-நக்கீரன்
கோலாலம்பூற், ஜூலை 02:
தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மேநாள் மாணவியும் கவிவாணியுமான உசாராணி சாமிநாதனின் இரு கவிதை நூல்கள் ஜூலை 02, ஞாயிறு பிற்பகல் 3:30 மணியளவில் தலைநகரத்து டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் வெளியீடு காண்கின்றன.
மனித வளத்துறை மேநாள் அமைச்சர்களான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணி-யன், டத்தோஸ்ரீ மு.சரவணன் ஆகியோர் தலைமையேற்று சிறப்புரை ஆற்றியபின் வெளியீடு காணவிருக்கும் சந்தனத் தோணி, ‘நானாகிய நான்’ நூல்களுக்கு மெல்லிய இலக்கிய பின்புலம் உண்டு.
தொடக்கத்தில் புதுக் கவிதையின்பால் நாட்டம் கொண்டிருந்த உசாராணி, தன் சிந்தனைக் குதிரையை கடிவாளமில்லாமல் ஓடவிட்ட காலத்தில் புனைந்த உரைவீச்சுப் படைப்புகளைத் தொகுத்து, ‘நானாகிய நான்’ என்னும் பெயரில் புதுக்கவிதை நூலாக்கி இருக்கிறார்.
இதில் பெரும்பாலும் உசாராணியின் தொடக்கக்கால படைப்புகள் இடம்பெற்றுள்ளன; தனிமனித உணர்வை வெளிப்படுத்தும் இப்புதுக் கவிதைகள்வழி, தன் வாழ்க்கைச் சூழல் கற்றுக் கொடுத்தவற்றைக் கொஞ்சம் வன்மையாகவும் திண்மையாகவும் கடத்தியுள்ளதாக சா.உசாராணி குறிப்பிடுகிறார்.
டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியம் நடத்தும் இலக்கியப் போட்டியில் கலந்து கொண்டு புதுக்கவிதைப் பிரிவில் பரிசும் வென்றிருக்கிறார், இவர்.
கவிதை என்றால் கவிதைதான்; அதென்ன புதுக் கவிதை?
எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி, கரை காணாமல் ஓடும் காட்டாற்று வெள்ளம்போன்றது புதுக் கவிதை; இத்தகைய புதுப்பாங்கை தமிழ் மொழிக்கு அறிமுகம் செய்தவன், மாகவி பாரதி எனத் தெரிகிறது; இது தமிழ் மொழிக்கு நன்மைபயக்க வல்லதா அல்லது தீதானதா என்பதை நாளைய உலகம் வகைப்படுத்தும்.
மரபுக் கவிதை என்பது, மண்ணும் மனிதனும் பயனுறும் வகையில் இருமருங்கிற்கும் அடங்கி, தண்மையாகப் பயணிக்கும் ஆற்றைப் போன்றது.
புதுக்கவிதையில் பெருவிருப்பு கொண்டிருந்த உசாராணி, முனைவர் மனோண்மணி அண்ணாமலை போன்ற மரபுக்கவிவாணியர் மற்றும் அவர்தம் வட்டத்தைச் சேர்ந்தவர்களின் தாக்கத்தால், உரைவீச்சு தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக்க் கொண்டு, மரபுக் கவிதைப் பூங்காவில் உலா வரத் தொடங்கினார்.
யாப்பிலக்கணத்தில் தேர்ந்தபின், சூட்டோடு சூடாக இயற்றிய கவிதைகளை, ‘சந்தனத் தோணி’ என்னும் பெயரில் தொகுத்து இன்னொரு நூலாக்கி இருக்கிறார். இத்தோணியில் பயணிக்கும் பாத்திரங்களாக இறை சிந்தனை, இயற்கை, மொழி, இலக்கியம், கலை, பெண்மை, தாய்மை, நாடு, இனம், குமுகாயம் உள்ளிட்ட கருப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்விரு நூல் வெளியீட்டு விழாவில், சுப்பிரமணியன், சரவணன் இருவரும் ஆற்ற இருக்கும் உரைப்பொழிவு சிந்தைக்கு விருந்தாக அமையும் என்பது திண்ணம்; இவ்விழாவில், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய-வாதிகள் என அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பித்து ஆதரவு வழங்க வேண்டுமென்பது உசாராணியின் எண்ணம்.