கதிரோட்டம்
02-06-2023 வெள்ளிக்கிழமை
சுமார் நாற்பது வருடங்களுக்கு கனடா என்னும் இந்தக் குளிர் தேசத்தை நாடி வந்தவர்கள் எமது ஈழத் தமிழர்கள். நம் தேசத்தின் மாங்காய் நுனி போன்ற பாகத்தில் நம்மவமர்கள் வாழ்ந்து வந்தோம். இதே போன்று கிழக்குக் கரைகளில் எம் மொழியின் சிறப்புக்களையும் கலாச்சாரத்தை காத்து வந்தார்கள் எமது உறவுகள்.
இனப்படுகொலை ஒன்று நடைபெறுவதற்கு முன்பாக எத்தனையோ வருடங்களுக்கு முன்பாகவே எம் இளைஞர்களை குறிவைத்த இனவாத சிங்கள அரசியல் தலைவர்களும் இராணுவக் கொடியோருக்கும் அஞ்சிய பெற்றோர்கள் தம் பிள்ளைகளை கடல் கடந்து எங்கு சென்றாலும் ஏதோ ஒரு நாட்டுக்கு சென்று தம் பிள்ளை உயிரைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்ற நோக்கோடு பொருட் செலவில் அவர்களை ‘கப்பல்’ ஏற்றிவிட்டனர்.
எமது பழகி வந்த பாரம்பரிய வாழை இலைகளுக்கு விடை கொடுத்து விமானமேறி இங்கு வந்து கால்பதித்த எம்மவர்களை. இந்த நாட்டின் மேப்பிள் இலைகள் சிரித்த முகத்துடன் வரவேற்றன.
இவ்வாறாக பிறந்த நாட்டின் ஆட்சி அதி;காரத்தில் இருந்தவர்களாலும் அவர்களின் காவல் நாய்களாகத் திரிந்த இராணுவத்தாலும் துரத்தப்பட்ட எம் உறவுகள் இந்த மண்ணில் கால் பதித்து கல்வியிலும் வர்த்தகத்திலும் தொழிற்துறைகளிலும் உயர்ந்த வண்ணம் உலகெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு இனமாக எமது இனம் பெருகப் பெருக. நான்கு திசைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இனமாக கனடாவில் தமிழர்கள் ‘தமிழ்க் கனேடியர்கள்’ என்ற அடையாளத்துடன் வாழ்வின் பல தடைகளைத் தாண்டி வெற்றி நடைபோடத் தொடங்கினர்.
இந்த வேளையில் தான் நமது உறவுகள் தம் தாயகத்தை விட்டு துரத்தப்பட்டவர்களாக நீங்கி; வநதாலும் பிறந்த மண்ணிற்கும் இந்த குளிர் நாட்டுக்கும் பாலம் அமைக்கும் பணிகளில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறான பணிகளில் வலிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எம் தாயக உறவுகளுக்கு உதவிடும் பணிகளிலும் எம்மவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடுமையாக உழைக்கும் பணிகளுக்கு மத்தியில் செயற்பட்டு வரும் எம் தமிழ் அன்பர்களை கொழும்பில் உள்ள கனடிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சந்தித்தும் சந்திக்காமலும் தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இது நல்லதோர் அங்கீகாரமாக விளங்கி வருகின்றது.
இவ்வாறான அங்கீகாரம் கிட்டிய வகையில் அதிகாரிகள் சிலரும் கனடா என்னும் தங்கள் தாயகம் வரும் போது எம்மவர்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் தனிப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடிச் செல்வதை நாம் கடந்த பல வருடங்களாக நேரடியாகப் பார்த்து வருகின்றோம்.
இந்த வரிசையில் தற்போது தனது தாயகமான கனடாவிற்கு இலங்கையிலிருந்து விடுமுறையில் வந்திருந்தாலும் தனது கனடிய உயர் ஸ்தானிகர் என்ற அந்தஸ்த்தையும் இறக்கி வைத்துவிட்டு கனடியத் தமிழர்களை விருப்பத்துடன் சந்தித்து உரையாடிய கனடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஸ் அவர்கள் தற்போது எம் மக்களால் போற்றப்படும் ஒருவராக தெரிவாகியுள்ளார். எம்மவர்களின் எப்போதும் சரியானதாகவே இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி அவர் இங்கு சந்தித்து எமது பிரதிநிதிகளோடு உரையாடிய விடியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவோம் என்ற வார்த்தைகளோடு அடுத்த வெள்ளி வரும் வரை விடைபெறுகின்றோம்.