போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
இன்றையதினம் அவர் தையிட்டி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவேளை ஊடகவியலாளர் ஒருவர், “இன்று யாழில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிரிழந்தாரோ அல்லது உயிருடன் உள்ளாரோ என எனக்கு தெரியாது. இதன் போது நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். இருப்பினும் குறித்த விடயம் தொடர்பாக மேல்மட்டங்களுக்கே அறிவிக்கப்பட்டது என்ன கூறியிருந்தார். இதுகுறித்து தங்களது கருத்து எவ்வாறு அமைகிறது” என செல்வராஜா கஜேந்திரனை வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும், மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருந்த போதும் அவர்களுடைய படைகள் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயனக் கொண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி அந்தப் படுகொலைகள் நடைபெற்றிருக்கின்றன. இவை அனைத்திற்கும் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே நாங்கள் விடைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.