(மன்னார் நிருபர்)
(01-06-2023)
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி,வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) காலை 10 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் சிக்கி தவிக்கும் பெண் தொழிலாளர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வாருமாறும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மன்னாரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனம் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்த இலங்கைப் பெண்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மகஜரும் வெளியிட்டனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.