கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டியில் ஒரு லாட்ஜில் பாம்பு விஷத்துடன் ஒரு கும்பல் தங்கி இருப்பதாக மலப்புரம் மாவட்ட எஸ்.பி. சுஜித்தாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கொண்டோட்டி ஏ.எஸ்.பி. விஜய் பாபு ரெட்டி தலைமையில் போலீசார் லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் தங்கியிருந்த 3 பேரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களது அறையில் சோதனை நடத்தினர். இதில் அந்த அறையில் இருந்து ஒரு பிளாஸ்கில் வைத்திருந்த பாம்பின் விஷம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2 கோடியாகும். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை சேர்ந்த பிரதீப் நாயர்(62), குமார்(63), திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரை சேர்ந்த பஷீர்(58) என்பதும் தெரிய வந்தது. இவர்களில் குமார் பத்தனம்திட்டா மாவட்டம் அருவாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார்.
பிரதீப் நாயர் ஓய்வு பெற்ற ஆசிரியர். அவர்கள் கொண்டோட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விஷத்தை விற்பதற்காக ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் அவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.