யாழிலிருந்து நடராசா லோகதயாளன்
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து மீன் வளங்களை அபகரித்துச் செல்வதை தடுக்கும் வல்லமை இலங்கை கடற்படையிடம் இல்லை என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தமது மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியாத கடற்படை எப்படி இலங்கை நாட்டை பாதுக்காக்கும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எல்லை தாண்டி தமது கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடல் வளங்களை அபகரித்து, தமிழ் பேசும் மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்கள் செயற்பட்டு கைது செய்யப்பட்டாலும் அவர்களின் விடயங்களை மனிதாபிமானமாக கையாள்கின்றோம் என்கின்றனர் கடற்படையினர்
தமது கடற்படையிடம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வல்லமை இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்படையினரின் டோறாப் படகையே இந்திய மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தக் கூடியன என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ’அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பான விவகாரம்’ நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜனால் எழுப்பப்பட்டது.
”2004ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுடன் இது தொடர்பில் பேசி வருகின்றோம். அவர்களும் இரண்டு ஆண்டுகள் தாருங்கள் என்று கேட்கின்றார்கள். ஆனால் செய்யவில்லை. அவர்களுக்கும் தாங்கள் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விடயத்தை விடுகின்றார்கள் இல்லை. அத்துமீறும் இந்திய மீனவர்களின் பின்னால் தமிழக அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். அதனால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை” என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
தமது தரப்பிலுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் அவர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.
”எமது கடற்படையினர் இரண்டு காரணங்களுக்காக இந்திய மீனவர்கள் விடயத்தில் தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவும், இந்திய மீனவர்களின் படகுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களிடம் இல்லை என்பதாலும் தயங்குகின்றனர். இந்திய மீனவர்களின் படகுகள் மோதினால் கடற்படையினரின் படகுதான் சேதமாகும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த கடற்படையின் வடக்கு மாகாண இரண்டாம் நிலை அதிகாரி, இந்திய மீனவர்களின் படகுகளைக் கைது செய்கின்றோம். அவர்கள் பல நூறு படகுகளில் வரும்போது கட்டுப்படுத்துவதற்கான வளம் தம்மிடம் இல்லை என்றார்.
“இந்திய மீனவர்களை நாம் சுட்டுப்பிடிப்பதில்லை. அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகின்றோம். அத்துமீறும் மீனவர்கள் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் அணுகுவதே சிறப்பானது” என்று குறிப்பிட்டார்.
”இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 20 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடற்படையின் பொறுப்பு. எமது மீனவர்களைப் பாதுகாக்க முடியாத கடற்படை எமது பிரதேசத்தில் எத்தனையோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து இன்னமும் ஏன் நிலைகொண்டுள்ளது?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.
அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசிய ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன், இப்படியான நிலையில் நாட்டை எப்படி கடற்படை காப்பாற்றும் என்று கேட்டார்.
”அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றால் நீங்கள் எப்படி இன்னொரு நாட்டிடம் இருந்து எமது நாட்டைக் காப்பாற்றப்போகின்றீர்கள்?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன் கேள்வி எழுப்பினார்.
இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இந்தியத் தூதுவருடன் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கடற்படையின் ஊடாக எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கடற்படை அதிகாரிக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் பணிப்புரை விடுக்கப்பட்டது.