வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு.
- போர் மௌனிக்கப்பட்டது. ஆனால் தீர்வு இல்லை.
- அதிகாரமளித்தல் நகைச்சுவையாகிவிட்டது.
இலங்கையின் சுதந்திர கால வரலாற்றில் இன்றைய நிகழ்கால தென்னிலங்கை அரசியல் ஒட்டு மொத்த மக்களையும் நாட்டையும் பழி தீர்க்கும் வன்ம அரசியலின் மொத்த உருவமாக உள்ளது. ரணில் – ராஜபக்ஷ ஆளும் தரப்பினர் தமது அரசியலின் நிகழ்கால எதிர்கால இருப்புக்கான சட்டரீதியான இரும்புக் கவசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சட்டவாக்க கவசத்தை நோக்கி ரணில் – ராஜபக்ஷ அணியினர்.
அந்த வரிசையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு [BRC] ஸ்தாபனம் என வரிசையாக அவசர அவசரமாக சட்ட ஏற்பாடுகளை கொண்டு வர முயல்கின்றனர்.
இது மனச் சாட்சி இல்லாதவர்களின் ‘வரலாற்று ஜனநாயக படுகொலையாகும்‘ என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. ரணில் – ராஜபக்ஷக்களின் இந்த நகர்வுகள் வெற்றி பெறுமாக இருந்தால் ஒன்றல்ல எத்தனை ‘அரகலயாக்கள்‘ உருவாகினாலும் இவர்களது கவசத்திற்குள் இருந்து நாடு மீள்வது கடினமாகவே இருக்கும்.
ஏனெனில் இவை அணைத்தும் சட்ட ரீதியாக நிபுணத்துவமிக்கவர்களால் வடிவமைக்கப்படும் விடயங்களாகும்.
- ராஜபக்ஷக்களின் வழமையான அரசியல் தொடர்கிறது.
‘சிஸ்டம் சேன்ஜ்‘ எனக் கூறி ஒரு வருடத்திற்கு முன் மடை திறந்த வெள்ளம் போல் மக்கள் திரண்டனர் .நாட்டின் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறினார்.பிரதமர் இராஜினாமா செய்தார். அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த மாற்றங்கள் சூறாவளியை எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக நிலத்தோடு ஒட்டிப் படுத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நிகழ்வுகளாகவே இருந்தன என்பதை ராஜபக்ஷக்களின் அணியினர் அன்று பதுங்கியதும் பதுங்கியவர்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்பதும் உணர்த்தி நிற்கின்றன.
‘அரகலய‘சூறாவளிவந்தவேகத்தில்போய்விட்டது.ராஜபக்ஷக்களின் வழமையான அரசியல் ரணில் விக்ரமசிங்கவின் நிழல் அரசில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ரணில் மற்றும் ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி தொடர்ந்தும் அரசியலில் தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் முன் நகர்த்தும் அரசியல் காய்களின் தாத்பரியத்தை விளங்கிக் கொள்ளலாம்.
ரணில் – ராஜபக்ஷக்களின் நகர்வுகள் தென்னிலங்கை அரசியலை கொதி நிலைக்குள் தள்ளியுள்ளது. அதே வேளையில் ஒட்டு மொத்த மக்களின் இயங்கியலையும் தமக்கான ஜனநாயக இருப்பையும் காப்பாற்றியாக வேண்டும் என்ற கோபாவேசத்திற்குள் நாட்டையும் மக்களையும் தள்ளியுள்ளது.
- ஊடகத்துறையின் எதிர் காலம்?
இந்த விடயத்தில் ஊடகத்துறையினரின் எதிர் காலமே ஒரு நிச்சயமற்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. மொத்தத்தில் இந்த சட்டவாக்கங்கள் ஊடகத்துறையினரைக் குறிப்பாக இலத்திரனியல் ஊடகத்துறையினரை ‘வாழ்வா சாவா‘ என்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
- 1958 இனக் கலவரம்.
ஊடக அடக்குமுறை என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றுடன் இரண்டறக் கலந்த ஒரு விடயமாகும்.
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட 1958 இனக் கலவரத்தை அடுத்து சேர் ஜோன் கொத்தலாவல பத்திரிகை நிருபர்களை அழைத்து கலவரம்குறித்த செய்திகளை வெளியிட வேண்டாமென கட்டளையிட்டார் என விதாச்சி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- லேக் ஹவுஸ் தேசியமயம்.
சிறிமாவோ பண்டாரநாயக்கா 1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1973 இல் லேக் ஹவுஸ் குழுவை தேசியமயமாக்கினார்.
அவ் வேளையில் “தி நியூயார்க் டைம்ஸ் “பத்திரிகை மே 8, 1974, ஆம் ஆண்டு பின்வருமாறு எழுதியது.
- ‘ஆசியாவிலேயே மிகவும் உயிரோட்டமான பத்திரிகைகளில் ஒன்றான இலங்கைப் பத்திரிகை, அரசாங்கத்தால்கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது.’
சுதந்திர பத்திரிகையானசன்குழுமம்1974இல்சிறிமாவோபண்டாரநாயக்காவினால் அவசரகால விதிமுறைகளின் கீழ் சீல் வைக்கப்பட்டது.
உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார சிக்கல்கள் குறித்து அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு உள்ளான பிரதமர், செய்தித்தாள்கள்,‘வேண்டுமென்றே உண்மைகளைதிரிபுபடுத்திப்பரப்புரைசெய்கின்றன‘என்றுசிறிமாவோபண்டாரநாயக்கா கூறினார்.
அந்தக் காலகட்டத்தில் டைம்ஸ் ஒவ் சிலோன் பத்திரிகை மாத்திரமே போட்டியாளர் நிலையில் இருந்தது. ஆனால் அப் பத்திரிகை அவ்வேளையில் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருந்ததினால் அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்திருந்தது.
நாட்டின் ஒரே இலத்திரனியல் ஊடகமான அரச சார்பான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (SLBC ) இருந்தது.
இது போன்ற பல சம்பவங்கள் இலங்கை அரசியலில் பதிவுகளாக இருக்கின்றன. இவை அனைத்தும் அவ்வப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மேற் கொண்ட சம்பவங்களாக பதிவாகியுள்ளன.
- ரணில் – ராஜபக்ஷக்களின் நகர்வுகள் அபாயமானது.
ஆனால் தற்போதைய நிலை அவ்வாறானதல்ல. ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கம் இணைந்து தமது நிகழ்கால எதிர்கால அரசியல் இருப்புக்காகவும் இலங்கையின் அரசியலை தீர்மானமிக்க தமக்கான திசை நோக்கி நகர்த்துவதற்குமாக மேற் கொள்ளப்படும் நகர்வாக இருக்கின்றது.
இந்த நகர்வுகள் நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் அராஜகப் பிடிக்குள் தள்ளிவிடும் போக்கினைக் கொண்டது என்பதால் நாட்டின் அனைத்து தரப்பினரும் எதிர்த்து நிற்கின்றனர்.மக்களும் ஊடகத்தறையினரும் இவ்விடயத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்த வெற்றியுடன் ஊடகத்துறை தன்னை சுய பரிசோதனைக்கு உற்படுத்திக் கொள்ளுமா என்ற கேள்வியை இவ்வேளையில் முன் வைப்பது சிறந்ததாக இருக்கும்.
- இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு.
ஏனெனில் சுதந்திர இலங்கை கடந்த 75 வருடங்களாக ‘ஜனநாயகம் இல்லாத ஜனநாயகத்தில்‘, அதாவது மாய சுதந்திரத்திற்குள் மூழ்கிக் கிடந்துள்ளோம் என்று ‘அரகலயா‘க்களின் எழுச்சியுடன் தென்னிலங்கை ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகின்றது. அதாவது இலங்கையின் தென்னிலங்கை அரசியல் சக்திகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் அரசியல் முதலீடாகக் கொண்டே அரசியல் வெற்றிகளை ஈட்டி வந்தனர்.
தென்னிலங்கை மக்களை இவ்வாறான ஒரு மாயைக்குள் வைத்த பெருமை கடந்த 75 வருடத்திற்கு மேற்பட்ட கால வரலாற்றில் தென்னிலங்கை ஊடகங்களுக்கும் பெரும் பங்குண்டு. அந்தளவுக்கு தென்னிலங்கை ஊடகங்கள் மக்களை இருட்டுக்குள் தள்ளி ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நடந்ததுடன் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல்வாதிகளுடன் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.
அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் செயற்பட்டன என்பது பரம இரகசியமில்லை.
கொழும்புப் பத்திரிகைகள்
- இலங்கையில் ஊடகத்துறை இனரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. தமிழர் விவகாரங்கள், தமிழர் அரசியல் அபிலாiஷகள் என அனைத்து விடயங்களையுமே குதர்க்கமாகப் பார்க்கும் போக்கினை காலம் காலமாக கொழும்புப் பத்திரிகைகள் தமது ஊடகக் கொள்கையாகவே கொண்டுள்ளன.
- இதனைச் சரியாகக் கணக்கிட்டு 1923 இல் அதாவது 100 வருடங்களுக்கு முன் ‘குரங்கெல்லாம் ஒரே முகம்‘ என்று திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதியுள்ளர். இந்த முகம் இன்றும் தொடர்கின்றது.
- வடமாகாண முதலமைச்சராக இருந்த முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கண்டியில் உள்ள பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது,
- கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எம்மை பிரிவினைவாதிகள், இனவாதிகள் நாட்டைப் பிரிக்க முற்படுபவர்கள் என பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. நாம் பிரிவினைவாதிகள் அல்ல, இனவாதிகள் அல்ல என்று குறிப்பிட்டார்.
- கொழும்புப் பத்திரிகைகள் 100 வருடங்களுக்குப் பிறகும் தம்மை மாற்றிக் கொள்வதற்குத் தயாராக இல்லை என்பதையே முன்னாள் வட மாகாண முதலமைச்சரின் கூற்றும் உறுதிப்படுத்துகின்றது.
தென்னிலங்கையில் ஊடகஅரசியல்எவ்வளவுஆழஊடுருவியுள்ளது என்பதும் பரம ரகசியம் இல்லை.
- இலங்கையில் 1994 இல் திருமதி குமாரதுங்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன.
- நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது.
- அண்மையில் Change Of System ‘அரகலயா‘ கருத்தியல் நாடுபூராவும் வியாபிக்கவும் நூறு நாட்களுக்குள் வெற்றியை எட்டுவதற்கும் ஊடகங்களின் பங்கு அளப்பபரியது.
- ஒரு நாடு தகுதியற்ற தலைவர்களால் நாசமாய்ப் போவதில்லை.
தகுதியற்ற தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களாலேயே அந்த நாடு நாசமாய்ப் போகிறது.’ என்று ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்படியானால்; இலங்கையில் தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திர இலங்கையில் ஊடகங்கள் மக்களுக்கு வழி காட்டத் தவறிவிட்டன. ஏனெனில் ஊடகங்கள் மக்கள் குறித்தோ அல்லது நாட்டின் எதிர்காலம்குறித்தோ சிந்தித்து மக்களின் ,நாட்டின் குரலாக செயற்படவில்லை.பெரும்பாலும் அரசியல்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் குரலாகவே செயற்பட்டன.
- எனவேதான் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ போன்றதொரு தலைவரை உருவாக்க தென்னிலங்கை ஊடகங்களால் முடியவில்லை. இன்று கூட முடியவில்லை.
அதன் கோரவிளைவுகளைநாடும்,மக்களும்இன்றுஅனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுடன் ஊடகங்களின் பயணமும் பெரும்பாலும் ஒத்திசைவாகப் பயணித்ததன் விளைவு இன்று நாடு “தோற்றுப் போன “நாடாக உலக அரங்கில் நிற்கின்றது.
இதுகுறித்து தென்னிலங்கை ஊடகங்கள் இன்று பெரிதாகப் பேசுகின்றன.
சுதந்திர இலங்கையின் 75வருட கால அரசியலில் மாற்றம் அவசியம் வேண்டும் என்றும் பரப்புரை செய்கின்றன.
- மக்களின் குரலாக தென்னிலங்கை ஊடகங்கள்.
அந்தவகையில் ஊடகங்கள் முதன் முறையாக மக்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எனவேதான் ரணில் – ராஜபக்ஷ ஆளும் வர்க்கத்தின் ஒட்டு மொத்த கோபமும் ஊடகங்கள் மீதும் பாய்ந்துள்ளது.
அதே வேளையில் மக்களின் சிந்தனை அதன் விளைவாக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக எழுகின்ற தன்னெழுச்சிப் போராட்டங்கள், ஊழலுக்கு எதிரான கோசங்கள் என அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் சட்டரீதியலான கவசத்திற்குள் நிரந்தரமாக முடக்கிவிட ரணில் – ராஜபக்ஷ அணியினர் முயல்கின்றனர்.
ஊடகங்களுக்கு எதிரான பொறிமுறைக்கு சிங்கப்பூர் நாட்டை உதாரணம் காட்டும் ரணில் – ராஜபக்ஷ அணியினர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்களின் நடைமுறை செயற்பாடுகள் குறித்து பேச மறுக்கின்றனர்.
தொழிலதிபர் நண்பருடன் விடுமுறைக்கு சென்ற சிங்கப்பூர் துணை அமைச்சர், திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
அவரைக் கைது செய்து விசாரித்தபோது, ‘நீங்கள் ஒரு தொழிலதிபருடன் விடுமுறையில் சென்றிருந்தீர்கள், உங்கள் செலவுகள் அனைத்தையும் அவர் செலுத்தினார். அதுதான் ஊழல் என நிரூபிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் இத்தகைய ஆட்சியை நடைமுறைப்படுத்த ரணில் – ராஜபக்ஷ அணியினர் தயாராக இருக்கின்றனரா.? நடைமுறைப்படுத்தினால் ஆட்சியில் ஒரு சிலரே மிஞ்சுவர். பெரும்பாலானவர்கள் சிறைக் கம்பிகளுக்குள் இருக்க வேண்டி வரும்.
- மலிந்துவிட்ட ஊழல்.
இன்றும், நாட்டின் கடன் சுமையின் பின்னணியில்,
‘பூண்டு ஊழல்‘, ‘ சீனி ஊழல்‘ போன்ற மோசடிகள் மூலம்,உயர்மட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இந்த நாட்டின் வளங்களை தங்கள் ஊழல் நடவடிக்கைகளால் தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர்.
ஊழல்களினால் மக்களின் உயிர்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றது.
இத்தகைய அராஜகப் போக்கில் இருந்து நாடும் மக்களும் மீட்டு எடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது.
- •இனவாத மதவாத அரசியலில் இருந்தும் விடுதலையாக வேண்டும்.
அதே வேளையில் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க ஊழலுக்கெதிரான செயற்பாடுகளுடன் அரகலயாக்களின் சிஸ்டம் சேன்ஜ் கருத்தியல் மாத்திரம் போதாது. நாடும் மக்களும் இனவாத மதவாத அரசியலில் இருந்தும் விடுதலையாக வேண்டும். தென்னிலங்கை மக்கள் இது குறித்து ஆழமாகவே சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால் இந்தச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் போக்கு தென்னிலங்கை ஊடகத்துறையில் விதைக்கப்படுகின்றது. இது மீண்டும் இனவாத ,மதவாத அரசியல் ஊடாக ஆட்சிபீடம் ஏறி அரசோச்ச முயலும் சக்திகளுக்கு பாதை அமைத்துக் கொடுப்பதாக அமைகின்றது.
இது தென்னிலங்கை பேசுகின்ற எதிர்பார்க்கின்ற “சிஸ்டம் சேன்ஜ்” கருத்தியலுக்கு மாறான பழைய போக்கிற்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதாக அமைந்துவிடும்.
இலங்கை “தோற்றுப்போன” அரசாக உருவெடுக்க இனவாத மதவாதத்துடன் கண்மூடித்தனமான ஊழல் அரசியல் ; மாத்திரமல்ல தமிழர் விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வினைக் காணத் தவறியதும் காரணம் என்பது தென்னிலங்கை மக்கள் மாத்திரமல்ல தென்னிலங்கை ஊடகத்துறையினரும் பட்டறிந்து கொண்ட உண்மையாகும்.
- போர் மௌனிக்கப்பட்டது ஆனால் தீர்வு இல்லை.
போர் மௌனமாக்கப்பட்டது என்பது உண்மை. ஆனால் தமிழர் விவகாரத்துக்கான தீர்வும் இன்றுவரை காணப்படவில்லை என்பதும் அதே அளவு உண்மையாகும். ஏனவேதான் 2009 ஆம் ஆண்டில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க வரை தமிழர் விவகாரத்துக்கு தீர்வு காண்பது குறித்து பேசி வருகின்றனர்.
- இலங்கையில் அதிகாரமளித்தல் என்பது நகைச்சுவையாகிவிட்டது.
- எண்பதுகளின் பிற்பகுதியில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும்இ இந்த நிறுவனங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
- உதாரணமாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான அதிகாரங்கள் படிப்படியாக மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டன.
அரசியலமைப்பின்13வதுதிருத்தம்பாராளுமன்றத்தால்நிறைவேற்றப்பட்டது.ஆனால் அது ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- இதுவே இலங்கையில் மோதல் சூழ்நிலைக்கு காரணமாக அமைந்தது.
- அரசியல் கட்சிகளும்,சிவில் சமூகங்களும் 13 வது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரிபோராடினாலும்இந்தகுரல்களுக்குஆட்சியில்இருந்தஅரசாங்கங்கள்செவிசாய்க்கவில்லை.
அதே வேளையில்அதிகாரமளித்தல், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அனைவருக்கும் சம உரிமைகள் ஆகியவற்றின் அவசியத்தை ஊடகங்கள் கவனம் செலுத்தினாலும், கடந்த 30 வருடங்களில் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை.
சிவில் சமூகமும் ஊடகங்களும் ஒன்றிணைந்து உண்மையான நிலைமையை அம்பலப்படுத்தி, மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கு மக்களைத் தூண்டினால் மட்டுமே இந்த செயல்முறையை சிறப்பாகச் சாதிக்க முடியும்.
- அமைச்சர் மனுஷநாணயகார.
ஆனால் துரதிஸ்டவசமாக பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் அதிகாரப்பரவலாக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளன. ஊடகவியலாளர் அமைப்பொன்றின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மனுஷநாணயகார 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுபற்றி தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு ஊடகத்துறையினர் சாதகமாக இல்லை என்பதை பகிரங்கமாகக் கூறியதை இங்கு பதிவு செய்வது பொருந்தும்.
- தமிழர் விவகாரத்துக்குத் தீர்வு காணாதவரை இலங்கைக்கு மீட்சி இல்லை.
தமிழர் விவகாரத்துக்குத் தீர்வு காணாதவரை இலங்கை காணவிழைகின்ற பொருளாதார மீட்சியோ அல்லது சுபீட்சமோ அல்லது ‘சிஸ்டம் சேன்ஜ்‘ என்பன நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் இலங்கை மீண்டும் இனவாத மதவாத அரசில் சேற்றுக்குள் மூழ்கடிக்கப்படவே வழிவகுக்கும்.
‘போர் மனிதர்களின் மனதில் தொடங்குவதால், அமைதிக்கான பாதுகாப்பை உருவாக்குவதும் மனிதர்களின் மனதில் தான்‘ உள்ளதுஎன்று யுனெஸ்கோவின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அத்தகைய விசாலமான மனதைக் கொண்ட அரசியல் கலாசாரமும் அதனை காத்திரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஊடக கலாசாரமும் உயிர்பெற வேண்டும்.
அந்தவகையில் அதிகாரமளிப்பதற்கான மாற்றத்தை எளிதில் அடைய, ஊடகங்கள்” குரலற்றவர்களின் குரலாக “ஒலிக்க வேண்டும்.
எனவே ஊடகத்துறை என்பது நாட்டையும் மக்களையும் நெறிப்படுத்தும் புனிதப் பணியாகும். தென்னிலங்கை ஊடகங்கள் நூற்றாண்டு கால சித்தாந்தத்தில் இருந்து விடுபட்டு ஒரு புதிய இலங்கையை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.