தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அவர் உயிரிழந்த நிலையில் நந்திக்கடல் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அது கௌரவமற்ற முறையில் ஊடகங்களின் முன்னர் காட்சிப்படுத்தவை உலகம் அறிந்தது. இறுதிகட்ட யுத்தத்தில் அவர் என்று, எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. அது குறித்த சர்ச்சைகளும் தொடருகின்றன.
அதுமட்டுமின்றி அவர் உயிரிழந்த பிறகு அவரது சடலத்திற்கு என்ன ஆனது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், அவர் இறந்த பிறகு அவரது உடல் பிரதே பிரிசோதனை செய்யப்பட்டது.
குறிப்பாக பிரபாகரனின் மரபணு (DNA) பரிசோதனை, பிரேத பரிசோதனை அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருப்பதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.
இதனைக் காரணங்காட்டி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அதனை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இவ்வாறான நிலையில், பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கோரியுள்ளார்.
பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, DNA பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டன? என்பது தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி இந்த தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகத்துக்கு தான் இந்த விண்ணப்பித்தை அனுப்பி வைத்திருந்ததாக ஊடகவியலாளர் மிதுன் கூறுகிறார்.
“தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று குறிப்பிட்டு இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
எனினும், இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர் மிதுன் தெரிவித்தார்.
பொதுவாக தேசியப் பாதுகாப்பு என்பது மிகவும் பரந்துபட்ட ஒரு சொல்லாகும். அதற்கான வரையறைகளை வகுப்பதும் கடினம். தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தொடர்ச்சியாக இலங்கை அரசு பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறது என்பது உண்மை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ளும் அரசு, அவர் மரணம் எவ்வாறு சம்பவித்தது என்று கூற தயங்குவதிலிருந்து சில சந்தேகங்கள் எழுகின்றன. அவர் உடல் மீதான பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டால், உயிழப்பிற்கான உண்மையான காரணம் (அறிக்கை நியாயமானதும் உண்மையுமாக இருந்தால்) தெரியவரும். அதை அளிக்க அரசு தயங்குவதிலிருந்து அதில் ஏதோ மர்மம் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அந்த அறிக்கை வெளியிடப்படாத வரையில் சந்தேகம் வலுக்கவே செய்யும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், அந்த பிரேத பரிசோதனை அறிக்கை, உண்மைக்கு புறம்பில்லாத வகையில் வெளிப்படுத்தபட வேண்டும் என்று தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்கிறது.
தென்னிலங்கையைச் சேர்ந்த மிதுன் ஜயவர்தன போன்று யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதே கேள்வியை கேட்டதாகவும், அதே பதில் அவருக்கும் அளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.