வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆளுகையில் 1985ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலங்களை வரைபடம் தயாரிக்க இலங்கை அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் அதனை அண்டிய மாவட்டங்களிலும் பலர் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த சமயம் அந்த இடங்களில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டன.
இதையடுத்து அவ்வாறு காணப்பட்ட பகுதிகளும் வனப் பகுதி எனவும் வன உயிரினங்களின் பகுதியாகவும் அரச இதழ் வெளியிடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக பொதுமக்களின் வாழ்வு பெருமளவிற்கு பாதிக்கப்பட்டது.
அந்த பகுதிகள் வனவள திணைக்களத்திற்கு உட்படவை என்று கூறப்பட்ட காரணத்தால் மக்கள் அந்தப் பகுதிகளிற்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குரல்கொடுத்தாலும் அரசு கவனம் செலுத்தாத நிலையே காணப்பட்டது.
எனினும், இவ்வாறு காணப்படும் பகுதிகளை அடுத்த 6 மாத காலத்திற்குள் அதாவது இந்தாண்டு இறுதிக்குள், பகுதி பகுதியாக விடுவிக்கும் நோக்கில் விரைவில் அப்பகுதிகளை இனம் காணும் ஏற்பாடாக வரைபடம் தயாரித்து விடுவிப்பதற்கான ஒப்புதல் வன வளம் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியானல் சமர்ப்பிக்கப்பட்ட விடயத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வடக்கில் இன்னும் பொதுமக்களின் காணிகள் உட்பட இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.