எமது யாழ் செய்தியாளர்
சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை தேசிய முதலீட்டுச் சபையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவே அமைச்சரவைக்கு நேரடியாகச் சமர்ப்பித்தார்.
தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சீனவின் முதலீட்டாளர்களின் ஓர் சீனி உற்பத்தி தொழிற்சாலையான sutech தொழிற்சாலையை வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நயினாமடுவில் 492 ஏக்கர் அல்லது 200 கெக்டேயர் நிலப்பரப்பில் அமைக்கவும் அங்கு சீனி உற்பத்திற்கு தேவையான கரும்புச் செய்கைக்கு 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை முதல்கட்டமாக அந்த தொழிற்சாலைக்கு வழங்கவுமே அன்றைய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த தொழிற்சாலையின் கரும்புச் செய்கைக்கு வவுனியா மாவட்டத்தின் சகல பிரதேசங்களில் இருந்தும் நிலம் வழங்கப்படுவதோடு அயல் மாவட்டங்களிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கு என்னும் பெயரில் மேலும் 42 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கவும் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுமே அதிக நிலங்கள் வழஙகப்படவுள்ளதோடு அயல் மாவட்டமான முல்லைத்தீவிலும் குறிப்பிட்டளவு நிலமும் இதற்குள் உள் வாங்கப்படவுள்ளது.
இந்தத் தொழிற்சாலைக்கான நில விநியோகம் தொடர்பிலேயே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனும் ரெலோவின் பேச்சாளராள சுரேன் குருசாமியும் ஜனாதிபதியை தனியாகச் சந்தித்ததோடு இந்த சீனி உற்பத்தி தொழிற்சாலைப் பிரதிநிதிகள், தேசிய முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே 18ஆம் திகதி மேற்கொண்ட இரகசிய கலந்துரையாடலிலும் ரெலோவின் சுரேன் குருசாமியும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இலங்கை-சீனா நட்புறவு அமைப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் சீனா சென்றுள்ளனர். அந்த குழுவில் செல்வம் அடைக்கலநாதமும் இடம்பெற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.