(வைகாசி 18இன் இன்னுமோர் அடையாளம்)
புலம் பெயர்ந்த மகன் கேட்டான்
“ அப்பா ! இன்று ஏன் இது ? “ என்று – வந்த
நிலை மறவாத் தந்தை சொன்னார்-“இது
அழிக்கப்பட்ட எம் பாதி வரலாற்றின்
வலிமிகுந்த வடுவின் குறியீட்டில் ஒன்று” என்று
அப்பாவின் மகன் விடவில்லை அவன்
இப்பவே விளக்கம் வேணும் என்று நிற்க
முப்பது வருட வரலாற்றுப் போர்
எப்படி முடிந்தது என்றும் கூற
இப்படித்தான் ஆரம்பித்தார் தந்தை
“ அது
வல்லரசுகள் பல கைகோர்த்து ஒன்றாக நின்ற இடம்
எல்லையில்லா மெய்கள் பல சிதைந்தழிந்த அவல இடம் – முள்ளிவாய்க்கால்!
இரண்டாயிரத்து ஒன்பது வைகாசி பதினைந்து
இருண்ட மேகம் ஒன்று – பெரும்
கரும்புகையைச் சுமந்து கொண்டு
இருள் நீங்க விடாக்குண்டு மழையால்
பெரும் அவலத்தை தந்திடவே- அங்கிங்காய்
மருண்டு ஓடிய மக்கள் எல்லாம்
உருண்டும் புரண்டும் ஓடியும் ஒளிந்தும்- இறுதியில்
எதுவும் பயனின்றி பதினெட்டில் அழிந்து போயினர்
கொத்துக் கொத்தாய் எத்தனை பேர்
ரத்தமும் சதையும் மிச்சமாய் மடிந்தனர் – அன்று
மடிந்தவர் மடிய இருந்தவர் கூட
ஒடிந்தவர் ஆனார் உறுப்புகளோடு மனங்களும் தான் – அன்று
கொழுத்தும் வெய்யிலில் கொப்பளிக்கும் காலோடு
கிடைக்கும் கஞ்சிக்காய் நீள்வரிசையில் நின்றவர்
பொசிக்கிடும் குண்டுகள் பரந்து விழவே – பலர்
பசியாறும் முன்பே பிணமாகிப் போயினர்
ருசியேதும் இல்லா அக்கஞ்சிதான் அன்று
பசித்தவர் வயிற்றின் சுருக்கினை எடுத்தது – அப்போ
ஒரு வேளையேனும் வயிறாற உதவிய- அக்கஞ்சியை
முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நினைத்துக் கொள்கிறோம் நினைத்துக்கொள்வோம்!”
என்றே தந்தையும் கூறிமுடித்தார்
இன்றில் இருந்து தனையனும் தொடருவான்
நாங்களும் தொடருவோம்!……
உமா மோகன்