இலங்கையின் உள்நாட்டு கடன் அதிகரிக்கிறது ; கடன்களை தள்ளுபடி செய்யவே கடன் மறு சீரமைப்பு – ஜேவிபி குற்றச்சாட்டு
இலங்கையின் உள்நாட்டு கடன் 41 வீதமாகக் காணப்படுகின்ற நிலையில் அதனை கட்ட முடியாத அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் அரச வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே ஏற்பட்ட சகல பிரச்சனைகளுக்கும் ரணில் மற்றும் ராஜபக்சக்களே பொறுப்பு கூற வேண்டும்.
நாட்டின் மொத்த கடன் 2010 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 594 டொலர் மில்லியனாகவும் 2019 ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 431 டொலர் மில்லியனாகவும் 2022 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 491 டொலர் மில்லியனாகவும் நாட்டின் கடன் காணப்படுகிறது.
நாட்டில் வெளிநாட்டு கடன் வாங்கும் வேகம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் பெற்ற கடனை கூட அரசாங்கத்தினால் கட்ட முடியாத அவல நிலை காணப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டில் பெற்ற கடன் தொகை 42 .4 டொலர் மில்லியனாக காணப்படுகிற நிலையில் ஐஎம்எவ் இடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக கடன் மறு சீரமைப்பை செய்யவுள்ளது.
கடன்களை தள்ளுபடி செய்தல் வங்கிகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்த உள்ள நிலையில் நாடு அதல பாதாளத்துக்குள் செல்லும் நிலை உருவாகும்.
2010 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி கையிருப்பு 7 ஆயிரத்து 196 டொலர் மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு 1879 டொலர் மில்லியனாக காணப்பட்டது.
நாடு வெளிநாட்டு வருமானத்தை இழந்துள்ள நிலையில் எட்டு மாத துறைகளான ஆடைத்துறை தேயிலை ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் மொத்த தேசிய உற்பத்தி 77 ஆயிரத்து 60 டொலர் மில்லியனாக காணப்படுகிறது.
தற்போதைய நாட்டின் டொலர் கையிருப்பு 1800 மில்லியன்களாகக் காணப்படுகிறது நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் 5.2 டொலர் மில்லியனை திருப்திப் செலுத்த வேண்டும்.
இவ்வறான நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆயிரத்து 400 கோடி பிணைமுறை மோசடி, கோட்டபாஜ ராஜபக்ச ஆட்சியில் 1560 கோடி ரூபாய் சீனி மோசடி, தாமரைக் கோபுர மோசடி மற்றும் பனாமா ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் இடம் பெற்றது.
எனினும் குறித்த மோசடிகள் மூலம் சூறையாடப்பட்ட மக்களின் பணம் இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்படவில்லை.
ஆகவே பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட கடனை கூட செலுத்த முடியாத அரசாங்கத்தின் நிலை இவ்வாறு தொடருமானால் இலங்கையின் எஞ்சிய பாகங்களையும் பங்களாதேஷ்க்கு தாரை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.