தமிழக ஆளுனராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி பொறுப்பேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “ராஜ் பவனிலோ அல்லது ஆளுநரிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை” என்று கூறினார். பல்கலைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களுக்கும், சென்னைக்கு அருகில் ஒரு சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவுக்கும் ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளேன்” என்று அவர் கூறியிருந்தார்.
அதே நாளில், அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகக் கூறினார். இந்நிலையில் அரசுக்கும், ஆளுனர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் தி.மு.க. அரசின் திராவிடம் மாடல் கொள்கையை ஆளுனர் ரவி கடுமையாக சாடி இருந்தார்.
அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்து இருந்தார். இந்நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 13 மசோதாக்கள் ஆளுனர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்ட மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மதம் அனுப்பிய 2 மசோதாக்கள் சேர்த்து 13 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பது தகவல் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. சட்டத்துறையின் பதிலின்படி, ஆளுநரிடம் “நிலுவையில் உள்ள” மற்ற மசோதாக்கள் தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டங்கள் (திருத்த மசோதா), சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்டங்களில் திருத்தம் தொடர்பான மசோதாக்கள்; மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மசோதா, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மசோதா, மற்றும் தனுவாஸ் மசோதா, போன்றவை ஆகும்.