எமது யாழ் செய்தியாளர்
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய், சங்காணை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இந்த நிலை ஏற்படுவதோடு கடல் அரிப்பு மற்றும் இயற்கை வளம் பேணல் என்பவற்றிற்காக நாட்டப்பட்ட கண்டல் தாவரங்கள், (மைங்கோஸ்) நிற்கும் பிரதேசங்கள் அனைத்தும் வனவளத் திணைக்களத்திற்கு உரியது என அவர்கள் உரிமை கோருகின்றனர்.
இதற்கமைய இவ்வாறு புதிதாக கோரப்படும் பிரதேசங்களில் 800 ஹெக்டேயர் அல்லது 2 ஆயிரத்து 400 ஏக்கர் வரையிலான நிலங்களை தமது ஆளுகையென வர்த்தமானி வெளியிடுவதற்கான புதிய முயற்சியினை வனவளத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 25 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வடக்கின் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே நிலங்களை இவ்வாறு கையகப்படுத்த முனையும் இடங்கள் வரைபடத்துடன் வனவளத் திணைக்கள அதிகாரிகளினால் காண்பிக்கப்பட்டபோது ஏற்கனவே வனவளத் திணைக்களம் அபகரித்துள்ள நிலத்தை விடுவிக்குமாறு கோரும் சமயம் மேலும் நிலத்தை பிடிப்பதனான செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வனவள திணைக்களத்தின் இந்த முன்னெடுப்பு வடக்கில் ஏற்கெனவே இருக்கும் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும், அந்த நடவடிக்கை உறுதியாகும் பட்சத்தில் மக்கள் போராட்டமும், சட்டப் போராட்டமும் தவிர்க்க இயலாததாகும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் எச்சரித்துள்ளன.