வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- அதிகாரத்தைக் கைகளில் எடுத்து அரசியலமைப்பை மீறும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.
- “தகுதியற்ற தலைவர்களால் ஒரு நாடு நாசமாய்ப் போவதில்லை. தகுதியற்ற தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களாலேயே அந்த நாடு நாசமாய்ப் போகிறது.” – ஆபிரகாம் லிங்கன்
இலங்கை அரசியலில் பெரிதளவில் பேசப்படும் வார்த்தை ‘ஒரு நாடு ஒரு சட்டம்‘.. ஒரு மொழி இரு தேசம். இரு மொழி ஒரு நாடு என்று
இடதுசாரிகள் அன்றே கூறினர் இந்தக் கூற்றின் தாத்பரியத்தை, யதார்த்தை ஏற்றுக் கொள்ள மறுத்த சிங்களத் தலைமைகளின் “ஒரு மொழிக் கொள்கையாலும்” அதனுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் என்பன 30 வருடகால போரினை தோற்றுவித்தது. போரினை மௌனமாக்கியதாக ,அதாவது தோற்கடித்ததாக மார் தட்டிக் கொள்ளும் ஆளும் வர்க்கம் ‘ஒரு நாடு ஒரு சட்டம்‘, ஏன்ற கோட்பாட்டை பிரகடனப்படுத்தினர்.இந்த “ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற தனதுபிரகடனத்தை அரசாங்கம் தானே மீறி கேலிக் கூத்தாக்கியுள்ளது ஏன்று தென்னிலங்கை ஊடகம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
‘ஒரு நாடு ஒரு சட்டம‘; ‘ஒரு நாடு ஒரு அரசியலமைப்பு‘ என்று கூறப்பட்ட போதும். நடைமுறையில் பௌத்த மேலாதிக்கத்திற்கும் சிங்களவர்களுக்கும் இதனுடன் இணைந்த ஆளும் வர்க்கக் கூட்டாளிகளுக்கும் ஒரு நாடு ஒரு சட்டத்தை மேவியதாக நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
வழமையாக தமிழ் பேசும் மக்கள் தான் ஒரு நாடு ஒரு சட்டத்திற்கப்பால் விஷேட கவனிப்புக்குறியவர்களாக இருந்தனர், இன்றும் இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது தமிழ் பேசும் மக்களுடன் ஆளும் வர்க்கத்தின் அதிருப்தியாளர்களும் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டுள்ளனர்.
‘ஒரு நாடு ஒரு சட்டம‘; என்ற ஏற்பாடும் கோட்பாடும் இலங்கையில் நடைமுறையில் இவ்வாறுதான் இருக்கின்றது.
இந்த இரண்டு பிரிவுக்குள்ளும் தமிழ் மக்களைப் பேன்று தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான செயற்பாடுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற சிறப்புரிமை கூட ஆளும் வர்க்கக் கூட்டாளிகளுக்கு மாத்திரம் உரியதாக இனிவரும் காலங்களில் இருக்கப் போகின்றது என்பதற்கான கட்டியம் கூறும் சம்பவமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்துள்ளது.
இத்தகைய கைதுகள் எதிர்க் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியாளாகள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பாயும் என்ற நிலையிலேயே தென்னிலங்கையின் பல்வேறு மட்டங்களில் இருந்தும் அபாயச் சங்கு ஊதப்படுகின்றது.
- கோதாபயவின் கோட்பாடு
‘ஓரே நாடு ஒரே சட்டம‘; என்ற கோட்பாடு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காலத்தில் அமுலுக்கு வந்தது. அந்த கோட்பாட்டின் பாதுகாவலர்களான இன்றைய ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கத்தின் கைகளிலும் பாதுகாப்பாக போஸித்துப் பராமரிக்கப்படுகின்றது என்பது இரகசியம் அல்ல.
- 13 வது திருத்தம் படும்பாடு.
13 வது திருத்தம் தொடர்பான அமுலாக்கம் என்பது 36 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றது. அரசியலமைப்பின் சட்டவாக்கங்களையே அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்குமாறாக செயற்படுத்த முன்வராத ஆட்சியாளர்களே நாடாளுமன்றத்iதில் கோலோச்சுகின்றனர்.
தற்போதும் கூட ஜனாதிபதி 13ஐ முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கூறுகின்றார். மறுபுறம் 13ஐ அமுல்படுத்த ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் இல்லை என்று பொது ஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் பகிரங்கமாக ஊடகங்களிடம் தெரிவிக்கின்றார். நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மாகாண சபைகளுக்கான பொலிஸ் ,காணி அதிகாரங்களை வழங்குவதுகுறித்து தீர்மானிக்கப்படவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்கின்றார். அதாவது அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக்கூட சிங்கள அரசியல் தலைமைகளும் ,கட்சிகளும், அமைச்சர்களும் தடுக்க முற்படுகின்றனர்.
அரசியலமைப்பை மீறும்வகையில் செயற்பட இவர்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது. அந்த அதிகாரத்தை அவர்கள் தாமாகவே தமது கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
- சிறப்புரிமைக்குள் கஜேந்திரகுமார் எம்பிக்கு இல்லை?
பொலிஸாரை கைது செய்வதை தடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என சபாநாயகர் அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸாரைத் திட்டியதற்காக அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய காவல்துறைஅனுமதித்திருக்குமா?
அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக இருந்திருந்தால் அவர்மீதுநடவடிக்கைஎடுக்கப்பட்டிருக்குமா என்ற கேள்விகளும் எழும்புகின்றது.
- சிறப்புரிமைக்குள் தங்கம் கடத்தல்
நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் 3.5 கிலோ தங்கம் மற்றும் கிட்டத்தட்ட 100 ஸ்மார்ட்ஃபோன்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சமீபத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டபோது, 10 சதவீத அபராதம் செலுத்திய பின்னர் அவர் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
அரசியல் தொடர்புகள் இல்லாத கடத்தல்காரர்கள் எவராவது பிடிபட்டிருந்தால் சட்டவிரோதப் பொருட்களின் மொத்தப் பெறுமதிக்கு இணையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, பணப்பரிவர்த்தனை சட்டத்தை மீறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரஹீமுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வினவியுள்ளது.
- அனைத்து எம்.பி.க்களும் சமம்?
அனைத்து எம்.பி.க்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சியில் செய்ததாகக் கூறப்படுவது இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுடன் ஒப்பிடுகையில் அற்பமானது.
பிடியாணை இன்றி பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்திருந்தும் இராஜாங்க அமைச்சரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவில்லை.
சட்டத்தின் முன் அனைத்து எம்.பி.க்களும் சமம் என்று அரசாங்கம் நினைக்கிறதா?, அல்லது ஆளுந்தரப்பு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் மற்றவர்களை விட அதி விஷேடமாக, மேலானவர்களாகக் கௌரவப்படுத்துகின்றதா என்ற கேள்வியும் எழும்புகின்றது.;
- 2018இல் நாடாளுமன்றில் வெறித்தனம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல்களைப் பொறுத்தவரை, 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பொதுஜனபெரமுன நாடாளுமன்றக் குழுவில் இருந்த ராஜபக்ச விசுவாசிகள் நாடாளுமன்றத்தில் வெறித்தனமாகச் செயற்பட்டமை பதிவுகளாக உள்ளன..
அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட 52 நாள் அரசாங்கத்தைத் தொடர்ந்து பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வன்முறையில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
பின்னர் அவையில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் ஒலிவாங்கிகளை சேதப்படுத்தியதுடன், சபாநாயகரை பாதுகாக்கும் காவலர்கள் மீது நாற்காலிகளை வீசினர்.
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். ஆனால் அந்த வன்முறை எம்.பி.க்கள் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
- பொன்னம்பலத்துக்கு ஒரு சட்டமும் கமகேவுக்கு இன்னொரு
சட்டமும் ஏன்?
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதில் காட்டிய அதேயளவு வேகத்தை, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதில் பொலிசார் காட்டத் தவறியுள்ளனர் என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டு கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதால், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரைக் காவலில் எடுக்க முடியும் என நீதிமன்றங்கள் தெளிவாகக் கூறியுள்ளன‘ என்றும் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா,
‘டயானா கமகே 2004 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும், அன்றிலிருந்து இங்கிலாந்துகடவுச்சீட்டுகளைப்பயன்படுத்துவதாகவும் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு வெளிநாட்டுக் குடிமகன் சட்ட விரோதமாக சபையில் அமர்வதைத் தடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கும் இருக்க வேண்டும்,‘ என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா சுட்டிக்காட்டுகின்றார்.
இராஜாங்க அமைச்சர்கமகேவுக்கு நாடாளுமன்றத்தில் அமர உரிமை இல்லை என ஜயமஹா தெரிவித்துள்ளார். ‘போலி கடவுச்சீட்டுக்களை வைத்திருந்ததாக அவர் மீதான வழக்கு மீண்டும்மீண்டும்ஒத்திவைக்கப்படுகிறதுஎன்பதையும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறு சங்கிலித் தொடராக தனக்குத்தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ள ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கம் நான்கு விரல்கள் தம்மை நோக்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்மீதுசுட்டுவிரலைநீட்டித்தன்னைத்தானேஅசிங்கப்படுத்தியுள்ளது.
- ஆபிரகாம் லிங்கன்.
‘தகுதியற்ற தலைவர்களால் ஒரு நாடு நாசமாய்ப் போவதில்லை.
தகுதியற்ற தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களாலேயே அந்த நாடு நாசமாய்ப் போகிறது.’ என்று ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
- ஆப்பிழுத்த குரங்காக தென்னிலங்கை மக்கள்
ஆபிரகாம் லிங்கத்தின் மேற் கூறிய கூற்று இன்றைய இலங்கையின் நிகழ்கால அரசியல் வரலாற்றில் எத்துனை யதார்த்தமானது, நிதர்சனமானது என்பதை தென்னிலங்கை மக்கள் காலம் கடந்தே உணர்ந்துள்ளனர். தனது பணத்தினால் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வதுபோல் தென்னிலங்கை மக்கள் தாம் இட்ட ‘புள்ளடியால்‘ ஆப்பிழுத்த குரங்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தென்னிலங்கை மக்கள் தமது மீட்சிக்காக இன்னொரு ‘புள்ளடிக்குத்‘ தயாராக இருந்தபேதும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் இப்போதைக்குத் தயாராக இல்லை.
“அரசாங்கத்தின் மக்களாக விளங்கும் நாட்டு மக்களில் இனங்களின் அடிப்படையில் காவல்துறையினர் பணியாற்றுவதும் அதுவும் யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்தும் அரசாங்கத்தின் அடக்கு முறையிலிருந்து முற்றாக வெளியேற முடியாத பாதிப்புக்களுடன் தங்கள் தாயக மண்ணில் வாழும் தமிழர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்யவும். தட்டிக் கேட்டால் துப்பாக்கியை நீட்டுவது போன்ற சம்பவங்கள் நமது மண்ணில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன”.
“அவற்றை தட்டிக் கேட்பதற்கு ஆட்கள் இல்லாததால் மக்கள் என்னும் ‘ஆட்டுக்குட்டிகள்‘ அரசபயங்கரவாதத்திற்கு இனியும் இரையாகிப் போய்விடக்கூடாது என்பதில் அக்கறை கொள்ளும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் எமக்கு உடனடியாகத் தேவை. என கனடா உதயன் ஆசிரியர் தலையங்கததில்(09.06.2023😉 பிரதம ஆசிரியர் என்.லோகேந்திரலிங்கம் சுட்டிக் காட்டியுள்ளார்.
‘இரு மொழி ஒரு நாடு, ஒரு மொழி இரு நாடு‘ என்ற இடதுசாரிகளின் கூற்றின் யதார்த்தத்தை இலங்கை பார்த்துள்ளது.தற்போது அதே பாணியில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோட்பாடும் இலங்கையை எங்கு இழுத்துச் செல்ல உள்ளது? குறிப்பாக தமிழ் மக்களை எங்கு இழுத்துச் செல்ல உள்ளது என்ற சிந்தனையை கஜேந்திர குமார்பொன்னம்பலம் எம்.பியின் கைது தூரநோக்குடன் சிந்திக்க வைத்துள்ளது.