மருதங்கேணிச் சம்பவமானது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் உள்ள மதிப்பு எவ்வளவு என்பதை உணர்த்துகின்றது. இக்கட்டுரை எழுதப்படுகையில் கஜேந்திரகுமார் உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
அச்சம்பவமும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த கைது நடவடிக்கைகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுத் தளத்தை ஒப்பீட்டளவில் பலப்படுத்தியிருக்கின்றன. எனினும், அக்கட்சியின் அரசியல் எதிரிகளும், அக்கட்சியின் தூய்மைவாத நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்தவர்களும், மருதங்கேணிச் சம்பவத்தை ஒரு நாடகம் என்று வர்ணிக்கின்றார்கள்.
மற்றொரு தரப்பினர் இது தொடர்பில் ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். இந்தியாவைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு கட்சியை மேலும் பலப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியிலேயே இந்திய எதிர்ப்பை பலப்படுத்தும் உள்நோக்கம் அரசாங்கத்திடம் உண்டு என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றார்கள். தனது தூய்மைவாதத்தின் மூலம் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஐக்கியம் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு கட்சியை பலப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் சந்தேகிக்கின்றார்கள்.
அதேசமயம் இக்காலப் பகுதியில் ஒரு பேப்பர் கட்டிங் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டம் ஒன்றில் அது தொடர்பாக டெலோ இயக்கமும் குமார் பொன்னம்பலமும் தெரிவித்த கருத்துக்களைக் கொண்ட ஒரு செய்திக் குறிப்பாகும். குமார் பொன்னம்பலம் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமையை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
மருதங்கேணிச் சம்பவத்தை ஒரு நாடகம் என்று வர்ணிக்கும் முன்னணியின் அரசியல் எதிரிகள் மேற்படி பேப்பர் கட்டிங்கைப் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள். மருதங்கேணியில் முன்னணி வேண்டுமென்று முரண்பாடுகளை தூண்டிவிட்டது என்று விமர்சிக்கும் தரப்புகள் குமார் பொன்னம்பலத்தின் விசுவாசத்தை கேள்விக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு மேற்படி பேப்பர் கட்டிங்கைப் பகிர்ந்து வருகிறார்கள்.
கடந்த 14 ஆண்டு கால தமிழ் அரசியலில் விகாரமாக மேலெழுந்து வரும் ஒரு போக்கு இது. தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்குவது. முன்பு மொட்டைக்கடிதம் இருந்தது. இப்பொழுது புனை பெயரில் முகநூல் கணக்கு உள்ளது. தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து கூறும் சுதந்திரத்தையும் துணிச்சலையும் சமூக வலைத்தளங்கள் அதிகப்படுத்தியுள்ளன. அதனால் யானை பார்த்த குருடர்கள் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தமது அரசியல் எதிரிகளின் மீது கீழ்த்தரமான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். குமார் பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்கை பரவலாக்குவதும் அதே சீரழிந்த விமர்சனப் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடுதான்.
ஆனால் அந்த விமர்சனப் பண்பாட்டை வளர்த்தெடுத்ததில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு. தமது அரசியல் எதிரிகளை இனத்துரோகிகளாக சித்தரிப்பதன்மூலம் அவர்களின் ஆளுமையை சிதைக்கும் ஒரு அரசியல் விமர்சனப் பண்பாட்டை அக்கட்சிதான் அதிகமதிகம் முன்னெடுத்தது. தமிழ் அரசியலில் விமர்சனத்தை அவதூறாக மாற்றியதில் அக்கட்சிக்குப் பெரிய பங்குண்டு. இப்பொழுது அவர்கள் மீதும் அதே விதமாக சூழ்ச்சிக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.
குமார் பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட அந்த பேப்பர் கட்டிங்கில் இருப்பது உண்மையா பொய்யா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிலவேளை, அச்செய்தி உண்மையாக இருந்தாலும்,அதை மட்டும் வைத்து குமார் பொன்னம்பலத்தை மதிப்பிட முடியாது. அவருடைய வாழ்க்கையை முழுமையாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும்.அந்த பேப்பர் கட்டிங்கில் காணப்படும் செய்தி உண்மையாக இருந்தால் அது அவருடைய ஒரு காலகட்ட அரசியல் நிலைப்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பிறகு ஒரு காலம் அவருடைய வேறொரு அரசியல் நிலைப்பாட்டுக்காகவே அவர் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அவர் தனது கொழும்பு மைய வாழ்க்கையை, தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்கும் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால் அவர் தன் உயிரை பாதுகாத்து இருந்திருக்கலாம்.
தமிழ் அரசியலில் சட்டச் செயற்பாட்டாளர்கள் என்று பார்க்கும் பொழுது, குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு சதம் கூட வாங்காமல் வழக்காடியவர் என்று பார்க்கும் பொழுது, குமார் பொன்னம்பலத்தின் வாழ்வு பெரியது. மனிதர்களை அவர்களுடைய தொகுக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளால்தான் நிறுக்கலாம். ஒரு மனிதருடைய ஒரு காலகட்ட நிலைப்பாட்டை மட்டும் வைத்து அவரை நிறுக்க முடியாது. எதிலும் ஒரு தொகுக்கப்பட்ட முழுமையான பார்வை அவசியம். தமிழ் அரசியலில் ஒருவர் தனது துறை சார்ந்து அதிகமாக தொண்டு செய்தாரா அல்லது தொழில் செய்தாரா என்று பார்க்க வேண்டும். இது குமார் பொன்னம்பலத்துக்கும் பொருந்தும். முன்னணியால் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.
மருதங்கேணிச் சம்பவத்தின் பின்னணியில் அக்கட்சியை விமர்சிக்கும் பலரும் முன்னணி வேண்டுமென்றே முரண்பாட்டை தோற்றுவிக்கிறது என்றே விமர்சித்து வருகிறார்கள். ஆனால் முன்னணி முரண்பாட்டை தோற்றுவித்ததா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை. அது ஒரு முரண்பாடாக வளரக்கூடிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு என்பதுதான் இங்கு பிரச்சனை. தமிழ் கட்சிகளின் நிகழ்வுகளிலும் ஏனைய பொது நிகழ்வுகளிலும் அரச புலனாய்வுத் துறையின் பிரசன்னம் எனப்படுவது கடந்த 14 ஆண்டு கால யதார்த்தம். குறிப்பிட்ட ஒரு அரசியல் நிகழ்வை குறிப்பாக தீவிர நிலைப்பாட்டை கொண்ட ஒரு கட்சியின் அசைவுகளை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் புலனாய்வுத்துறை அக்கட்சியின் நடவடிக்கைகளைப் பின் தொடர்வது வழமை.
போர்க்காலங்களில் அது அச்சுறுத்தலான ஒரு நடவடிக்கையாக இருக்கும். ஆயுத மோதல்கள் இல்லாத காலங்களில் அது நாகரிகமான வழிமுறையாக இருக்கும். இது தமிழ் அரசியல் செயற்பாட்டுக் களத்துக்கு மட்டும் உரிய ஒரு யதார்த்தம் அல்ல. தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் அங்கேயும் அதுதான் யதார்த்தம். ஆனால் இன முரண்பாடுகள் எரிபற்று நிலையில் காணப்படும் ஓர் அரசியல் களத்தில் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகள் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.
கடந்த 14 ஆண்டு காலமாக அதை ஒரு விவகாரமாக மாற்றி அதற்கு எதிராக போராடக் கூடிய ஒரு நிலைமை தமிழ் பரப்பில் குறைவாகவே காணப்பட்டது. மருதங்கேணிச் சம்பவத்திலும்கூட ஒரு புலனாய்வாளர் கஜேந்திரக்குமாரை தட்டிவிட்டுத் தப்பிச் செல்கிறார். அவரை கஜேந்திரக்குமாரின் கட்சிக்காரர் மட்டுமே துரத்திச் செல்கிறார். அங்கே சந்திப்புக்கு வந்திருந்த பொதுமக்களில் யாரும் துரத்தி செல்லவில்லை. ஏனென்றால் அப்படித் துரத்தி செல்வதற்கான துணிச்சல் அங்கிருந்த பலருக்கும் இருக்கவில்லை.
இது ஒரு தமிழ் யதார்த்தம்.இந்த யதார்த்தத்தை உடைத்துக் கொண்டு முன்னணி போராடுகிறது என்பது உண்மை. அதனால்தான் கட்சியின் தலைவருமுட்பட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழ் அரசியலில் காணப்படும் அச்சுறுத்தலான ஒரு சூழலைக் காட்டுகின்றது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்குள்ள சிறப்புரிமைகளின் பிரகாரம் அதிலிருந்து தப்ப முடியும். ஆனால் ஏனைய கட்சித் தொண்டர்களின் நிலை எப்படி அமையும்?
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்திலும் உயர் பாதுகாப்பு வலையத்துள் அமைந்திருக்கும் அந்த காணிக்குள் கஜேந்திரன் மட்டும் தனி மனிதனாக இருந்து போராடினார். அவரைச் சூழ்ந்து மிகக் குறைந்த ஆதரவாளர்களே காணப்பட்டார்கள். அந்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்றிய மக்களின் தொகையை வைத்துக் கணக்கிட்டால் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழ் மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது என்று ஒரு முடிவுக்கு அரசாங்கம் வரக்கூடுமா என்று ஒரு செயற்பாட்டாளர் கேட்டார்.
தமிழ் மக்கள் இது போன்ற விடயங்களில் அரச படைகளை அல்லது காவல்துறையை அல்லது புலனாய்வுத் துறையை எதிர்த்துப் போராடுவதற்கு இப்பொழுதும் தயங்குகிறார்கள். இந்த விடயத்தில் பயத்தை உடைத்துக் கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு முன்மாதிரியை காட்டுகிறது. எனவே தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பயப் பிராந்திக்குள் வைத்திருப்பதற்கே மேற்கண்ட கைது நடவடிக்கைகள்.
அரசாங்கம் கஜேந்திரக்குமாரில் கைவைத்ததன் மூலம் சிங்கள பௌத்த உணர்வுகளைத் திருப்திப்படுத்த முடியும். இது அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்த ரணிலுக்கு உதவும். மேலும் ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் கோபத்தைத் திசைதிருப்பவும் உதவும்