– சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும் அசியல் ஆய்வாளருமான சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம்
பதின்மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும் அசியல் ஆய்வாளருமான சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
13-வது திருத்தம் தற்போது மீண்டும் பேசு பொருளாகி வந்திருக்கிறது.
இந்தியா எவ்வாறாயினும் பதினொன்றாவது திருத்தத்தினை அரசியல் தீர்வாக திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் புலம்பெயர் நாடுகளுக்குச் குறிப்பாக லண்டனுக்கு சென்று புலம்பெயர் தரப்புகளோடு 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசியிருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று எப்பாடுபட்டாவது இனப் பிரச்சினையை தீருங்கள் என்று ஒரு நிபந்தனையை வைத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல படையினர் உடைய எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்குமாறு நிபந்தனை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது
ஆகவே இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஏதோ ஒரு வகையில் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்திருக்கிறது.
இந்தியாவிற்கும் இனப் பிரச்சனை தீர்வு தொடர்பில் 13 க்கு அப்பால் செல்வதற்க்கான விருப்பங்கள் எவையும் இல்லை. இந்த நிலையில் தமிழ் தரப்பை 13வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது ஏற்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரு வகையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
13-வது திருத்தம் ஏற்கனவே யாப்பில் உள்ள ஒரு விடயம். அதனை நடைமுறைப்படுத்தப்படுவது அரசினுடைய கடமை.
இதைவிட பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பான பொறுப்பு தமிழ் மக்களுக்கு இல்லை. ஏனெனில் 13வது திருத்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது.
அது இரண்டு அரசுகளில் தங்களுக்குள் பேசி கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்.
தமிழ் மக்களுக்கு அது தொடர்பான எந்த விதமான பொறுப்பும் இல்லை.
அதே வேளையில் அரசியல் தீர்வாக திணிக்கின்ற ஒரு முயற்சி இடம்பெறுகிறது.
ஆகவே இந்த முயற்சியை தமிழ் மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
13-வது திருத்தம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை தீர்த்துக் கொள்வதற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.
அது ஒரு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு அரசியல் தீர்வு.
ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு திருத்தம் தான் 13 வது திருத்தம். ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட எந்த அதிகார பகிர்வும், நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எந்வித பயனையும் தரப்போவதில்லை.
இதைவிட பல நெருக்கடிகள் 13 வது திருத்தத்தில் இருக்கின்றன.
ஒன்று ஆளுநருடைய அதிகாரம். நிர்வாக துறையை அதிகாரம் முழுமையாக ஆளுநரிடமே இருக்கிறது.
முதலமைச்சரும் அமைச்சரும் வெறுமனே அவர்கள் ஒரு ஆலோசனை கூறுபவர்களாக மட்டும் தான் இருக்கிறார்கள்.
மாகாண சபை சட்டம் இயற்றுவதில் பல்வேறு தடைகள் இருக்கிறது பாராளுமன்றம் ஒரு தடை, ஆளுநர் ஒரு தடை, ஜனாதிபதி ஒரு தடை சட்டமா அதிபர் ஒரு தடை, உயர் நீதிமன்றம் ஒரு தடை, ஒரு தடை என்று சொல்லி பல தடைகள் இருக்கின்றன.
இதைவிட தமிழ் மக்களினுடைய கூட்டிருப்பை, கூட்டுரிமையை, கூட்டு அடையாளத்தை, பேணக்கூடிய வகையிலே வடக்கு கிழக்கு இணைக்கப்படவில்லை. அது இப்போது பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இவ்வாறான ஒன்றை தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இது தொடர்பாக ஆதரிக்கின்ற தமிழ் கட்சிகள் இது தொடர்பாக முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது பதிமூன்றாவது திருத்தை நடைமுறை படுத்துவது என்பது வேறு.
அதனை அரசியல் தீர்வாக திணிப்பது என்பது வேறு.
இங்கே நடைமுறைப்படுத்துவது என்று சொல்லிக் கொண்டு அரசியல் தீர்வாக திணிக்கின்ற முயற்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது.
அவ்வாறு துணை போனால் அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அவ்வாறு அவர்கள் போவார்களே ஆனால் அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
இந்தியாவிற்கு பதின்மூன்றாவது திருத்தம் தேவை என்று சொல்லிச் சொன்னால் 13-வது திருத்தத்தை சமஸ்டி முறமை ஆக்குங்கள்.
பதின் மூன்றாவது திருத்தத்தில் நான்கு வகையான திருத்தங்களை கொண்டு வந்தால் அதனை சமஸ்டியாக மாற்ற முடியும்.
இலங்கை இந்திய அரசியல் யாப்பில் உறுப்புரை இரண்டு சொல்கிறது இலங்கை ஒரு ஒற்றை ஆட்சி அரசு என்று.
இந்த ஒற்றை ஆட்சி அரசு என்பதை மாற்றி விடுங்கள். அதேவேளையில் பாராளுமன்றம் அதன் சட்ட வாக்கத்தை துறத்தலோ பாராயணப்படுத்தலோ ஆகாது என்று அதன் உறுப்புரிமை 76 சொல்கிறது.
ஆகவே அந்த 76 ஐ நீக்குங்கள்.
ஆளுநரிடம் உள்ள அதிகாரங்களை முதலமைசரை கொண்ட அமைச்சரவையில் ஒப்படையுங்கள்.
ஆளுநரை பேரளவில் நிர்வாகி ஆக்குங்கள் .மூன்று அதிகாரப் பட்டியல் இருக்கின்றன.
மூன்று அதிகார பட்டியல் இருக்கிறது. ஒத்தியங்கு பட்டியலை நீக்கிவிட்டு ஒத்தியங்கு பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குங்கள். மாகாண சபை அதிகாரங்களாக மாற்றுங்கள். வடக்கு கிழக்கை இணையுங்கள்.
இந்த திருத்தங்களை செய்தால் 13ஆவது திருத்தத்தை சமஸ்டியாக மாற்ற முடியும்.
அப்படி என்று சொன்னால் நாங்கள் அதனை ஆதரிக்க தயாராக இருக்கின்ற ஒரு சூழலை உருவாக்க முடியும்.
அது இன்றி இப்போது இருக்கின்ற 13 வது திருத்தத்தை ஒரு அரசியல் தீர்வாக திணிக்க முற்பட்டால் ஒருபோதுமே தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின்னுடைய எங்களுடைய நிலையான கருத்தாகும் என்றார் சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் .