(மன்னார் நிருபர்)
(13-06-2023)
மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-44) என்பவர் மீது கடந்த 30 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வைத்து குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர்களை மன்னார் பொலிஸாரிடம் அடையாளம் காட்டிய போதும் இதுவரை குறித்த சந்தேக நபர்களை மன்னார் பொலிஸார் கைது செய்யவில்லை என மன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் 3 பேரையும் இதுவரை மன்னார் பொலிஸார் கைது செய்யாமை குறித்து தாக்குதலுக்கு உள்ளான மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-44) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் கடந்த 30 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வைத்து குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட பகுதியில் அன்றைய தினம் சிலர் முரண்பாட்டுக் கொண்டிருந்தனர்.
இவ்விடயம் குறித்து முச்சக்கர வண்டி தலைவர் என்ற வகையில் குறித்த முரண்பாடு குறித்து மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தும் வகையில் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன்.
-இதன் போது குறித்த சங்கத்தைச் சேர்ந்த 3 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேருக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டியில் வைத்து கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.
சங்கத்தின் முன்னாள் செயலாளரின் செயல்பாடு சரி இல்லாத நிலையில் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னாள் செயலாளருக்கு எதிராக முச்சக்கர வண்டி சங்கத்தினாலும் மன்னார் பொலிஸாரினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
.இதனால் அவருடன் சேர்ந்த ஒரு சிலர் எங்களுடன் முரண்பட்ட நிலையில் இத் தாக்குதலின் பின்னணியில் என்னுடன் முரண்பட்ட 3 முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சுமார் 20 பேருக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
எனவே சம்பவத்துடன் தொடர்புடைய சங்கத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் 3 பேரையும் அவர்கள் அழைத்து வந்தவர்களையும் பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் மன்னார் பொலிஸார் இது வரை குறித்த 3 பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்யவில்லை.
மேலும் குறித்த 3 முச்சக்கர வண்டி சாரதிகள் தற்காலிகமாக சங்கத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
-மன்னார் பொலிஸார் இதுவரை சந்தேக நபர்களை கைது செய்யாத நிலையில் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.