கதிரோட்டம் 12-05-2023
தமிழின அழிப்பின் 14ம் ஆண்டு நினைவு நாள் வலிகளுடன் எம்மை வரவேற்கிறது?
ஈழத் தமிழர்களுக்கு இலங்கையின் பேரினவாத அரசிடமிருந்து அவர்களை விடுவித்து விடுதலை பெறுவதே இனி உள்ள ஒரே வழி என்ற தீர்மானத்தோடு இதயங்களில் விடுதலை வேட்கையும் கைகளில் கனதியான ஆயுதங்களையும் தாங்கிய வண்ணம் போராடத் தொடங்கின. எமது இளைஞர்களின் எழுச்சி மிக்க அணிகள். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இராணுவ பலத்தை விட்டு வைப்பதற்கு தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல உலக முதலாளித்துவ சக்திகளுக்கும் எள்ளளவும் விருப்பம் இல்லாது வளர்ச்சியடைந்தது எமது இனத்திற்கான விடுதலையை பெற்றிட எழுந்து நின்ற வேங்கைப் படைகள்.
2009ம் ஆண்டு வரை வெற்றிகளையும் தோல்விகளையும் தழுவி நின்றாலும். ஆயிரக்கணக்கான போராளிகளையும் பொதுமக்களைம் விடுதலைப் போரில் பறிகொடுத்தாலும் முப்படை கொண்ட முழு நாடு போன்று படைகளை அணிவகுத்துக் காட்டியது வன்னியின் இராஷணுவத் தலைமை.
ஆனால் தங்களுக்குள்ளே குரோத மனப்பான்மை கொண்டு அரசியல் செய்து வந்த நாடுகள் கூட ஈழத் தமிழர்களின் இராணுவ பலத்தை அடக்கி அழிப்பதற்காக ஒன்று திரண்டன. தங்கள் குரோதங்களை ஒரு புறத்தே வைத்து விட்டு தமிழர்களின் விடுதலை போராட்டத்தின் வளர்ச்சியையும் அதன் வேட்கையையும் தெரிந்து கொண்டு எமது இராணுவ பலத்தையும் மக்களின் தியாக நெறியையும் நிர்மூலமாக்கும் நோக்கோடு நமது மண்ணில் அடவாடித் தனமாக இறக்கப்பட்டன வேற்று நாட்டுப் படைகள்.
விடுதலைத் தாகத்தோடு போராடிய போராளிகளும் பொது மக்களும் எதிர்பாராத விதமாக கொன்றழிக்கப்பட்டனர். வன்னி மண்ணில் அரங்கேறியது தமிழின அழிப்பு. இரத்த ஆறாக ஓடிய அந்த வீரம் செறிந்த மண்ணில் செங்குருதி ஆறு பெருக்கெடுத்தது. தியாக உணர்வுள்ளவர்களின் உயிர்கள் கொரூரமாகப் பறிக்கப்பட்டன.
ஆமாம்! 2009ம் ஆண்டு மே மாதம் எமது வீரம் செறிந்த மண்ணில் அரங்கேறிய தமிழின அழிப்பிற்கு எதிராக எமது மக்கள் ஐக்கிய நாடுகள் சபையிலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிலும் நியாயத்திற்காக குரல் எழுப்பினர். ‘குலத்தைக் nசுடுக்க வந்த கோடறிக் கம்புகள் போன்றவர்கள் எம் பக்கத்தில் நிற்பது போல நின்று போர்க்குற்றவாளிகளுக்கு ‘குடை’ பிடிக்கத்தான் செய்தனர்.
இவ்வாறான வலிகள் நிறைந்த பயணத்தில் இனப் படுகொலையின் 14ம் ஆண்டு நினைவு நாள் வலிகளுடன் எம்மை வரவேற்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு வருடத்திலும் மே மாதத்தில் கூடி நின்று கண்ணீரை மட்டும் தரையில் தெளித்து விடாது நாம் ஏனைய பல காரியங்களிலும் இறங்கிச் செல்ல வேண்டும்.
இவ்வாரத்தின் தனது கட்டுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுரையாளர் நிலாந்தன் குறிப்பிடுவது போன்று நாம் அந்த வழியில் காரியங்களை ஆற்ற முன்வர வேண்டும்
இரண்டாவது,இறுதிக்கட்டப் போரில் சிக்கிச் சின்னாபின்னமாகிய குடும்பங்களுக்கு உதவிசெய்வது. பதினான்கு ஆண்டுகளின் பின்னரும் போரின் விளைவுகளில் இருந்து எழ முடியாமல் தத்தளிக்கும் குடும்பங்கள் பல உண்டு. போரில் குடும்பத் தலைவரை, அல்லது குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நபரை,அல்லது உழைக்கும் நபரை, அல்லது வருமான வழியை இழந்த குடும்பங்கள் உண்டு.
போரில் ஏற்பட்ட சொத்திழப்பிலிருந்து மீண்டெழாத குடும்பங்கள் பல உண்டு. அவர்களுக்கெல்லாம் உதவி வேண்டும். தியாகிகளின் வீடுகளில் அல்லது முன்னாள் இயக்கத்தவர்களின் வீடுகளில் அடுப்பெரியாதபோது முள்ளிவாய்க்காலில் சுடரை ஏற்றுவதில் எந்தப் பொருளும் இல்லை. எனவே போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எல்லாருமாகச் சேர்ந்து உதவ வேண்டும்.
அது தானதர்மம் அல்ல,கருணைச் செயலும் அல்ல. மாறாக அது ஒரு தேசியக் கடமை. தேசத்தைக் கட்டியெழுப்புவதின் ஒரு பகுதி. இடிந்துபோன குடும்பங்களை, நொறுங்கிப் போன உள்ளங்களை மீளக்கட்டி எழுப்புவது. இறந்தவர்களின் ஆத்மாக்கள் அப்பொழுதுதான் சாந்தி அடையும்.