தாயார் உதிரம் தந்தார் எமக்கு
தந்தை உயிர் தந்தார்
சேயாக எமைச் சுமந்தார் அன்னை
சேவகம் செய்தார் அப்பா
எட்டு மாதத்தில் எட்டடி கற்பித்து
எட்டிவைக்க ஏற்றவழி செய்தார்
துட்டசெயல் செயவிடாது தூயவனாய் வளர்த்து
பட்டினி தெரியாமல் பாதுகாத்தீர்
மூன்று வயதில் மூன்றுசொல் கற்பித்து
மூச்சிலும் பேச்சிலும் முழுமையானீர்
முன்னேறும் வழிகாட்டி மூலமாய் நின்றவரை
முகமன் செய்து போற்றுவோம்
தாயாருடன் அறுசுவை தீரும் என்றும்
தந்தையுடன் கல்வி போமென்றும்
தாயமாகச் சொன்னாள் தமிழ்ப் பாட்டி
திருவாயாய் ஏற்போம் அவர்வார்த்தை
ஐந்து வயதில் அரவணைத்துச் சென்று
ஐயம்தீர அறிவு புகட்டி
ஐந்தும் இரண்டும் அழகாய்ச் சொல்லி
ஐங்கரனின் அருள்பெறச் செய்தீர்
கல்வியோடு கலைகளையும் கற்க வைத்து
கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி
வில்லங்கம் வரும்போது விரைந்து வந்தவரை
விண்ணுலகம் சென்றாலும் மறப்போமா?
தந்தையர் என்போர் தசையால் ஆனவரா?
தன்னலம் இல்லாத் தலைவர்
எந்தையும் தாயும் இரண்டு கண்கள்
என்றும் இவர்களை மறவாதே
தந்தையர் இறந்த தினத்தில் அல்ல
தரணியில் நாங்கள் உள்ளவரை
சிந்தை நமக்குச் சிறப்பாக இருந்தால்
சீராய்ப் பிதாவைப் போற்றுவோமே!
ஆக்கம் …. கவிஞர் மார்க்கம் சந்திரன்.