உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை சேஸிங் செய்து இந்திய அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 296 ரன்கள் சேர்த்தது.
173 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்தார். இதன் பின்னர் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
டெஸ்ட் வரலாற்றில் 418 ரன்களை சேஸிங் செய்ததுதான் அதிகபட்ச ரன்னாக உள்ளது. 2003 இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 418 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் சேஸிங் செய்தது. இதேபோன்று இங்கிலாந்தில் 1948 இல் நடந்த மேட்ச்சில் ஆஸ்திரேலிய அணி 404 ரன்களை சேஸிங் செய்தது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாக சேஸிங் செய்து இந்திய அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.