நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று புதன்கிழமை (7) காலை 7 மணி அளவில் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி “பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார்” என்ற குற்றச் சாட்டின் பெயரிலேயே கொழும்பில் வைத்து கொள்ளுப்பிட்டிப் பொலிசார் கைது செய்து மருதங்கேணிக்கு அழைத்து வருகின்றனர்.
இவ்வாறு மருதங்கேணிக்கு அழைத்து வரப்படும்!கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணியில் உள்ள பாடசாலையின் மைதானத்தில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களைச் சந்துத்து உரையாற்றிய சமயம் அங்கு பிரசன்னமான சிவில் உடை தரித்த பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்டதாக முன்னணி தரப்பிலும், தற்போது நாட்டில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் இணைப்புச் செயலக பாதுகாப்பிற்கு இருந்த பொலிசாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொலிசாரினாலும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதேநேரம் இக்குற்றச் சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவர் இன்று கிளிநொச்சி நீநிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்றைய பாராளு மன்ற அமர்வு ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
பொலிசார் தனக்கு அறிவித்த பின்னரே பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்ததாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இவ்வாறுகைது செய்வதற்கு அனுமதிக்க முடியாது” என கூறிய போது ‘நாங்கள் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்க முடியாது’ என சபாநாயகர் சபையில் தெரிவித்திருந்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியது. அவருடைய கொள்கைகளுடன் தாங்கள் மாறுபட்டாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என்று சஜித் பிரேமதாச கூறினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (7) பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுலை மாதம் 14ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.