சீன அட்டை இனத்தால் எமது அட்ட இனங்கள் அழிகின்றது – சுப்பிரமணியம் தெரிவிப்பு
இலங்கைக்கே உரித்தான அட்டைக் குஞ்சுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்டை இனங்களால் அழிவுக்குள்ளாவதாக அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்பில் அட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்பட்டு சீனா நிரந்தரமாக கால் ஊன்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகிறது.
பாரம்பரியமாக கடற் தொழிலை மேற்கொண்டு வந்த மீனவ மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள துறை சார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கறை இன்றி செயல்படுகிறார்.
மீனவர் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அமைச்சர் நளினமாக பார்ப்பதுடன் சில வேளை கிண்டலடிக்கும் செயற்படுகளும் இடம்பெறுகிறது.
தீவக வடக்கு ஊர்காவற்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட மீன் பிடி நடவடிக்கையை தடை செய்யுமாறு அரச அதிபர் கோரிய நிலையிலும் கடற் தொழில் அமைச்சரின் ஆதரவுடன் மீன்பிடி நடவடிக்கை இடம் பெறுகிறது.
குறித்த செயற்பாட்டை நோக்கும்போது அமைச்சர் தனது வாக்கு வங்கிக்காகச் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகின்றது.
அட்டைப் பண்ணைகளால் கடல் வளத்துக்கு பாதிப்பு என பல தடவைகள் அமைச்சருக்கு தெரியப்படுத்தவும் அதனை விரிவுபடுத்தும் செயற்பாட்டிலே ஈடுபட்டு வருகிறார்.
அட்டை பண்ணைகள் பத்து வருடங்களுக்குப் பின்னர் கைவிடப்படும் நிலை உருவாகும் போது மீனவர்கள் சோம்பேறிகளாகி கடல் தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகும்.
ஆகவே எமது வளமான கடற் பிரதேசம் சீனாவின் நிரந்தரக் கடற் பிரதேசமாக மாறுவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் சமாசத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கரை நகர் அம்பாள் கடை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராஜசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.