இன்றையதினம் மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு மின்சார பட்டியல் வந்தது என்றும் அதன்பின்னர் மின் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கூறினர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த சிவப்பு மின்சார பட்டியலை உள்ளே காண்பிக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற இருவரும் அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டனர். இதன்போது அவ்விடத்திற்கு சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை வெளிறேற்ற முயன்றபோது அவர்மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.