கடந்த வியாழக்கிழமை 14ஆவது மே18ஐ தமிழ் மக்கள் அனுஷ்டித்திருக்கிறார்கள். 2009 மே 18 ஆம் திகதியோடு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் தமிழ் மக்கள் அறவழிகளில் போராடுகிறார்கள். 2009க்குப் பின்னரான தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் நோக்கிலானது என்று கூறப்படுகிறது.
ஆனால்,ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய அளவு தாக்கத்தை கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எந்த ஒரு போராட்டமும் ஏற்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளைத் தாக்கியது. உயிர்களை அழித்தது. நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்பியது. அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைக் குறைத்தது. இவற்றுடன் போர்க்களத்தில் அரசாங்கம் பெருமளவு காசைக் கொட்டி சண்டை போட வேண்டியிருந்தது.இவை எல்லாவற்றினதும் தொகுக்கப்பட்ட விளைவாக ஆயுதப் போராட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை மீளமுடியாத அளவுக்குத் தாக்கியது. இது ஆயுதப் போராட்டத்தின் முதலாவது விளைவு.
இரண்டாவது விளைவு போராட்டத்தின் வெற்றிகள் காரணமாக ஒரு விடுதலைப் பிரதேசம் கிடைத்தது. அந்த விடுதலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கருநிலை அரசை நிர்வகித்தது. அது ஒரு அதிகார மையமாக காணப்பட்டது. இதனால் இலங்கைத் தீவில் இரண்டு அதிகாரம் மையங்கள் உள்ளன என்று கருதப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகள் அவ்வாறு இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியது. எனினும், வோஷிங்டன் மாநாடு போன்றன அந்த தகைமையைக் கேள்விக்கு உள்ளாக்கியது என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் விளைவாக ஒரு புறம், அரசாங்கத்துக்கு இழப்புகள் ஏற்பட்டன. இன்னொரு புறம் அது ஒரு புதிய அதிகார மையத்தை சிருஷ்டித்தது. இதன் விளைவாக தமிழ் மக்களுக்கு பேரபலம் அதிகமாக இருந்தது. அந்த பேர பலத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைக்கு போனார்கள். இவை யாவும் 2009க்கு முந்திய காட்சிகள்.
ஆனால் 2009க்குப் பின் மேற்சொன்ன எந்த ஒரு பலமும் தமிழ் மக்களிடம் இல்லை. தமிழ் மக்களிடம் கட்டுப்பாட்டு பிரதேசமோ,கருநிலை அரசோ கிடையாது. அதுமட்டுமல்ல, தமிழ் மக்கள் குறைந்தபட்சம் ஒரு தரப்பாகத்தானும் ஒன்று திரளவில்லை என்பதே கடந்த 14 ஆண்டு கால யதார்த்தம் ஆகும். தமிழ் மக்கள் இப்பொழுது நாட்டுக்குள் கட்சிகளாகவும், கொள்கைகளாகவும், வடக்கு கிழக்காகவும், சமயங்களாகவும், சாதியாகவும், தியாகிகளாகவும், துரோகிகளாகவும்,ஒட்டுக் குழுக்களாகவும், கைக்கூலிகளாகவும், ஒத்தோடிகளாகவும், மறுத்தோடிகளாகவும், இன்ன பிறவாகவும் சிதறிப் போய்க் காணப்படுகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு மையத்துக்கு கொண்டுவர கட்சிகளும் கிடையாது மக்கள் அமைப்புகளும் கிடையாது. இது முதலாவது பலவீனம்.
இரண்டாவது பலவீனம் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் நடத்திவரும் அறவழிப் போராட்டங்கள் எதனாலேயும் இலங்கை அரசாங்கத்துக்கு தாக்கமான விதங்களில் இழப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. அதாவது அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் போராடவில்லை. சில எழுக தமிழ்களிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி போன்ற போராட்டங்களின் மூலமும் தமிழ் மக்கள் வெளி உலகின் கவனத்தை ஈர்க்கிறார்கள். ஆனால் அதைக் கூட தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை. எனவே இந்த அடிப்படையில் கூறின் தமிழ் மக்கள் கடந்த 14 ஆண்டுகளாக பேரபலம் குறைந்த ஒரு மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.
ஆனால் அதேசமயம் வேறொரு தளத்தில் தமிழ் மக்களுக்கு பேரம் இருக்கிறது. அது என்னவெனில் புவிசார் அரசியல் பரப்பிலும், பூகோள அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களைக் கையாள வேண்டிய தேவை வெளி அரசுகளுக்கு உண்டு. அதனால் வெளியரசுகள் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு ரத்தமது வெளியுறவு இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்கும். இந்தப் பேரம் எங்கிருந்து வருகிறது என்று சொன்னால், இந்து மகா சமுத்திரத்தில் பேரரசுகளுக்கு இடையிலான இழு விசைகளுக்குள் இச்சிறிய தீவு சிக்கியிருப்பதினால்தான். அதாவது திருத்தமாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு இப்பொழுது உள்ள பேரமெல்லாம் அவர்களுடைய போராட்டத்தின் பலனாகக் கிடைத்தது அல்ல. மாறாக பேரரசுகளின் தேவைகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் பேரபலம்தான் இந்த இருக்கின்ற ஒரே பலத்தையும் தமிழ் மக்கள் சரியாகக் கையாண்டு வருகிறார்களா என்பதனை கடந்த 14 ஆண்டு கால தமிழ் அரசியலுக்கு ஊடாகத் தொகுத்துப் பார்த்தால், விரக்தியூட்டும் விடையே கிடைக்கும். ஏனெனில் வெளியரசுகளைக் கையாளத் தேவையான பலத்தோடும் வெளியுறவுத் தரிசனங்களோடும் தமிழ் மக்கள் இல்லை,
வெளியுறவு கட்டமைப்பு எனப்படுவது ஒர் அதிகார மையமாக இருக்கும் போது தான் தேவை. தமிழ் மக்கள் ஒர் அதிகார மையமாக இல்லாதவரை, வெளியுறவுக் கட்டமைப்புக்கு தேவையும் இல்லை. ஒர் அதிகார மையம் வெளியில் உள்ள ஏனைய அதிகார மையங்களோடு உறவாடும் போதுதான் அதற்கென்று ஒரு வெளியுறவுத் தரிசனம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு மையமாக இல்லை. எனவே நடைமுறையில் தமிழ் மக்களிடம் ஒரு வெளியுறவுக் கொள்கையும் இல்லை. இதனால் தமிழ் மக்கள் வெளி அரசுகளைக் கையாள்வதற்கு பதிலாக வெளி அரசுகள்தான் தமிழ் மக்களைக் கையாண்டு வருகின்றன. கடந்த 14 ஆண்டு கால அரசியலில் அவ்வாறு வெளியரசுகளை தமிழ் மக்கள் கையாளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் 2015 அளவில் கிடைத்தது. ராஜபக்சக்களை அரங்கில் இருந்து அகற்றுவதற்காக இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தமிழ் அரசியல் தேவைப்பட்டது. அத்தருணத்தில் தமிழ் மக்களின் பேரம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த பேரவாய்ப்பை உணர்ந்து அதைக் கையாள்வதற்கு சம்பந்தர் தவறிவிட்டார்.
அதுபோலவே,கடந்த ஆண்டு தென்னிலங்கையில் இடம் பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களின் போதும் தமிழ் மக்கள் தெளிவான வெளியுறவு இலக்குகளை முன்வைத்து பேரத்தை அதிகப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் துயரம் என்னவென்றால் தமிழ்மக்கள் மத்தியில் அவ்வாறு பொருத்தமான வெளியுறவுத் தரிசனங்களை முன்வைத்து பேரம் பேசக்கூடிய கட்சிகளும் கிடையாது; மக்கள் இயக்கங்களும் கிடையாது. இந்த வெற்றிடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களால் மேற்கு நாடுகளையும் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை. இந்தியாவையும் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை.
குறிப்பாக 2009க்கு முன்னிருந்தே தமிழரசியல் அதிகம் மேற்கு நோக்கியதாகக் காணப்பட்டது. அதன் அடுத்த கட்டத் தொடர்ச்சியாக 2009க்குப் பின் அது ஜெனிவா மைய அரசியலாக மாற்றம் கண்டது. ஆனால் அங்கேயும் கூட ஜெனிவா மைய அரசியலில் தமிழ் மக்களின் விவகாரம் மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவைக்கு வரையறைகள் உண்டு. அது ஐ.நா.பொதுச்சபையைப் போலவோ, பாதுகாப்பு சபையை போலவோ ஒரு நாட்டின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் கட்டமைப்பு அல்ல. அதனால் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பின. கடிதத்தில் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்றும் கேட்டிருந்தன. ஆனால் கடிதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அலுவலகமானது, தமிழ் மக்கள் எதிர்பார்த்த ஒரு பலமான கட்டமைப்பாக அமையவில்லை மட்டுமல்ல, அதுவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே உருவாக்கப்பட்டது.
கடந்த 14 ஆண்டு கால ஐநா மைய அரசியலைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ் மக்கள் அங்கேயும் பலமாக இல்லை. அதாவது மேற்கை மையமாகக் கொண்ட தமிழ் அரசியலிலும் தமிழ் மக்கள் திருப்பகரமான வெற்றிகளைப் பெற்றிருக்கவில்லை. அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் இலங்கை அரச பிரதானிகளுக்கு எதிராகவும் தளபதிகளுக்கு எதிராகவும் தடைகளை விதித்திருக்கின்றன. கனடாவில் மாநில அரசாங்கத்திலும் மத்திய அரசாங்கத்திலும் இனப்படுகொலை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை ஈழத் தமிழர்களுக்கு உற்சாக மூட்டக்கூடிய தொடக்கங்கள். ஆனால் இவையனைத்தும் கனேடிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைசார் முடிவுகள் அல்ல என்று கனேடிய அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாகக் கூறியிருக்கிறார். அதாவது அந்த நகர்வுகளின் விளைவாக,கனேடிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தைப் பகைக்கத் தயாரில்லை. அதாவது கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், தமிழர்களுக்காக கொழும்பைப் பகைக்கும் ஒரு வளர்ச்சி அங்கு ஏற்படவில்லை.
இதுதான் உலகம் முழுவதிலும் உள்ள நிலை. எனவே தொகுத்துப் பார்த்தால் தெளிவாக கிடைக்கும் சித்திரம் என்னவென்றால், மேற்கை மையமாகக் கொண்ட தமிழ் அரசியலானது 2009 க்கு முன்னரும் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. இரண்டாயிரத்தி ஒன்பதுக்கு பின்னரும் எதிர்பார்த்த பருமனில், எதிர்பார்த்த வேகத்தில், வெற்றிகளைப் பெற முடியவில்லை. இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் மத்தியில் தொகுக்கப்பட்ட ஆய்வுகள் அவசியம். 14 ஆவது மே 18ஐ அனுஷ்டிக்கும்போது, கடந்த 14 ஆண்டுகளாக நாங்கள் ஏன் தொடர்ந்து ஒரு எல்லைக்குமேல் முன்னேற முடியவில்லை என்பதற்கு விடைகளையும் தேடவேண்டும். இல்லையென்றால் மே 18 அனுஷ்டிப்பது என்பது ஒரு சடங்காகச் சுருங்கி வருகிறது என்று பொருள்.