யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார்.
மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கடற்றொழிலாளர்களின் சார்பாக உரையாற்றியிருந்தனர்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லை தாண்டிய மீன்பிடி, உள்ளூர் மற்றும் வெளியூர் ட்ரோலர் படகுகளின் அத்துமீறல்கள், சுருக்குவலை சட்டவிரோத செயற்பாடுகள், மீன் வளங்களை அடியோடு சூறையாடுதல், மீன்களின் இனப்பெருக்க காலங்களை கவனிக்காத அத்துமீறிய மீன்பிடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை கடற்றொழிலாளர்கள் முன்வைத்தனர்.
சந்திப்பில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் பாரதூரமானவை. அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியவர்களே அதை கவனியாது இருக்கும்போது, நாம் பாராளுமன்றில் எமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், எல்லைதாண்டிய மீன்பிடி தொடர்பாக இந்திய அரச தரப்பை எமது குழுவோடு சென்று சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும் எமது அழுத்தத்தை நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்., கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.