யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
“அரசியலிற்காக ஜனநாயகத்தையும் கைவிட தயாராகிவிட்டனர் எமது தமிழ் கட்சிகள்” என்ற வசனம் இப்போது வட மாகாணத்தில் பரவலாகப் பேசப்படுவதை காண முடிகிறது.
அதேவேளை கட்சி அல்லது அமைப்பின் பெயரை தக்கவைத்துக் கொண்டால் தேர்தல் அரசியலில் வெற்றி சுலபமாக தேடிவரும் என்பது பல சந்தர்ப்பங்களில் பொய்த்து போயுள்ளது. சின்னமும் பெயரும் மட்டுமே வாக்குகளை பெற்றுத்தராது என்பதை உணராத அரசியல் கட்சிகள் தோல்வியையே தழுவியுள்ளதை இந்திய இலங்கை தேர்தல் வரலாறுகள் உணர்த்தியுள்ளன.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகியவை இதர இரண்டு கட்சிகளுடன் இணைந்து புளட் அமைப்பைச் சேர்ந்த சிலரால் 2011 இல் பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதை மீண்டும் இயக்க செய்ய முடிவு செய்தனர்.
இவ்வாறு காணப்படும் கட்சியின் சுருக்கப்பெயராக DTNA என வருவதனால் அந்தப் பெயரை TNA என சட்டபூர்வமாக மாற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஆங்கிலத்தில் TNA என்பதை போன்று இந்த ஐந்து கட்சி கூட்டணி அதை dTNA என்று தமிழ் மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தியது. தமிழ் மக்கள் ரி என் ஏ என்பதை மனதில் வைத்து இவர்களை ஆதரிக்க கூடும் என்பதனாலேயே இப்படியான ஒரு முன்னெடுப்பு செய்யப்பட்டது என்று தமிழ் அரசியல் விடயங்களை கூர்ந்து அவதானித்து வருபவர்கள் கூறுகின்றனர். அந்த முன்னெடுப்பு வெற்றி பெறுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயர் தமது வசம் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்தது பொய்த்து போயுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆர்.ராகவனை செயலாளராக்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கி தமிழ்த் தேசியக் கூட்டணி என மட்டும் செயல்படவும் அதனை ஆங்கிலத்தில் T.N.A என உச்சரிக்கவும் ஐவர் அணி அல்லது ’பாண்டவர்கள் அணி’ என்று மக்களால் விமர்சிக்கப்படும் அணி சார்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை 2023 மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவின் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதே பெயரில் வேறு கட்சி/அமைப்பு நீண்ட காலமாக இயங்குவதனால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு தற்போது எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் தற்போது 5 கட்சிகள் கூட்டாக இயங்குவதோடு 5 கட்சிகளின் தலைவர்களும் இணைத் தலைவர்களாக இயங்கும் நிலையில் ரி.என்.ஏ ஆரம்பிக்கும்போது இருந்த 5 கட்சிகளில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரு கட்சிகளும் இந்த கூட்டணியில் இருப்பதனால் அந்தப் பெயர் தமக்கே சொந்தம் என கூறிவந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.
இதேநேரம் தமிழ்த் மேசியக் கூட்டமைப்பு என அனைவரும் இணங்கி தமிழ் அரசுக் கட்சியின் பெயரில் செயல்படவே ஒப்புதல் வழங்கியதனால் அந்தக் கட்சியின் சின்னத்துற்கே இப்பெயரை பயன்படுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பதிலளித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறி விட்டதாக ரெலோவும், புளட்டும் அறிவித்து தம்முடன் ஈ.பி.ஆர்எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அந்த ஐவர் அணி வாதிட்டது.
இதற்கமையே இக்கட்சிகளினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு அறிவித்துள்ளமை தொடர்பில் இக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரும் புளட. அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவிற்கு எதிராக விரைவில் நீதிமன்றத்தினை நாடுவோம்” என்றார்.