சூழ்ந்தபல நிலையமைந்தும் சுகம்தேடும்
வழிவிட்டுத் தமிழும் தொண்டும்
வாழ்வோடு கூடிவர வயற்காட்டிற்
கூவுமொரு குயிலே போல்வான்
ஆழ்ந்தமைந்த நூற்தேடல் அருங்கலைகள்
ஆக்குதிறன் கொண்டுவையத்து
ஈழவர்க்காய்த் தமிழெழுதும் இனியானைப்
போற்றுவம்யாம் வாழி அன்ப!
வள்ளுவனார் வகுத்ததமிழ் மறைகூறு
முறைபேணி மனக்கண் நீவிர்
உள்ளூறும் அன்பென்னும் நீர்பாய்ச்சிப்
பெருவாழ்வுப் பயிர்வ ளத்தீர்
தெள்ளுதமிழ் வாழ்வுமுறைத் திறம்படிந்த
யாழ்மண்ணின் சான்றோ ருன்றன்
வெள்ளைமனப் பண்புநலன் பாராட்டிப்
போற்றியது கேட்டின் புற்றோம்!
ஐயநின தருமணத்தின் ஐபத்து
நிறைவாண்டு கண்டு வந்தோம்
கைசெய்யும் கலையாவும் தமிழ்க்குலத்தின்
வளர்ச்சிக்குக் கருவாய் நின்று
வையத்தே பயன்விளைக்கும் திருநாளில்
வாழ்த்துக்கள் சேரக் காண்பாய்
செய்யாளைப் போல்வாள்நின் மனையோடு
தமிழ்ச்செல்வ நீடு வாழி!
தன் இதயத்தாலும் எழுத்தாலும் வாழ்த்துபவர்
அனலை ஆறு. இராஜேந்திரம்