தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டப்பேரவை நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மேலும், ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்ளுக்கு பதில் அளிப்பது, அரசு 110 விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தவிர யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.
சபாநாயகரின் உத்தரவுப்படி, சட்டப்பேரவை அதிகாரிகள் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன.
அந்த ஆய்வின்படி, கோவா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கேரளாவில் கேள்வி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒடிசாவில் சட்டப்பேரவை நிகழ்வுகள் எடிட் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
எனவே, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 6ம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 எப்ரல் 12-ம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, அன்றைய தினம் நடந்த பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் முக்கிய தலைவர்கள், எதிர்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக கொறடா வேலுமணி மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “அரசியல் சாசன அமைப்பு சட்டத்தின்படி இந்த விவகாரத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது. மக்கள் எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நேரமில்லா நேரத்தை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாது. அதுகுறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும். பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சேண்டுமென விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள வழக்கில் 8 வருடங்கள் கழித்து தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென எஸ்.பி.வேலுமணி கோரியுள்ளார். எனவே அவரது மனுவை ஏற்கக்கூடாது” என்றும் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.