(உதயனின் சிறப்பு கட்டுரை- எமது செயதியாளர்)
இலங்கை கடலை குறிவைக்கும் சீனாவிற்கு அவல் கிடைத்தமை போன்று சீனாவிற்கு சாதகமான ஒருவர் நாராவின் (NARA) பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமையின் பணிப்பாளர் சபைக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் பேராசிரியர் வினோபாவா கடற்றொழில் அமைச்சரால் 2023-06-12 அன்று நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் கடல் பிராந்தியத்தில் என்ன முயற்சியிலாவது எந்த தொழிலிற்கேனும் இறங்கிவிட வேண்டும் என சீனா முழு வீச்சில் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில்-இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற சீனாவுடனான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கான ஏற்பாட்டு நிகழ்விலும் இதே பேராசிரியர் முழுவீச்சில் செயல்பட்டிருந்தார் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகின்றன.. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் சீனாவின் பக்கம் நின்றபோது கிழக்கு மாகாணத்தின் நிர்வாகங்களையும் சீனாவின் பக்கம் இழுத்துச் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு நிலவிய போதே இந்தச் சம்பவமும் இடம்பெற்றது.
இந்த நிலையில் இலங்கையின் கடல்சார் திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் ஏதும் கிடைக்கும் சமயத்தில் அதனை நாராவிடம் சமர்ப்பித்து ஆய்விற்கு உட்படுத்தி அதன் பரிந்துரையின் அடிப்படையில் முடிவுகள் எட்டுவதே வழமையான நிலை. அப்படியான நிலையில் சீனா சார்பில் ஏதும் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அது நாரா எனப்படும் தேசிய நீர் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமையின் ஆய்விற்கு அனுப்பி அதன் சான்றிதழைப் பெற்று இணைக்கப்பட்டாலும் உள்ளூர் அதிகாரிகள் அல்லது மீனவ அமைப்புக்கள் அதனை ஏற்றுக்கொண்டாலும் இந்தியா அதனை ஏற்குமா என்ற தீவிர சந்தேகம் தொடர்ச்சியாக உள்ளது. மேலும், வடகிழக்கு தமிழ் மக்களிடம் மட்டுமன்றி இதர தரப்பினரிடமும் இந்த ஐயம் இருக்கிறது. அதேவேளை, இவ்வாறான திட்டங்களிற்கு சாதகமான சான்றிதழைப் பெறுவதற்காகவே சாதகமான ஒருவர் அமர்த்தப்பட்டார் என்ற நியாயமான சந்தேகத்தை எழுந்தாலும், அதை உறுதி செய்யும் வகையிலே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை இந்தியாவின் அழுத்தங்களை மிஞ்சிய அழுத்தமாகவே இருக்கும் என்று அரசியல் அவதானிகள் மற்றும் அறிவியல் சமூகத்தினரின் இன்னுமோர் பார்வையாகவுள்ளது.
இதனிடையே தற்போது தேசிய நீர் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமையின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் வினோபா தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ள நால்வரில் ஒருவராகவும் உள்ளார். ஆகவே இதே தாக்கம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவிலும் ஆதிக்கம் செலுத்துமா எனவும் பலரால் தற்போதே ஐயம் கொள்ளப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்குள்ளும் அதன் செயல்பாடுகள் மற்றும் நிதிஈட்டல்களிற்குள் எந்த வகையிலேனும் உள் நுழைய கடந்த இரு ஆண்டுகளாக சீனா படாதபாடுபடுகின்றது என்பதும் உலகறிந்த உண்மை. இதன் ஒரு வெளிப்பாடாக ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளத் தயாரானபோது மாணவர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பு வெளியிட்டமையினால் துணைவேந்தர் மாணவர்களின் கூற்றுக்கு அமைய அதில் இருந்து பின் வாங்கியதனால் தற்போதைய துணை வேந்தர் இந்தியா சார்பான நிலைப்பாட்டை எடுக்கிறாரா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர் தெரிவு என்பது யாழ்ப்பாணம் இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ளதா அல்லது சீனாவான் முற்றுகையிடப்படுகிறதா என்ற போட்டி நிலைகூட எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பல்கலைக்கழத்தில் உள்ளவர்களே கூறும் நிலை நிலவுகிறது.
இதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக வடக்கிலே இன்றுவரை ஓர் கடல் அட்டைப் பண்ணைகூட இல்லாத மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். அங்கும், அதாவது முல்லைத்தீவிலும் கடல் அட்டைப் பண்ணைகளை மேற்கொள்ள முடியுமா எனவும் மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்புக்கு ஏதுவான கடற் சூழல் இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்காக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆய்வு அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மாதம் 13ஆம் திகதி கலத்துரையாடினார். இனி அங்கும் ஏதுவான கடல் சூழல் உண்டு என்றே அறிக்கை கிட்டும் என தற்போதே பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 268 கடல் அட்டைப் பண்ணைகளும், கிளிநொச்சியில் 277 பண்ணைகளும், மன்னாரில் 123 பண்ணைகளும் உள்ள நிலையில் இனி முல்லைத்தீவும் கண் வைக்கப்பட்டு விட்டது. அதனால் சீனாபாடு கொண்டாட்டம்தான். இந்த கடலட்டை பண்ணைகள் மூலம் சீர் செய்ய முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி, வடக்கே ஏற்கனவே கடல் அட்டைப் பண்ணைகள் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.
சீனாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த கடல் அட்டைப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கடலட்டைகள் முழுமையாக ஏற்றுமதி நோக்கத்தையே மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் நல்ல விலையைப் பெற்றுக்கொடுக்க கூடியவை இந்த கடலட்டைகள். ஆனால் அதன் மூலம் பெறப்படும் இலாபங்கள் சீன முதலாளிமார் அல்லது அதை நடத்தும் சீன நிறுவனத்திற்கே செல்கிறதே தவிர, அதன் மூலம் உள்ளூர் மீனவர்கள் யாரும் பலனடையவைல்லை என்பதே யதார்த்தம். இதில் ஈடுபடும் உள்ளூர் மீனவர்களுக்கு கூலி மட்டுமே கொடுக்கப்படுகிறது, அதுவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை.
இந்த நிலையில் நிர்வாக மட்டத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமும் சீனாவின் கடைக்கண் பார்வையில் இருந்தபோதும் தப்பி பிழைத்து வருகின்றபோதும் அமைச்சர் பக்கத்து அழுத்தங்களிற்கு குறைவு இன்றியே காணப்படுகின்றது. இதிலே எதிர்வரும் 21ஆம் திகதி சீனாவில் இடம்பெறும் யோகா தினத்திற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு கடந்த மாதம் 9 ஆம் திகதியிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்றை சீனா அனுப்பியதோடு மே மாதம் 29 ஆம் திகதிக்கு முன்பு வருகையை உறுதி செய்யுமாறும் கோரப்பட்டது.
இதற்கான பதிலை மே மாதம் 22 ஆம் திகதிவரை துணை வேந்தர் வழங்காதபோது 23 ஆம் திகதி அமைச்சரின் ஒரு மாவட்டத்திற்கான தனிப்பட்ட செயலாளர் துணை வேந்தரை மிரட்டும் தொணியில் அதற்கு பதிலளிக்குமாறு கோரியுள்ளார்.
இருந்தபோதும் எவர் கூறியும் அதனை கேளாத துணைவேந்தர் வழமையான பாணியில் இதனையும் செவிசாய்க்காதமை மட்டுமன்றி இந்தக் காலத்தில் சீனாவின் மற்றுமோர் நீண்டகால எதிரிநாடான ஜப்பானிற்கு பயணமாகிவிட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் போன்று சீனாவும் முயல்கின்றது. இதனால் எதிர் காலத்தில் கடல் சார் அறிக்கைகள் சீனாவிற்கு சார்பாக மாற்றப்படுமா என இந்தியாவும் அஞ்சுகின்றது.
தற்போது நாரா அமைப்பிற்கு சீன சார்பு நிலை கொண்டவர் என்று கருதப்படும் மூத்த பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை, இலங்கையின் வட கடல் பகுதியில், கேந்திர ரீதியான பொருளாதர போட்டிக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் எழுந்துள்ளன. அண்மை காலத்தில் சீனாவின் உயரதிகார்கள் வட மாகாணத்தின் பல பகுதிகளிற்கு விஜயம் செய்வது, ஓரிரு தினங்கள் தங்கியிருந்து நடுநிசியில் கடலிற்குள் இறங்குவது, ட்ரோன்களை பறக்கவிட்டு ஆய்வுகளை மேற்கொள்வது போன்றவையும் அவதானிக்கப்பட்டுள்ளன.
சீன உயரதிகாரிகள் பாக்கு நீரணைப் பகுதியில் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்வதை இந்தியா அறிந்துள்ளதா, அறிந்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா அல்லது மறைமுகமாக தமது இயலாமையை வெளிப்படுத்துகிறதா என்றெல்லாம் துறைசார் மக்கள் வெளிப்படையாகவே பேச்கின்றனர்.
இதன் பின்புலத்தில் இலங்கையின் வடகடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் அது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு நேரடியாக விடப்படும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.