(கனடா உதயனிற்கன பிரத்தியேகத் தொடர்-பகுதி 18)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
மேகி maggi இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவதென்ன? உம்பா உம்பா உம்பா என்று படு கவர்ச்சியாக ரம்யாகிருஷ்ணனும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஐந்து கதாநாயகர்களும் ஆடும் பஞ்சதந்திரப்படப்பாடல் மனக்கண்ணில் வந்து போகிறதா? தவறில்லை. கடந்து வந்த பாதையில் கண்டவை தானே நினைவுக்கு வரும்? இலங்கையின் சோம்பேறி இல்லத்தரசிகளுக்கு மேகி என்றவுடன் தேங்காய்ப்பால் பவுடர் பக்கெட் நினைவுக்கு வரும். இளைய சந்ததி உட்பட இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் பலருக்கும் நினைவுக்கு வருவது மேகி துரித நூடில்ஸ்.
ஒரு கோப்பைத் துண்ணீரைக் கொதிக்கவை. பக்கட்டிலிருந்து நூடில்லை உடைத்து அதில் போடு-கிண்டு. சிறிய பக்கட்டில் உள்ள சேர்மானங்களை அதில் போடு-மீண்டும் கிண்டு. இரண்டு நிமிடங்களில் தயார். அப்படியே உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடு. இவ்வளவு தான் அதன் தாற்பரியம். எங்கள் வீட்டு அம்மணி அதில் உள்ள நீரைவடித்துவிட்டுதான் சாப்பிடக் கொடுப்பா. அந்தத் தண்ணீரில் அஜினமோட்டோ கலந்திருக்காம். அது கூடாதாம். சில நூடில்ஸ் வகைகளிலே ஒரு எண்ணெய் பெக்கற்றும் வைத்திருப்பார்கள். அதையும் போட்டுக்கிண்டினால் அந்த நாற்றத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. வீடு பூராகவும் நாறும். ஆனால் பிறகு நமது மூக்கு அதற்குப் பழகிவிடும்.
சிலவேளைகளில் அதிகாலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் சமயலறையில் கடா புடா சத்தம் கேட்கும். கள்ளனோ? என்று போய்ப்பார்த்தால் எஙகள் வீட்டு சிகாமணிகள் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருப்பார்கள். என்னடா செய்கிறீர்கள் என்றால் நூடில்ஸ் அவிக்கிறோம் என்பார்கள். சரி, பிள்ளைகள் இரவிரவாக கண்விழித்துப் படித்துக் களைத்து பசியில் நூடில்ஸ் தயாரிக்கிறார்கள் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். இரவு முழுவதும் கொம்பியூட்டர் கேம் விளையாடிக் களைத்து அதிகாலையில் கிச்சனுக்குள் புகுந்திருக்கிறார்கள்.
இங்கே இலங்கையில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். மெத்தப் படித்தவர்தான். என்னுடைய எழுத்துக்களை நார் நாராகக் கிழித்துத் தொங்க விடுவார். நீர் பொருளாதாரத்தில் ஒரு டொக்டரேட்டும் முடித்துவிட்ட பிறகு பேப்பருக்கு இப்படி அன்ப்ரொபஷனலாக எழுதுகிறீரே என்று பெரிய கிழியல் நடக்கும். உண்மை என்னவென்றால் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக இருப்பவர்களில் பலருக்கு பொருளாதார விவகாரங்களை நானும் நீங்களும் பரிந்து கொள்ளும் வகையில் இலகுவாகச் சொல்ல அல்லது எழுத வராது. அது ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எந்த மொழியில் சொல்வதானாலும் அப்படித்தான். நானும் கூட அதிலிருந்து விடுபட மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். டவுன் டு த ஏர்த் இக்கோனோமிக்ஸ் (down to the
earth Economics) என்பது என்னவென்றால் பொருளியல் பற்றித் தெரியாத ஒருவரும் இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் அதைச் சொல்வது. என்னைப் பொறுத்தவரையில் கடினமான பொருளாதார எண்ணக்கருத்துகளை எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்களை வைத்து இலகுவாகச் சொல்வது தான் பொருத்தம் என நினைக்கிறேன். தொழில் சார்ந்த ரீதியில், தொழில் நுட்பரீதியில் எழுதுவதற்கு வேறு கடும் சஞ்சிகைகள் உள்ளன. இதையே எனது நண்பருக்குச் சொன்னேன். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார். நானென்றால் ஒரு போதும் இப்படி இறங்கிப்போய் எழுத மாட்டேன் என்கிறார். நான் என்பது நீ அல்லவே தேவ தேவா என்று பாடிவிட்டு எனக்கும் உங்களுக்கும் இடையிலான நமது பாமரத்தனமான உரையாடலைத் தொடருகிறேன். குறித்த நண்பரின் உறவினர்கள் பலர் கனடாவில் பருத்த நிலையில் இருக்கிறார்கள். அவ்வப்போது அங்கிருந்து அவருக்கு நிவாரணப் பொதிகள் வரும். எனது நண்பர் நல்லவர். “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் அங்கே பொசியுமாம்” போல் ஓரிரு தடவை அந்த நிவாரணங்களில் இருந்து ஒருசிலவற்றை நானும் சுவைபார்க்க நமது நண்பரின் ஈகை துணை புரிந்தது. கனேடிய நூடில்ஸ் வகைகளையும் சூப் வகைகளையும் சுவைபார்க்க முடிந்தது.
அங்கும் சிறிய பசிக்கான நிவாரணமாக அவை பயன்படுத்தப்படுவது தெரிகிறது. ஐரோப்பாவில் நான் வாழ்ந்த காலப்பகுதியிலும் சமைக்கப் பஞ்சி என்றால் ஆல்பர்ட்; ஹைனிலோ அல்டி சூப்பர் மார்கட்டிலோ வார இறுதியில் புகுந்தால் மலிவு விலையில் நூடில்ஸ வகைகள், சூப் பக்கற்றுகள் மற்றும் புகையூட்டிய சிக்கன் வகையறாக்கள் இருக்கும். அவற்றுடன் பட்டினியில்லாமல் வாழ்க்கை கழியும். இலங்கையில் இந்த நூடுல்ஸ் வகைகள் 1980களின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு நினைவு. புதிதாக எதை அறிமுகப்படுத்தினாலும் என்ன ஏதென்று கேள்வியின்றி வாங்கிச் சாப்பிடப் பழக்கப்பட்ட ஒரு கூட்டம் இலங்கையின் மக்கள்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் மெகி நூடில்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட கதையை சுவைபடச் சொல்லிப் போனார் கடந்த வாரக்கட்டுரையின் கதாநாயகன் அன்பர் சிவராமகிருஷ்ணன் அவர்கள். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மெகி நூடில்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட பாட்டை கதை கதையாகக் கூறினார். அதில் ஒருவிடயம் எனக்கு மிகச் சுவாரசியமானதாகத் தென்பட்டது. வழமையாக ஒரு புதிய பொருளை அறிமுகம் செய்து வைக்கும் போது இலவசமாகச் சுவைபார்க்கக் கொடுப்பது ஒரு சந்தைப்படுத்தல் உத்தி.
நீங்கள் இலங்கையில் இருந்தபோது உங்கள் வீடுகளில் பழைய பெரிய ஹோர்லிக்ஸ் கண்ணாடிச் சாடிகள் இருந்நது ஞாபகமா? பிரித்தானியர் காலத்திலே ஹோர்லிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது மிகப் பெரிய கண்ணாடிச் சாடிகளிலே இலவசமாக வழங்கப்பட்டே பழக்கப்படுத்தப்பட்டது. இதே போல நூடுல்ஸ் வகைகளும் ஆரம்பத்திலே சாப்பிட்டுப்பார்க்க சாம்பல்ஸ் கொடுக்கபட்டன. அவற்றிலே சேர்க்கப்படும் சுவையூட்டிப் பக்கட்டே நூடுல்சுக்கு நல்ல சுவை தந்தது. என்னுடைய ஞாபகம் சரியானால் 100கிராம் மெகிநூடில்ஸ் பக்கட் 7ரூபா 50 சதத்திற்கு விற்கப்பட்டது பின்னர் அதன் விலை படிப்படியாகக் கூடிய அதே வேளை அதன் கொள்ளளவு படிப்படியாதக் குறைந்து சென்று இப்போது 73 கிராம் 140ரூபாவுக்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் நாம் அறிமுகப்படுத்திய சுருக்க வீக்கம் srinkflation மெகி நூடில்ஸ் தொடர்பிலும் பக்காவாகச் செயற்படுவதைக் காண முடிகிறது. இது போல சைஸ் குறைந்து விலை அதிகரித்த பல பொருள்களை நாம் இக்காலப்பகுதியில் அடையாளப்படுத்த முடியும். ஆனால் இந்தியாவிலே பொருளின் அளவைச் சுருக்கி விலையைக் கூட்டினால் வாடிக்கையாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இலங்கையிலே உள்ள கே எப் சி(KFC)யில் சிக்கன் பக்கட் (Bucket) ஒன்றை வாங்கினீர்கள் என்றால் விலை அதிகமாகவும் அதில் உள்ள துண்டுகளின் அளவு மெலிந்து மிக மிக சிறியதாகவும் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஒரு தடவை சென்னையில் போய் இறங்க இரவாகிவிட்டது. பூந்தமல்லிச் சாலையில் ஒரு விடுதி. அதற்கு அருகில் ஒரு கே எப் சி. சரி ஒரு சிக்கன் பக்கட் வாங்கினால் போதும் என்று வாங்கினோம். அதன் சைசைப்பார்க்கவே பயமாக இருந்தது. அவ்வளவு பெரிது. சாப்பிட முடியாமல் அரைவாசியை எறிந்து விட்டு வந்தது வேறுகதை.
இந்தியாவிலே ஒரு புதிய பொருளை சந்தைக்கு அறிமுகம் செய்து வெற்றிகரமாக இயங்குவதும் இலகுவானதல்ல. மெக் டொனால்ட் நிறுவனம் உலகம் பூராகவும் வெற்றிகரமாக விற்றுத் தீர்க்கும் ஆனானப்பட்ட பிக் மெக் பேர்கரையே (big Mac burger) சீ இது என்ன சாப்பாடு சப்பென்று இருக்கிறதென்று ஓரங்கட்டியவர்கள் தமிழ்நாட்டுகாரர்கள். பின்னர் கொஞ்சம் புளிப்பு காரத்துடன் சில வேறுபாடுகளை செய்த பின்னரே மெக்டோனாட்லுக்கு வியாபாரம் சூடுபிடித்தது.
மதுரையை மையமாகக் கொண்டு தென் தமிழகப்பகுதிக்கு நூடில்ஸ் வினியோகம் செய்யத் தீர்மானித்த மெகி நிறுவனம் (நெஸ்லே) தனது ஆளணியுடன் பொருள் அறிமுகத்தைச் செய்தது. எதிர்பார்த்தது போலவே மக்களிடமிருந்து அதற்கு உடனடி வரவேற்புக் கிடைக்கவில்லை. படிப்படியாகவே கொள்ளவனவுக் கட்டளைகள் வந்து சேர்ந்தன. ஆனால் ஒரேயொரு வினியோகத்தர் மாத்திரம் தொடர்ச்சியாக கொள்வனவுக் கட்டளைகளைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தார். அதுவும் கடனுக்கு அல்ல. காசை உடனடியாகச் செலுத்தி பொருளைப் பெற்றுக் கொண்டிருந்தார். என்ன அதிசயமடா இது. வேறெங்கும் இல்லாத அதிசயமாய் கொள்வனவுக் கட்டளைகள் குவிகிறதே என்று பார்க்கவிரும்பிய அந்த நிறுவனம் அங்கு தனது அதிகாரிகளை அனுப்பியது. அவர்கள் அங்கு போய் பார்த்துவிட்டு தலையிலே கைவைத்துக் கொண்டார்கள். காரணம் குறித்த வினியோகத்தர் தான் வாங்கிய மெகி நூடில்ஸ் பக்கட் எல்லாவற்றையும் பிரித்து ஒரு பெரிய சாடியிலே போட்டு சுவையூட்டியையும் தூவி மிக்ஸர் விற்பது போல சிறிய பொட்டலம் கட்டி விற்றிருக்கிறார். சுவைபார்த்த வாடிக்கையாளர்களுக்கு உப்புச்சுவைகலந்த மெகி நூடில்ஸ் முறுக்குப்போல நறுநறுவென கடிபட்டு புதிய அனுபவம் தந்திருக்கிறது. அதனால் வியாபாரம் அமோகமாக நடந்திருக்கிறது. ஏன் ஐயா இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க உனக்கென்னையா? உனக்கு பொருள் விற்றால் சரிதானே? இதோ பார் முழுப்பொருளையும் காசுகொடுத்துத்தான் வாங்கியிருக்கிறேன் கடனுக்கல்ல. நான் எப்படி விற்றால் உனக்கென்ன? தண்ணியை ஊத்தி கொதிக்க வைத்துத் தின்னாலும் ஒன்றுதான் தின்று விட்டு தண்ணியைக் குடித்தாலும் ஒன்று தான். இதில் என்ன பிழை என்று கத்தியிருக்கிறார்.
அதை இப்படித்தான் சமைக்க வேண்டும்-சாப்பிடவேண்டும் என்று டெஸ்டு எல்லாம் செய்து இலவசமாக எல்லாம் மக்களுக்கு கொடுத்து வியாபாரம் பண்ண மெகி நிறுவனம் நினைத்தால் ’அண்ணாச்சி’ பொருள் வேறாக்கம் செய்து முறுக்கு வியாபாரம் செய்து பணம் பண்ணியிருக்கிறார். ஓரு பொருளை சந்தைக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்தினால் மாத்திரம் போதாது. அப்பொருளை வாடிக்கையாளர்கள்-அப்பொருளின் மூலம் எதிர்பார்க்கப்படும் சரியான நோக்கத்தை அடைகிறாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் உரிய நிறுவனங்களுக்கு உண்டு. எதிர்பார்க்கபட்ட நோக்கத்திற்காக அன்றி வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஏராளமான பொருள்கள் நம் மத்தியில் உண்டு.
ஒரு கணக்கெடுப்புச் செய்து பாருங்கள். இந்த மிக்ஸர் பற்றிச் சொன்னேனல்லவா? அது பெரும்பாலும் என்ன நோக்கத்திற்காகப் பயன்படும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? அது இல்லாமல் தீர்த்தமாட முடியாதல்லவா? கடலைமாவு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, கஜூ போன்ற தரமான உள்ளீடுகளைப் பயன்படுத்தி அவற்றைச் செய்பவர்களும் உண்டு மஞ்சள் பூசணிக்காயைப் பயன்படுத்தி அதைச் செய்யலாமென நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு கிலோ முறுக்கு கோவிட்டுக்கு முன்னர் ஆயிரம் ரூபாவாக இருந்தது. இப்போது அரைக்கிலோ தொள்ளாயிரம் ரூபாவுக்கு வெள்ளவத்தை டப்ளியூ சில்வா மாவத்தையில் உள்ள ஒரு கடையில் விற்கிறார்கள். முன்பு அரைக்கிலோ மிக்ஸரில் ஒரு பத்து கஜூ இருக்கும். ஆனால் அதைக்காணவில்லையே நேற்றோடு. பணவீக்கம் ஏற்படும் போது பொருளின் அளவு மாத்திரமல்ல அதன் தரமும் குறைந்து போகும் என்பதற்கு மிக்ஸர் நல்ல உதாரணம். மிக்ஸரை வாங்கி மெல்லுங்கள் ஆனால் தீர்ரதமாடாதீர்கள்.
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1 – 10
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 11
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 12
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 13
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 14
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 15
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 16
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 17