மனம் திறக்கிறார் மனோ கணேசன்
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 14 )
- “சிங்கள பெண்களை நான் தென்னிந்தியாவிற்கு அழைத்து செல்கிறேன்” என்றேன்.
- “சிங்கள ஆண்கள் கிழக்கிந்தியாவுக்கு போகலாம்”, என்றும் என்றேன்.
- “புராவித்யா சக்கரவர்த்தி” (தொல்லியல் சக்கரவர்த்தி) பட்டத்தை மேதானந்த தேரர் தனக்கு தானே சூட்டிக்கொண்டார்.
- பேராசிரியர் பத்மநாதன், இந்த “தொல்லியல் சக்கரவர்த்திக்கு” வகுப்பெடுக்கும் தகவல்கள் வைத்துள்ளார்.
- தமிழ் பௌத்தர் பற்றிய பேராசிரியர் சுனில் ஆரியரட்னவின் “தமிழ் பௌத்தன்” (தெமல பௌத்தயா) நூலை மறுபிரசுரம் செய்தேன்.
- நான் தொல்லியல் அறிஞன் அல்ல, தோராயமா அறிஞ்சவன் (அறிந்தவன்).
- இலங்கை வரமுன் மகிந்தரும், சங்கமித்தையும் தமிழகத்தில் தங்கி தமிழ் படித்தார்கள்.
22 ஏப்ரல் 2004 முதல் 09 பெப்ரவரி 2010 வரை நடைப்பெற்ற நாடாளுமன்றம். இலங்கை வரலாற்றில் கொடுமையான இனவாத பாராளுமன்றம். 2005ல் அதிபர் தேர்தலில் மஹிந்த ஜனாதிபதி ஆனார். அப்புறம், அவரும், அவரது சகோதரர்களும், இனவாதிகள் புடை சூழ நாட்டை ஆட்சி செய்து யுத்தம் நடத்தி, ஒழித்த காலம். |
வண. மேதானந்த எல்லாவல தேரர் 2004ம் வருட தேர்தலிலே ஜாதிக ஹெல உருமய கட்சியின் எம்பீயாக பாராளுமன்றம் வந்தார். அவருடன் இன்னமும் ஒரு பத்து தேரோ எம்பிக்கள் வெற்றி பெற்று வந்தார்கள்.
மேதானந்தர் “புராவித்யா சக்கரவர்த்தி” (தொல்லியல் சக்கரவர்த்தி) என்ற பட்டத்தை தனக்கு தானே சூட்டிக்கொண்டவர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுக்க, புராதன பௌத்த விகாரை சின்னங்கள் இருந்ததாக கூறி பெரிய ஒரு வரைப்படத்தை தயாரித்தார். அதை வைத்துக்கொண்டுதான் தொல்லியல் திணைக்களம் இன்று தொல்லை செய்கிறது.
அவர் சுட்டிக்காட்டுகின்ற எல்லாமே பௌத்த சின்னங்கள் அல்ல என்பது என் அபிப்பிராயம். புராதன சைவ, இந்து ஆலய சிதைந்த கட்டுமானங்களையும், பெளத்த விகாரைகள் என்கிறார். அப்படியே இருந்தாலும் அவை தமிழ் பௌத்த விகாரை சின்னங்கள் ஆகும்.
8ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் பலமுறை எழுந்து, சைவத்துடன் மோதி வீழ்ந்தது. இடைப்பட்ட கால இடைவெளிகளில் பௌத்தமே பிரதான மதமாகவும் இருந்தது. ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியவற்றில் பௌத்த சிந்தனை காணக்கிடக்கிறது.
இதற்கு சமானமாக ஈழத்திலும் தமிழர் மத்தியில் பௌத்தம் எழுச்சி பெற்றது. தலைத்தோங்கியது.
கந்தரோடை, வல்லிபுரம், பொன்னாலை, நிலாவரை, உடுவில், நயினாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் இந்த பௌத்த புராதன சின்னங்கள் காணப்படுவது இயல்பே.
இதில் கந்தரோடை பிரதானமானது. கந்தரோடை விகாரைக்கு அருகில் பிக்குகளின் மடாலய சிதைவுகள், 1917ம் ஆண்டு முதலில் சரித்திரவியாளர் போல் பீரிஸ் என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டன. அங்கு பாண்டிய, சேர அரச வம்ச நாணயங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
நம்ம நயினாதீவில், இரண்டு நாக இளவரசர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கை கெளதம புத்தர் தீர்த்து வைத்தார் என தமிழ் மணிமேகலையும், பாலி மகாவம்சமும் ஒருங்கே கூறுகின்றன.
என்ன பிணக்கு? எப்படி அங்கே கெளதமர் வந்தார்? என எனக்கு தெரியாது. சீத்தலைச் சாத்தனாருக்கும் (மணிமேகலை), மகாநாம தேரருக்கும் (மகாவம்சம்) தெரிந்திருந்ததோ எனவும் எனக்கு தெரியாது.
வண. மகிந்தர், வண. சங்கமித்தை ஆகியோர் பெளத்த மத பிரசாரத்திற்காக இலங்கை தீவுக்கு வந்த போது, அவர்களை இங்கே வரவேற்றவர்கள் தமிழ் மன்னர்கள், தமிழ் மக்கள்.
இலங்கை தீவுக்கு வரமுன் மகிந்தரும், சங்கமித்தையும் சில வருடங்கள் தென்னிந்திய தமிழகத்தில் தங்கி இருந்து பண்டை தமிழை கற்றறிந்து, அங்கேயும் பெளத்த மத பிரசாரம் செய்து, அதன் பின்தான் இலங்கை தீவுக்கு வந்தார்கள்.
ஏனெனில் இலங்கையில் மக்களுக்கு, மன்னருக்கு, மத பிரசாரம் செய்ய பாஷை தெரிய வேண்டுமே. இல்லாவிட்டால் எப்படி? ஆகவே அன்று இங்கு இலங்கையில் நிலவிய மொழி தமிழ்.
தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன். அவனது தந்தையை இவர்கள் இப்போது “முடுசிவ” என்பார்கள். அது மூத்த சிவன் என்பதாகும். அவர்கள் சிவனை வணங்கிய சைவர்கள். பின்னாளில் அசோகனின் பிள்ளைகளால் பெளத்த மதத்தவர்கள் ஆனார்கள். இதுதான் கதை.
நான் ஒன்றும் தொல்லியல் அறிஞன் அல்ல, தோராயமா அறிஞ்சவன் (அறிந்தவன்). அவ்வளவுதான். நம்ம பேராசிரியர் பத்மநாதன்தான், இதற்கெல்லாம் பதில் கூற கூடியவர். இந்த “அப்பா-டக்கர் பிஸ்தா” தொல்லியல் சக்கரவர்த்தி மேதானந்த தேரோவுக்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு பேராசிரியரிடம் தகவல்கள் உள்ளன.
இந்த தொல்லியல் சக்கரவர்த்தி தேரோ, சிங்கள பேராசிரியர்கள், இந்த புராதன கண்டு பிடிப்புகளை கொண்டு, அன்று அங்கே “சிங்கள” இருப்பு இருந்தது என்றும், இலங்கையில் எல்லா காலத்திலும், வாழ்ந்த, எல்லா பெளத்தர்களும் “சிங்களவர்கள்” என்றும் அம்புலிமாமா கதை சொல்வதுதான் பிரச்சினை.
இன்றைய தினத்தில் இலங்கை வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள “டென்சனுக்கும்” இதான் பின்னணி பிரச்சினை.
பிரபல எழுத்தாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பேராசிரியர் சுனில் ஆரியரட்ன எழுதிய “தமிழ் பௌத்தர்” (தெமல பௌத்தயா) நூலிலும் தமிழ் பௌத்தர்கள் பற்றிய பெரும் சான்றுகள் உள்ளன.
சிங்கள வரலாற்று எழுத்தாளர் ஒருவரே, இலங்கையில் தமிழ் பெளத்தம் பற்றி எழுதியதால் இந்நூலுக்கு ஒரு தகைமை இருக்கிறது. இந்நூல் சிங்கள இலக்கிய சந்தையில் இல்லாமல் இருந்தது.
இந்நூலை, எனது தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சின் (2015-2019) சார்பாக நிதி ஒதுக்கி, மீள்பிரசுரம் செய்ய விரும்பினேன்.
ஆனால், பேராசிரியர் ஆரியரட்னவின் ஒப்புதலை பெற வேண்டுமே ! ஆரியரட்ன, எனது செயலாளர் பிரியாணி குணரத்னவின் பல்கலைக்கழக பேராசிரியர். அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு இருந்தது. இதன் மூலம், அவரை சம்மதிக்க வைத்தேன்.
பிறகு எனது அமைச்சு இந்த நூலை மறுபிரசுரம் செய்து, நாடு முழுக்க சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை அனுப்பியது.
நூலை வாசித்து, முடிந்த பின், விகாரை தேரர்களையும், பள்ளிக்கூட ஆசிரியர்-மாணவர்களையும் கூட்டி ஆங்காங்கே கலந்துரையாடல்கள் நடத்த பணிப்புரை விடுத்தேன். அதற்குள் நம்ம அரசாங்கம் போய் விட்டது.
இந்த “புராவித்யா சக்கரவர்த்தி” வண. மேத்தானந்த தேரருக்கு தமிழர்களும், முஸ்லீம்களும் வந்தேறு குடிகள், சிங்களவர்கள் மட்டுமே நாட்டுக்கு சொந்தக்காரர்கள் என்ற சிந்தனை எப்போதும் இருக்கின்றது. மாற்று கருத்தை காதில் வாங்கிக்கொள்ளவும் மாட்டார்.
இலங்கையில் தமிழர் மத்தியில் பெளத்தமும், சைவமும் (இன்று இந்து) தழைத்திருந்த, வரலாற்று விஞ்ஞான உண்மையை ஏற்றுக்கொண்டு, இலங்கையில் பெளத்தத்தின் மூலம் தமிழர், சிங்களவர் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கலாம். தமிழ் பெளத்த வரலாற்றை சிங்கள அரசியல்வாதிகள், பெளத்த தேரர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர் மத்தியில் இல்லாத “சிங்கள-பெளத்தம்” என்ற ஒன்றை பற்றி பேசி, பெளத்தத்தை பயன்படுத்தி, முழு நாட்டையும் சிங்கள மயமாக்க முனைவதுதான் அனைத்து பிரச்சினகளுக்கும் மூலமாகும்.
இதைவிடுத்து, பெளத்தத்தை, “தமிழ் பெளத்த”மாக தமிழர் மத்தியில் கொண்டு போனால், எனக்கு தெரிய தமிழர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள் என்பது என் அபிப்ராயம்.
உண்மையில், மத சண்டையில், பெளத்தம் தமிழகத்தில் அகற்றப்பட்ட போது, பல தமிழ் தேரர்கள் இலங்கையில் வந்து இறங்கி இங்கே அடைக்கலம் புகுந்தார்கள். பின் இலங்கையிலும் வடக்கில் தமிழர் மத்தியில் பெளத்தம் அகற்றப்பட்டு சைவம் தழைத்தோங்க ஆரம்பித்த போது, பெளத்தத்தை காப்பாற்றவே தென்னிலங்கையில் தமிழ், பாலி மொழிகளை கொண்டு சிங்களம் என்ற மொழி பின்னாட்களில் உருவாக்கப்பட்டது. இதுதான் நான் அறிந்த இலங்கை தீவின் வரலாறு.
பாராளுமன்றத்தில் ஒருமுறை இந்த “புராவித்யா சக்கரவர்த்தி” என்னிடம் மாட்டிக்கொண்டார்.
நீண்ட உரையொன்றை ஆற்றி, சிங்கள பௌத்தத்தின் மேன்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தமிழ் இந்துக்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டும், முஸ்லீம்கள் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டும், கத்தோலிக்க மதத்தவர்கள் கூட வெளியேற வேண்டும் என்று இவர் கூறினார்.
அதையடுத்து பேசிய நான், தொல்லியல் சான்றுகளை எல்லாம் சொல்லி உரையாற்றப்போகவில்லை. சான்றுகளை முன்வைப்பதனால் இவரிடம் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என எனக்கு தெரியும். ஆகவே அவர் பாணியிலேயே அவரை மடக்கினேன்.
“நீங்கள் சொல்வதை போல தமிழர்களாகிய நாங்கள் நாட்டை விட்டு கிளம்புகின்றோம். முஸ்லிம்களையும் நாங்கள் சவுதி அரேபியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ அனுப்பி விடுகின்றோம். மன்னார் பிஷப் ராயப்பு யோசேப்பு மூலம் போப்பாண்டவரிடம் பேசி, இந்நாட்டு கத்தோலிக்கர்களுக்கும் போய் வாழ்வதற்கு ஒரு கத்தோலிக்க நாட்டை ஏற்பாடு செய்வோம்.”
(இந்த இடத்தில் மன்னார் பிஷப் ராயப்பு அவர்களது பெயரை வேண்டுமென்றே இழுத்து விட்டேன். அந்நேரம் அவர் உயிரோடு இருந்தார். மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகி பேரினவாதிகளால் வெறுக்கப்பட்ட நிலையில் இருந்தார்.)
“ஆனால் நான் இந்தியாவுக்கு போகும் பொழுது சிங்கள பெண்களை என்னுடன் தென் இந்தியாவிற்கு அழைத்து செல்கிறேன். சிங்கள ஆண்களை கிழக்கு இந்தியாவின் ஒடிசா வங்காள வலயத்துக்கு அனுப்பி விடுவோம்.”
“ஏனென்றால் சிங்கள இனத்தின் முதல் இளவரசன் விஜயன், கிழக்கிந்தியாவின் ஒடிசா வங்காள வலயத்திலிருந்து இலங்கைக்கு வந்து குடியேறி, ஆதிவாசி அரசி குவேனியை மணந்து, அப்புறம் அவளை விரட்டி விட்டு, பின்னர் தனக்கும், தன்னுடன் வந்த நண்பர்களுக்கும், தமிழ் ராஜகுமாரியையும், தமிழ் பெண்களையும் தென்னிந்திய பாண்டிய தமிழ் நாட்டிலிருந்து தருவித்து, மணந்துகொண்டு, அதன்பின் சிங்கள இனம் உருவாகியதாக மகாவம்சம் கூறுகின்றது.”
“ஆகவே நாங்கள் போகும் பொழுது நீங்களும் போக வேண்டும். எல்லோரும் போன பிறகு இந்நாட்டை, இந்நாட்டின் பூர்வீக குடிகளான வேடர்களிடம் ஒப்படைத்து விடுவோம்.” என்று கூறினேன்.
மேதானந்த தேரர் எம்பீ என்னை ஏதோ திட்டி தீர்த்தார். சபையில் இருந்த சில சிங்கள எம்பீக்கள் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
இப்போ நான் நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். மேதானந்த “புராவித்யா சக்கரவர்த்தி” தேரர் எம்பி இல்லை. இதையிட்டு தனிப்பட்ட முறையில் நான் கவலையடைகிறேன். இருந்திருந்தால் சுவாரசியமாக இருக்கும். சிரிப்புக்கும்கூட பஞ்சம் இருந்திருக்காது.
அவரோடு சேர்ந்து நாடாளுமன்றம் வந்த சுமார் பத்து தேரோ எம்பிக்களில் ஒருவரை தவிர எல்லோரும் தோற்று போய் வெளியேறி விட்டார்கள்.
எஞ்சி இன்று சபையில் இருப்பவர் இரத்தின தேரர் எம்பி. இவர்தான் கடந்த ஆட்சியின் போது மிகப்பெரிய முஸ்லிம் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தியவர். அப்பாவி வைத்தியர் சாபி மீது பொய் குற்றப்பத்திரிக்கை வாசித்தவர். இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் நடத்தி கண்டி தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதம் இருந்தவர். நாட்டில் இனவாத சூட்டை கிளப்பி கோதாபய ராஜபக்ச பதவிக்கு வர அரசியல் சூழலை உருவாக்கியவர்களில் ஒருவர்.
அவர் கக்கிய இனவாத குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்ட ஒன்றையும் இன்று, அவர் கொண்டு வந்த அரசாங்க காலத்திலும்கூட நிரூபிக்க முடியவில்லை. எல்லாமே பொய். வெட்கமில்லாமல் சீருடை அணிந்து இன்னமும் நடமாடுகிறார்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் இவர்கள் வரலாறு. என்ன பெளத்தமோ! ஏது பெளத்தமோ!! கெளதமனுக்குதான் வெளிச்சம்!!!