்ளார்.
சைவ மத தலங்கள் மீதான பௌத்த மேலாதிக்கத்தின் ஆக்கிரமிப்பு குறிப்பாக குருந்தூர் மலை , வெடுக்குநாரி சிவனாலய தாக்குதல்கள், தையிட்டி பௌத்த ஸ்தூபி, தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு என தொடர்ச்சியாக தமிழ் மக்களின் இருப்பின் ஆன்மாவையே ஆட்டம்காணும் நிகழ்வுகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ் மக்கள் மீதான நெருக்குவாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அதே வேளையில் மறுபுறம் இனவிவகாரத்துக்கான தீர்வுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக பேசி வருகின்iறார்.
75வது சுதந்திர நிகழ்வுக்கு முன் தீர்வுஎன்றார்.பிறகு13ஐநடைமுறைப்படுத்துவேன் என்று கூறினார் பிக்குகள் வீதியில் இறங்கினர். ரணில் விக்ரமசிங்க மௌனம் காத்தார். மே தின கூட்டத்தில் இனவிவகாரத்துக்கான தீர்வு காண்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புடன் லண்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் உள்ள தமிழ் புலம் பெயர் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் இனவிவகாரத் தீர்வுகுறித்து பேசியதாக செய்திகள் வெளிவந்தன.
- ரணிலின் அறிவிப்பு பரபரப்புக்கான செய்திகளே?
உண்மையில் இந்த அறிவிப்புகள் எல்லாம் ஆரோக்கியமான நகர்வுகளாக அன்றி பரபரப்பச் செய்திகளாகவே அமைந்தன.
இந்த தொடர் அறிவிப்புகள் தமிழ் மக்களை நோக்கி வீசப்படும் அதேவேளையில் தமிழ் மக்கள் மீதான நெருக்குவாரங்களும் மிக இறுக்கமாக நகர்த்தப்படுகின்றன. அதாவது” தமிழ் மக்களின் மீட்பன் நானே , ஜனாதிபதித் தேர்தலில் எனது கைகளைப் பலப்படுத்துங்கள் என்ற செய்தியை ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குக் கூறுகின்றார். இதில் ரணில் விக்ரமசிங்க ஓரளவு வெற்றியையும் ஈட்டத் தொடங்கிவிட்டார்.தையிட்டி விவகாரத்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்து ஒலித்த குரல் இவ்வாறு கூறியது.
‘இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்.நாங்கள் உங்கள் பக்கம் அணி திரள்கின்றோம்‘ என்பதாகும்.
- ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த முனையும் ரணில்
இதன்மூலம் ஜனாதிபதி ஒரே கல்லில் இரண்டு அல்ல பல மாங்காய்களை வீழ்த்துகின்றார்.
- ஜனாதிபதித் தேர்தலை நோக்கி தமிழ் மக்களை அணி திரட்டுகின்றார். தமிழ்க் கட்சிகளையும் புலம் பெயர் அமைப்புக்களையும் தனது பக்கம் இழுத்துக் கொண்டுள்ளார்.
- இனவிவகாரத்தை சர்வதேச அரங்கில் இருந்து உள் நாட்டுப் பொறிமுறைக்குள் ஈர்த்துக் கொண்டுள்ளார்.
- தமிழ்க் கட்சிகளுக்குள் பிளவினை உருவாக்குவதுடன் தமிழர் விவகாரத்தை வடக்கு கிழக்கு என பிரித்தாள முயல்கின்றார்.
- தமிழர்களையும; முஸ்லிம்கயைளம் பிரித்தாள முற்படுகின்றார்.
- மாலுமி இல்லாத கப்பலில் தமிழ் மக்கள்.
மொத்தத்தில் 2009க்குப் பின் மாலுமி இல்லாத கப்பலில் பயணிக்கும் தமிழ் மக்களை தமிழ்தலைமைகள் மிண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை பொறிக்குள் தள்ளுவதாகவே அமையும்.
ரணில் விக்ரமசிங்கவைப் பொருத்து இனவிவகாரத்துக்கான தீர்வினைக் காண்பதல்ல நோக்கம். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால்
தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதே இலக்காகும்.. நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாக மார்தட்டி திரிந்த கூட்டமைப்பின் பெயரில் அரசியல் நடத்திய தமிழரசுக் கட்சியினரின் சாதனையை தமிழ் மக்கள் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அதே ரணில்விக்ரமசிங்கவே தமிழ்த் தலைமைகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றார்.
துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் தமக்கான தலைமையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.தலைமை என்று கூறித் திரிவோரும் நவக்கிரகங்களாக நிற்கின்றனர். இந்த நிலைமை ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பான அரசியலையே தமிழ்த் தலைமைகள் உருவாக்கிக் கொடுத்துள்ளன.
தற்போது முன்னாள் நீதியரசர் ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளார். தமிழரசுக்கட்சி நல்லாட்சிக் காலத்தில் பேசப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள அரசியலமைப்பு யோசனைகளை வைத்து பேச முற்படுகின்றது. இதுபற்றி பேசுவதாயின் அணைத்து கட்சிகளுடன் பேச வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.ஆனால்13ஐமுழுமையாகநடைமுறைப்படுத்துவது சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது என்ற முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் பொதியை கையிலெடுக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்த போதும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பால் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பேச்சுவார்த்தை.
தமிழ்க் கட்சிகளைப் பொருத்து ஒற்றுமை இன்றி எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி வழமைபோல்வெறும்கையுடன்பேச்சுவார்த்தைக்குச்சென்றுள்ளன.ரணில்விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பேச்சு வார்த்தை நடைபெறுகின்றன. இதன் வெற்றி தோல்விகளுக்குச் சொந்தக்காரர்கள் ரணில்விக்ரமசிங்கவும் தமிழ்த் தலைமைகளுமே. இந்தப் பெருபேறுகளுடன் இருதரப்பும் இறுதியில் தேர்தலில் தமிழ் மக்களிடமே கையேந்தி நிற்க வேண்டும்.தீர்மானம் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
ஏனெனில் ரணில்விக்ரமசிங்கவின் வலைக்குள் தமிழ்த் தலைமைகள் சிக்கலாம். ஆனால் தமிழ் மக்களை சிக்க வைப்பது இன்றைய நிலையில் இலகுவான விடயமில்லை.