பருத்தித்துறையில் பிறந்த திரு. றோய் இரட்ணவேல் அவர்களது கைதி இலக்கம் 1056 (Prisoner # 1056 ) என்னும் நூலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை 12/06/2023 அன்று மொன்றியல் திருமுருகன் ஆலய மண்டபத்தில் பலரது வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும் மொன்றியலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றையதினம் இந்நூலைப் பலர் திரு. றோய் இரட்ணவேல் அவர்களது கையொப்பத்துடன் பெற்றுக் கொண்டனர்.
நாம் வாழ்ந்த காலத்தில் நடந்த என்றும் எங்கள் மனங்களில் மாறாத றணமாக இருக்கும் அந்த கொடூரமான ஒப்பரேஷன் லிபரேஷனானது அந்தப் பகுதிகளில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவலத்துடன் கூடிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது உண்மையே. அந்த வகையில் இந்தக் கதையானது ஒப்பரேஷன் லிபரேஷன் காலத்து அவரது அனுபவப் பதிவாக உள்ளது. இந்நூல் வெளிவருவதற்கு முன்னரே இந்த நூலைப்பற்றிய திரு. றோய் இரட்ணவேல் அவர்களின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். பார்த்த போதே எண்ணினேன் எப்படியும் அந்த நூலை வாங்கி வாசித்துவிட வேண்டும் என்று. சற்றேனும் எதிர் பாராத விதமாக மிக அருகிலேயே அந்த நூலுக்கான ஒரு சிறிய விழாவில் அந்நூலை நூலாசிரியரின் கையொப்பத்துடன் பெற்றுக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த நூலை வாசிப்பதில் அதிக ஆர்வம் இருப்பதற்கான காரணம் என்னவெனில் எனக்குப் பதினைந்து வயதாக இருந்த பொழுது அந்த நேரத்தில் நாம் சந்தித்த அனுபவித்த மிகவும் கொடூரமான மனிதாபிமானம் அற்ற துன்பியல் நிகழ்வுகளின் ஒரு சிறு பகுதியை ஏனும் உலகமே அறியக்கூடிய வகையில்இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ள விதம் தான்.
Penguin random house ஆல் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலானது ஒரே நாளிலேயே உலகிலுள்ள பல பாகங்களிற்கும் போய்ச் சேரக்கூடியதாக இருந்ததுவும் இதன் சிறப்பாம்.
மேலும் இந்தநூலானது பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டதோடு மொத்தம் இருநூற்று அறுபது பக்கங்களைக் கொண்டது. மிகக் கனமான சொற்களைக் கொண்ட இந்த ஆங்கில நூலின் முதல் அத்தியாயத்தைப் படிக்கும் போதே அன்றைய அந்த கொடூரமான அனற்காத்தும் , புழுதியும், தூசும் , இரத்தமும், குண்டுகளின் சத்தமும் கத்தல்களும் கதறல்களும், சங்கிலிப் பிணைப்பும், அதில் பிணைக்கப்பட்டடோரின் மரண பயத்தை வெளிப்படுத்தும் பார்வையும் மீண்டும் கண்முன் வந்து போயின.
முதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில் பருத்தித்துறைப் பட்டினம், அதன்பெயருக்கான காரணம் , அங்கு கிடைக்கக்கூடிய சுவையான உணவுகள் வியாபார நிலையங்கள் குறிப்பாக மீன்சந்தையும் அங்கிருக்கும் மக்களின் செயற்பாடுகளும் மற்றும் மகிழ்ச்சியான காலத்து ஹாட்லிக் கல்லூரி மாணவர்களது ஒருசில நினைவுகள் கூறப்பட்டன. அப்பாடசாலை வேலியோடு ஒட்டியே மெதடிஸ்ற் பெண்கள் உயர்தரப் பாடசாலையும் இருப்பதனால் அவர் கூறிய அந்த நினைவுகளின் நிஜங்கள் என் கண் முன்பும் வந்து போயின.
ஒப்பரேஷன் லிபரேஷன் தொடங்கிய காலத்து வெடிச்சத்தமும் , நெருப்புப் போல் காற்றோடு கலந்து வந்த வெக்கையும் ( வெப்பம்) அவர் சொற் பிரயோகங்களில் நன்றாக உணரமுடிந்தது. “ Even grass refused to grow “ என்ற வார்த்தை நிச்சயம் வேற்று இனத்தவர்களையும் நாம் அனுபவித்த அந்த போர்க்கால வெம்மையை இலகுவில் விளங்கிக் கொள்ள வைக்கும். இப்படி பலராலும் நன்கு உணரக்கூடிய வகையில் பல வார்த்தைகள் இப்பகுதியில் கையாளப்பட்டுள்ளன.
அன்றைய வான் தாக்குதலுக்கோ குண்டுத் தாக்குதல்களுக்கோ பயந்து ஒளித்து இராது ஆபத்துக்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சாதாரண இளைஞனாக உதவி புரிந்த தருணங்களையும் அப்பொழுது எதிர் கொண்ட பிரச்சினைகளையும் கூறியுள்ளார்.
அப்பாவி இளைஞனாக பதுங்கு குழியில் ஒதுங்கி இருந்த போதும் பெற்றோர் முன்னிலையில் பிடித்துக்கொண்டு போனது , சங்கிலிப் பிணைப்பில் இணைத்தது, வெய்யிலிலும் அசுத்தமான இடங்களிலும் இருத்தியது. பின்பு கப்பலில் ஏற்றியபோது அங்கு பட்ட இன்னல்கள் காலியில் இறக்கி நடத்திய விதம், அங்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள் , கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இரண்டாயிரத்து எழுநூறு பேரும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி இலக்கங்கள் கொடுத்து கூண்டுகளில் அடைக்கப்பட்டது போன்றவற்றையும் கூறும் இந்த அத்தியாயத்திற்கு “ The Prisoner “ என்ற தலைப்பு இடப்பட்டிருக்கிறது.
இதை வாசிக்கும் போது இரத்தத்தில் ஒரு வித கொதிப்பே உண்டாகும். அந்த நாட்களில் அந்ந நேரத்தில் அந்தச் சூழலில் இருந்தவர்களுக்கு.
அடுத்த அத்தியாயங்களில் அவர் எப்படி அந்த சிறையில் இருந்து வெளியில் வருகின்றார் என்பதும் , பதினெட்டு வயதில் கனடாவிற்கு வந்த அவர் எப்படியான சவால்களைச் சந்தித்து இன்று கனடிய நிறுவனம் ஒன்றில் மிகவும் சிறப்பிற்கு உரிய இடத்தில் இருக்கின்றார் என்பதையும் கூறுவதாகவே அமைந்திருக்கும் என்பது அத்தியாயங்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புக்கள் மூலம் அறிய முடிகின்றது.
புலம் பெயர்ந்துள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக இளையவர்கள் நாம் கடந்துவந்த இந்த கடுமையான பாதையினை அறிந்திருக்க வேண்டியது அவசியமானது. அத்தோடு பல் கலாச்சார நாடு ஒன்றில் வேற்று நாட்டிலிருந்து வந்து தன்னை நிலைப்படுத்தி மேல் நிலைக்கு வருவதற்கு ஒரு மனிதன் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டான் என்பதை அறிவதற்கும் இந்த நூல் உதவியாகவும் , சவால்களை எதிர்கொள்வதற்குரிய உந்து சக்தியைக் கொடுப்பதாகவும் அமையும் என்பதை அன்று திரு. றோய் அவர்களே குறிப்புட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்த அத்தியாயங்களையும் படித்து முடித்துத் தொடரும் வரை
உமா மோகன் ( M.A) – Montreal